FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 17, 2013, 01:13:56 AM
-
மீன் - 300 கிராம்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
லெமன் கிராஸ் - ஒன்று
எலுமிச்சை இலைகள் - 2 (அ) 3
எண்ணெய் - 3 (அ) 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பழுத்த மிளகாய் அல்லது மிளகாய் வற்றல் - 15 (காரத்திற்கேற்ப)
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறு துண்டு
தக்காளி - ஒன்று
சர்க்கரை (சீனி) - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மீனுடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும். (மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. மிளகாய் வற்றல் பயன்படுத்துவதாக இருந்தால் வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் அரைக்கவும்).
வாணலியில் எண்ணெயை சூடாக்கி ஊறவைத்த மீன் துண்டுகளை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் அரைத்த மிளகாய் கலவை, லெமன் கிராஸ், எலுமிச்சை இலைகள் ஆகியவற்றைச் சேர்க்கவும். (லெமன் கிராஸின் தடிமனான அடிப்பகுதியை மட்டும் லேசாக நசுக்கிச் சேர்க்கவும். எலுமிச்சை இலைகளை கையால் கசக்கிச் சேர்க்கவும்).
மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை குறைந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். (மசாலா மிகவும் ட்ரையாவது போல் தோன்றினால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம், காரம் குறைவான மிளகாயை அதிக எண்ணிக்கையில் சேர்த்தால் தேவையான அளவு மசாலா கிடைக்கும்).
அதனுடன் பொரித்த மீன் துண்டுகளைச் சேர்க்கவும். மீன் துண்டுகளுடன் மசாலா சேரும்படி நன்றாக கிளறி மேலும் 3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
சுவையான இந்தோனேஷியன் இக்கான் சம்பால் கோரேங் (Ikan Sambal Goreng) தயார். ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்தோனேஷிய மொழியில் இக்கான் (Ikan) என்றால் மீன். கோரேங் (Goreng) என்றால் பொரிப்பது (ஃப்ரை). சம்பால் என்பது நம் சட்னி எனச் சொல்லலாம். அனைத்து வகையான மீனிலும் இதைச் செய்யலாம். திருக்கை மீனில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
இந்தோனேஷியர்கள் பெலாச்சான் என்னும் ஷ்ரிம்ப் பேஸ்ட் சேர்த்து செய்வார்கள். ஆனால், அதன் ஸ்ட்ராங் ஸ்மெல் நம்மால் சாப்பிட முடியாது. இங்கே மசாலாவின் அளவை அதிகரிக்க கேண்டில் நட் (Candle Nut) என்னும் பொருளைச் சேர்த்து அரைப்பார்கள். உங்கள் பகுதிகளில் கேண்டில் நட் கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம்.