FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 06, 2013, 05:18:24 AM

Title: 30 வகை ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:18:24 AM
ஓட்ஸ் ஃப்ளோட்டிங் பால்ஸ்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பால் - அரை லிட்டர், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு (தட்டிக் கொள்ளவும்), ஏலக்காய் - 2, நாட்டு வெல்லம் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற விடவும். நாட்டு வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் உருட்டி வைத்த உருண்டைகளைப் போடவும். அவை வெந்து மேல் எழும்பி மிதக்க ஆரம்பித்துவிடும். இதனை வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் செய்துக் கொள்ளவும். பிறகு அந்த தண்ணீரில் வெல்லம், ஏலக்காய், சுக்கு, தேங்காய் துருவல், உப்பு போட்டு கொதிக்க விட்டு இறக்கி ஆற வைத்து அதில் பாலை ஊற்றவும். ஒரு கிண்ணத்தில் பாதியளவு உருண்டைகளையும், மீதி பால் என விட்டு பரிமாறவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:20:25 AM
ஓட்ஸ் வடை

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3 (வட்டமாக நறுக்க வேண்டும்), மிளகு, சீரகம் - கால் டீஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்) இஞ்சி - சிறிய துண்டு (தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸில் வெந்நீரைத் தெளித்து ஊற வைக்கவும். உளுந்தை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெங்காயம் பச்சைமிளகாய், மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி, ஊற வைத்த ஓட்ஸைக் கலந்து, வடையாகவோ போண்டாவாகவோ சுட்டு எடுக்கவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:20:47 AM
ஓட்ஸ் ஸ்வீட் பட்டர் பன்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பன் - 6, வெண்ணெய், தேங்காய் துருவல், பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற டூட்டி ஃப்ருட்டி - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், செர்ரி பழம் - 4 (பொடியாக நறுக்கவும்).

செய்முறை: ஓட்ஸில் வெந்நீர் தெளித்து இதை 5 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் இதனுடன் ஒரு கப் சர்க்கரை, தேங்காய் துருவல், டூட்டி ஃப்ருட்டி, செர்ரி பழம் கலந்து வைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் அரை கப் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு அரைத்து, இதனுடன் வெண்ணெயைக் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளவும். பன்-ஐக் குறுக்காகக் கீறி அதனுள் ஓட்ஸ் கலவையையும், சர்க்கரை - வெண்ணெய் கலவையையும் வைத்துப் பூசி மூடவும். குறைந்த விலையில் சுவையான ஓட்ஸ் ஸ்வீட் பட்டர் பன் ரெடி!
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:21:14 AM
ஓட்ஸ் கட்லெட்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2, நன்கு வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), கொத்தமல்லி - ஒரு கட்டு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, முட்டை - 1, உப்பு - தேவையான அளவு, ரஸ்க் தூள் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.

செய்முறை: ஓட்ஸில் வெந்நீர் தெளித்து, பத்து நிமிடம் ஊற வைக்கவும். இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, முட்டை, எலுமிச்சம் பழச்சாறு எல்லாம் சேர்த்துக் கலந்து, கெட்டியாக பிசையவும். இந்தக் கலவையை வட்டமாகவோ முக்கோணமாகவோ தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றி சிவக்க வெந்தவுடன் எடுக்கவும். தக்காளி சாஸ¨டன் பரிமாறலாம் இந்த டேஸ்ட்டி கட்லெட்டை!
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:21:37 AM
ஓட்ஸ் சூப்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய மஞ்சள் - சிவப்பு - பச்சை குடமிளகாய் சேர்ந்த கலவை - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பட்டை, பிரியாணி இலை - தலா 1, பால் - 2 கப், ஃப்ரெஷ் கிரீம் - அரை கப், உப்பு - தேவையான அளவு, பூண்டு - 3 பல்.

செய்முறை: ஓட்ஸை கொதிநீரில் பத்து நிமிடம் ஊற வைத்து பிறகு மத்தினால் மசித்துக் கொள்ளவும். இரண்டு கப் பாலில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, இதில் வெந்த ஓட்ஸைக் கலந்து கொதிக்க விடவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு அதில் பூண்டைத் தட்டிப் போட்டு, பட்டை, பிரியாணி இலை, குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், இதில் வேக வைத்த ஓட்ஸைப் போட்டு கலக்கவும். பரிமாறும்போது மிளகுத்தூள், ஃப்ரெஷ் கிரீம் கலந்து பரிமாறவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:22:06 AM
ஓட்ஸ் பான் கேக்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், ரவை - அரை கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய் - 2, தோல் கருப்பாக மாறிய வாழைப்பழம் - 1, வேர்க்கடலை - கால் கப், முந்திரி - 10, பசும்பால் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு, சமையல் சோடா - சிறிதளவு.

செய்முறை: வேர்க்கடலையைத் தோல் நீக்கி, நெய்யில் வறுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறிய துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இதை ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கி, இதனுடன் ஓட்ஸ், ரவை, வாழைப்பழம், வேர்க்கடலை முந்திரிப்பருப்பு, பால், சமையல் சோடா, ஏலக்காய் கலந்து சிறிது நேரம் ஊற விடவும். தோசைக்கல்லில் வட்டமான கேக்குகளாக ஊற்றி, வெந்ததும் எடுக்கவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:22:45 AM
ஓட்ஸ் கிச்சடி

தேவையானவை: ஓட்ஸ் - இரண்டு கப், பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்ந்த கலவை - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 4, தக்காளி - 4, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 2, கொத்தமல்லி - ஒரு கட்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை கொதி நீரில் 10 நிமிடம் போட்டு வடிகட்டவும். பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முட்டை கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, முட்டைகோஸ் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். இதில் வெந்த காய்கறிகளை சேர்த்து வதக்கி, தேவையான உப்பு சேர்த்து ஓட்ஸைப் போட்டுக் கிளறி இறக்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லியை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறவும்
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:23:09 AM
ஓட்ஸ் குருமா

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பெரிய வெங்காயம், பழுத்த தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 2, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் - ஒரு மூடி, பட்டை, கிராம்பு - தலா 1, ஏலக்காய் - 2, நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சாம்பார் வெங்காயம் - 5, சோம்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி அதனுடன், சாம்பார் வெங்காயம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கி, ஓட்ஸைப் போட்டுக் கிளறவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த மசாலாவைப் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும். காய்கறி இல்லாதபோது செய்யக்கூடிய சூப்பர் குருமா இது.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:23:30 AM
ஓட்ஸ் கீர்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - ஓன்றரை கப், பாதாம், முந்திரிப்பருப்பு - தலா 10, வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏதேனும் ஒரு எசென்ஸ் - ஒரு சொட்டு, கிஸ்மிஸ் பழம் 10.

செய்முறை: முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு தலா 5 எடுத்து தோல் உரித்து பாலில் ஊற வைக்கவும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் மையாக அரைக்கவும். மீதம் உள்ள பாதாம், முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகளாக வெட்டி, நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பாலுடன் ஓட்ஸைக் கலந்து நன்கு குழைய வேக வைக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரையைக் கொட்டி கிளறவும். ஓரளவு கெட்டியான பதத்தில் வந்ததும் இறக்கி வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் பழம், எசென்ஸ் கலந்து ஃபிரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:23:51 AM
ஓட்ஸ் இனிப்பு உண்டை

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், வெல்லம் - அரை கப், பயத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் - ஒரு பெரிய துண்டு, எள் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு சிறிய துண்டு.

செய்முறை: ஓட்ஸை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கி சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வாசம் வரும்வரை வறுக்கவும். சுக்கைத் தூளாக்கிக் கொள்ளவும். எள்ளை வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி விட்டு இளம்பாகு வைக்கவும். இதில் ஒட்ஸ் மாவைப் போட்டுக் கிளறவும். பிறகு இதனுடன் தேங்காய், எள், பயத்தம் பருப்பு, சுக்குத்தூள் போன்றவற்றைப் போட்டு கிளறி, இறக்கி, பொறுக்கக்கூடிய சூட்டில் உள்ளங்கையில் வைத்து சிறிது சிறிதாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:24:14 AM
ஓட்ஸ் மிக்ஸர்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கார்ன் ஃப்ளேக்ஸ், அவல், வேர்க்கடலை - தலா கால் கப், முந்திரிப்பருப்பு - 10, வெள்ளரி விதை - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பூண்டு - 3 பல், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், அவல் மூன்றையும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, அவல் கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெள்ளரி விதை, பொட்டுக்கடலை எல்லாவற்றையும் கலந்து குலுக்கி, பாட்டிலில் போட்டு வைக்கவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:24:39 AM
ஓட்ஸ் சாண்ட்விச்

தேவையானவை: ஓட்ஸ் - அரை கப், புதினா, கொத்தமல்லி - ஒரு கட்டு, பச்சைமிளகாய் - 2, தக்காளி - 2, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - 3, வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப், கேரட் - 1 (பொடியாக துருவவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை பத்து நிமிடம் கொதிநீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். கேரட் வெந்ததும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும். கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும். டோஸ்டு செய்த ப்ரெட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:25:00 AM
ஓட்ஸ் கார உண்டை

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிது, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி, தனியே சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஓட்ஸில் உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் போட்டு, குறைவாகத் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தவும். இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:25:21 AM
ஓட்ஸ் பிரதமன்

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கறுப்பு வெல்லம் - அரை கிலோ, தேங்காய் - 3, ஏலக்காய் - 2, முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் - தலா பத்து, தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஏலக்காயை தட்டிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை தேங்காய் எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி முதலில் வரும் கெட்டிப்பாலைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு வரும் இரண்டாம் பால், மூன்றாம் பாலைத் தனியாக வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சுத்தம் செய்து அதில் மூன்றாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, கிளறிக் கொண்டே இருக்கவும். இது கெட்டியானதும் இரண்டாவதாக எடுத்த பாலை ஊற்றிக் கிளறவும். ஓரளவு கெட்டியாக வந்ததும், ஓட்ஸையும் மூன்றாவதாக எடுத்த பாலையும் ஊற்றிக் கிளறவும். இது தேன் நிறத்துக்கு வரும்போது இதனுடன் முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் கலந்து இறக்கவும்
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 05:58:20 AM
ஓட்ஸ் பிரியாணி

என்னென்ன தேவை?
ஓட்ஸ் - 2 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி - தலா 1 கப்,
பொடியாக நறுக்கிய பீன்ஸ்,
கேரட், முட்டைகோஸ்,
பச்சை பட்டாணி சேர்த்த கலவை - 1 கப்,
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
பட்டை, ஏலக்காய்,
கிராம்பு - தலா 2, நெய்,
எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - சிறிது,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது,
எலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப,
முந்திரி - 6, உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
ஓட்ஸை வெறும் கடாயில் லேசாக வறுக்கவும். பிறகு கொதிக்கும் தண்ணீரில் போட்டு, உடனே வடிகட்டவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் காய்கறிக் கலவை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறிக் கலவை நன்கு வெந்ததும், வடித்து வைத்துள்ள ஓட்ஸை கொட்டி, மெதுவாகக் கலந்து, கிளறி, இறக்கியதும், எலுமிச்சை சாறு சேர்த்து, கொத்தமல்லித் தழை மற்றும் வறுத்த முந்திரியால் அலங்கரித்துப் பரிமாறவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 06:01:09 AM
ஓட்ஸ் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், வெங்காயம் – 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 06:02:04 AM
பூண்டு ஓட்ஸ்

தேவையானவை: ஓட்ஸ் 2 கரண்டி பூண்டு 4 – 5 பல் உப்பு

செய்முறை: பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது 1 டம்ளர் தண்ணீர் விட்டு 2 நிமிஷங்கள் வரை வைக்கவும். பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும். வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும். வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும் பருகவும். சத்தான கஞ்சி தயார் . மதியம் வரை பசிக்காது. …
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 06:03:00 AM
கோஸ் ஓட்ஸ்

தேவையானவை:

ஓட்ஸ் 2 கரண்டி
துருவின கோஸ் 1 கரண்டி
உப்பு

செய்முறை:

துருவின கோஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 – 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும்.
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.

குறிப்பு: இது போல் காரட் துருவலையும் செயலாம்
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 06:06:21 AM
ஓட்ஸ்  காலிஃப்ளவர் உப்புமா

தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,  பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 06:09:41 AM
ஓட்ஸ் ரவா தோசை oats dhosa



    ஓட்ஸ் - ஒரு கப் 
    அரிசி மாவு– ¼ கப்
    ரவை– ¼ கப்
    தயிர்- ஒரு கப்
    உப்பு-தேவைக்கு






ஓட்ஸ் மற்றும் ரவையை இரண்டு கப்பு தண்ணீர் மற்றும் தயிருடன் சேர்த்து   குறைந்தது 15 முதல் இருபது நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.




ஊறிய ஓட்ஸ் மற்றும் ரவையை  தேவையான அளவு உப்பு சேர்த்து  மிக்ஸ்சியில் ஒரு சுற்றுவிட்டு அரைக்கவும்.







அத்துடன் அரிசி மாவு சிறுக சிறுக சேர்த்து கலக்கவும்.




தோசை மாவு பதத்திற்கு கலக்கி விட்டு  அரை மணி நேரம் ஊறவிடவும்.
பின் தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து இந்த மாவை தோசைக்கு ஊற்றுவது போல் நடுவில் ஊற்றாமல் தோசைக் கல்லை சுற்றி ஊற்றி நடுவில் கொண்டு வர வேண்டும். மாவும் தண்ணீர் போல் இருப்பதால்  தானாக நடுவில் வந்து கூடிவிடும். எண்ணெய் விட்டு வார்த்து திருப்பி போட்டு எடுக்கவும்.




மொறு மொறு ஓட்ஸ் தோசை ரெடி
. இதில் வெங்காயம், சீரகம், கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து கலந்தும் அடை போல் செய்து சாப்பிடலாம்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 06:10:22 AM
ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

 ஸ்ட்ராபெர்ரி - 10-12 வறுத்த ஓட்ஸ் - 1/4 கப் குளிர்ந்த பால் - 1 கப் சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை: முதலில் ஸ்ட்ராபெர்ரியை கழுவி, இலையை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பிளெண்டர்/மிக்ஸியில் வறுத்த ஓட்ஸ், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, 1-2 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சூப்பரான ஸ்ட்ராபெர்ரி ஓட்ஸ் மில்க் ஷேக் ரெடி!!!

Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 06:12:00 AM
ஓட்ஸ் பெப்பர் கோழிக்கறி மசாலா

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/2 கிலோ
ஓட்ஸ் - 100 கிராம்
மிளகுதூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 11/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1128.photobucket.com%2Falbums%2Fm493%2Fkanmanii03%2FOATS_zpsec954066.jpg&hash=ecbd4ebfbe05cac2be1fda736d4c829e8ea75dcc)
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 09:04:33 AM

ஓட்ஸ் புட்டிங் (மைக்ரோவேவ் சமையல்)

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
தண்ணீர் 1 கப்
சர்க்கரை 1/4 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Food colour 1/2 டீஸ்பூன் (lemon yellow)

செய்முறை:

ஓட்ஸை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ரவை போல உடைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு microwave bowl யை எடுத்துக்கொண்டு வறுத்த ஓட்ஸ் ரவையுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு
மூன்று நிமிடம் microwave "High" ல் வைக்கவேண்டும்.

வெளியே எடுத்து சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி மீண்டும் மூன்று நிமிடம்
microwave "High" வைக்கவேண்டும்.

Food colour யை சிறிது பாலில் கலந்து சேர்க்கவேண்டும்.

கடைசியாக முந்திரிபருப்பை வறுத்து ஏலக்காய் தூளோடு போடவேண்டும்
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 09:08:32 AM
ஓட்ஸ் தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 50 கிராம்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பால்- 4 டேபிள்ஸ்பூன்
சீனி - 4 - 5 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
கிஸ்மிஸ் -10
ஏலப்பொடி - 1 பின்ச்



கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி,கிஸ்மிஸ் போட்டு இளஞ்சிவப்பாக வறுக்கவும்.


அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் மணம் வர வதக்கவும்.

பின்பு ஓட்ஸ் சேர்த்து வதக்கவும்.லேசாக வறுத்த மணம் வரும்.

உடன் பால் 3 டேபிள்ஸ்பூன் விட்டு கிளறவும், பின்பு சீனி சேர்க்கவும்.

சீனி இலகி இருகும் வரை பிரட்டவும்.ஏலப்பொடி சேர்க்கவும்.ஒரு போல் பிரட்டி விடவும்.

தட்டில் வைத்து ஆறவைக்கவும்.


லேசான சூட்டில் லட்டாக பிடிக்கவும். சிறிய எலுமிச்சை அளவில் 10 லட்டு உருண்டை வரும்.இதனை ரொம்ப சிம்பிளாக ஈசியாக செய்து விடலாம்.ருசியும் அபாரம்.

சுவையான சத்தான ஒட்ஸ் தேங்காய் லட்டு ரெடி.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 09:09:48 AM
வெஜ் ஓட்ஸ் கிச்சடி

தேவையான பொருட்கள்;

ஓட்ஸ் - 100 கிராம் அல்லது ஒரு கப்

காய்கறிகள் --ஒருகப் (கேரட்,பீஸ்,பீன்ஸ்,கார்ன்)

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிள்காய் - 1

மல்லி,புதினா -சிறிது

பிரியாணி இலை-1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா- கால் ஸ்பூன்

மிள்காய்த்தூள் - கால்ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்.

செய்முறை:

ஓட்ஸை ஒரு பவுலில் எடுத்து தண்ணீர் விட்டு அலசி வடித்து வைக்கவும். காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.

ஒரு பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரம்மசாலா,மிளகாய் போட்டு வதக்கவும்.



பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி,காய்கறிகள் சேர்த்து வதக்கவும்,உப்பு,மஞ்சள் தூள்,மிள்காய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து மூடி போடவும்.
சிறிது நேரத்தில் காய்கறிகள் வெந்து விடும்.


அதனுடன் ரெடியாக உள்ள ஓட்ஸ் சேர்த்து கிளறவும். ஓட்ஸ் தண்ணீரில் ஊறி இருப்பதால் விரைவில் வெந்து விடும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.



அருமையாக கிச்சடி திரண்டு வரும்,ஒரு ஸ்பூன் மணத்திற்கு நெய் விட்டு கிளரி இறக்கவும்.சிறிது நறுக்கிய மல்லி புதினா இலை தூவி ஒரு பிரட்டு பிரட்டவும்.



சுவையான வெஜ் ஓட்ஸ் கிச்சடி ரெடி.இது காலை,மாலை நேர டிஃபனுக்கு அருமையாக இருக்கும்.ஸ்பூன் போட்டு சுடச்சுட பரிமாறவும்.ஒட்ஸ் உணவு விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.விரும்பிய காய்கள் சேர்த்து செய்யலாம்.விரும்பினால் எண்ணெய் சிறிது கூட்டிக்கொள்ளலாம்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 09:11:43 AM
ஓட்ஸ் சப்பாத்தி

தேவையான பொருட்கள்

பொடித்த ஓட்ஸ் - 1 கப்
கோதுமை மாவு - 3 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு


செய்முறை...

• ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்,
 
• பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, உப்பு, தண்ணீர், 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
 
• பிறகு சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 09:25:45 AM

ஓட்ஸ் பாரிட்ஜ்

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ், ஒரு கைபிடியளவு, பால் - ஒரு கப்
ஜீனி    - சுவைக்கேற்ப

செய்முறை:
 ஓட்ஸை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொண்டு அடுப்பில் 5 நிமிடம் வைத்து பின்பு கொதி வந்ததும் பாலை (காய்ச்சிய சூடான பால்) ஊற்றி இறக்கவும் தேவையான அளவு ஜீனி சேர்த்தால் ஓட்ஸ் பாரிட்ஜ் தயார் காலை உணவிற்கு பதிலாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 09:26:23 AM
வெஜிடபிள் ஓட்ஸ் புலாவ்

தேவையானவை:

ஓட்ஸ் (வறுத்தது) - 1 கப்
பாஸ்மதி அரிசி - 1 கப்
கேரட், பீன்ஸ் (நறுக்கியது) - 1/2 கப்
பட்டாணி - சிறிது
வெங்காயம் (சிறியது) - 1
பூண்டு (அரைத்தது) - 2 ஸ்பூன்
பட்டை,சோம்பு,கிராம்பு - சிறிது
முந்திரி - தேவைகேற்ப
பச்சை மிளகாய் - 4
நெய்,உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து சரியான அளவு தண்ணீரில் வடித்து எடுக்கவும்.

வாணலியில் நெய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றை வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறும்போது அதோடு பச்சை மிளகாய், பூண்டு விழுது, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்கு வதங்கியதும் பாஸ்மதி அரிசியை சேர்த்து தண்ணீர் விட்டி வேகவைக்கவும்.
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 09:27:26 AM
ஓட்ஸ், கொள்ளு , பார்லி குழிப்பணியாரம்     

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1128.photobucket.com%2Falbums%2Fm493%2Fkanmanii03%2Foats3_zps353e469f.jpg&hash=5e211e6339d8c2cc508a4fed0e077f3b890a6f8a)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1128.photobucket.com%2Falbums%2Fm493%2Fkanmanii03%2Foats33_zps55610e7b.jpg&hash=c8380192824f019d37b3a27b69a186d5013eec56)
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 09:35:20 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1128.photobucket.com%2Falbums%2Fm493%2Fkanmanii03%2Foats1_zps0ec5a165.jpg&hash=c37d28b50ccb1da44a8b5cf146d78c1796763e68)
Title: Re: ஓட்ஸ் உணவுகள் !
Post by: kanmani on September 06, 2013, 09:37:30 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1128.photobucket.com%2Falbums%2Fm493%2Fkanmanii03%2Fosts2_zpsa15d6a7a.jpg&hash=4dbcb13f9047ce8dad80c1254ff3098eb731de85)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1128.photobucket.com%2Falbums%2Fm493%2Fkanmanii03%2Foats2_zps870190e3.jpg&hash=6aee5d487f08c7550c1d43f6318ea863181c4a52)