சோயா சங்ஸ் பிரெட் புலாவ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F09%2Fyzuzyz%2Fimages%2Fp62b.jpg&hash=bd8d9ebdc28440d7afd6d395d6ade2ea955065da)
தேவையானவை:
சோயா சங்ஸ் - 50 கிராம், பிரெட் துண்டுகள் - 8, பெரிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 4, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - 100 கிராம், கேரட் - ஒன்று, தக்காளி - 2, பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு, தேங்காய் - அரை மூடி, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா 6, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும் கேரட்டை துருவவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சோயா சங்ஸை கொதி நீரில் போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, ஒட்டப்பிழிந்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி உதிர்த்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, சோயா சங்ஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு வதக்கவும். (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட் துருவல், புதினா, கொத்தமல்லி உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கரம் மசாலாத்தூள், உதிர்த்த பிரெட் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின் நெய்யில், வறுத்த முந்திரி திராட்சை, தேங்காய் துருவல், நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சுடச் சுட சாப்பிட்டால் சுவை இரட்டிப்பாகும். சிறுவர், பெரியவர் என அனைவரும் விரும்பி சாப்பிடும் புலாவ் இது!