FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on September 06, 2013, 04:45:07 AM

Title: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:45:07 AM
ராகி அதிரசம்

தேவையானவை: ராகி மாவு - இரண்டரை கப், உருண்டை வெல்லம் - 2 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உருண்டை வெல்லத்தை மெழுகு பதத்தில் பாகு காய்ச்சி ராகி மாவில் ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மாவு இளஞ்சூடாக இருக்கும் போது 2 கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு ஆறியதும் அதிரசங்களாக தட்டி எண்ணெயில் பொரித்-தெடுக்கவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:46:48 AM
ராகி லட்டு

தேவையானவை:

வறுத்த ராகி மாவு - ஒரு கப், சர்க்கரைத்தூள் - ஒண்ணேகால் கப், நெய் - கால் கப்புக்கும் சிறிது குறைவாக, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி - தேவையான அளவு.

செய்முறை:

வறுத்த ராகி மாவு, சர்க்கரைத்தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். முந்திரிக்கு பதிலாக வறுத்து உடைத்த வேர்க்கடலையையும் சேர்க்கலாம்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:47:22 AM
ராகி கார கொழுக்கட்டை

தேவையானவை:

ராகி மாவு - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், துருவிய கேரட் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

ராகி மாவை இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் உப்பு போட்டு, வறுத்த மாவில் சேர்த்து வைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மாவை கிளறவும். கொழுக்கட்டைகளாக பிடித்து துணி போட்ட இட்லி தட்டில் வேக வைக்கவும். ராகி மாவை வாசனை வரும்வரை வறுக்கத் தேவையில்லை. லேசாக வறுத்தாலே போதும். இப்படி வறுப்பது மாவின் கொழ கொழப்புத்தன்மையை போக்குவதற்குத்தான்!.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:47:53 AM
ராகி இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: ராகி மாவு - 2 கப், வெல்லம் (அ) கருப்பட்டி - ஒரு கப், தேங்காய் - ஒரு மூடி, பயத்தம்பருப்பு - அரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

பயத்தம்பருப்பை லேசாக வறுத்து நெத்துப்பதமாக (குழைய விடாமல், தொட்டால் உடைகிற பதம்) வேக வைத்துக் கொள்ளவும். ராகிமாவை இளஞ்சூடாக வறுத்து துருவிய தேங்காய், பயத்தம்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்க வும். வெல்லம் (அ) கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டவும். அதை மீண்டும் கொதிக்க வைத்து மாவு கலவையில் ஊற்றி கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் துணி போட்டு வேக வைக்கவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:48:29 AM
ராகி வெஜ் அடை

தேவையானவை:

ராகி மாவு - ஒரு கப், மாவாக்கிய கோதுமை ரவை (அ) கோதுமை மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு (விருப்பப்பட்டால்) - கால் கப், காய்கறி கலவை - ஒரு கப் (துருவிய கேரட், வெங்காயம், கோஸ், முள்ளங்கி), சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

எல்லா பொருட் களையும் ஒன்று சேர்த்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வாழை இலை (அ) பாலித்தீன் ஷீட்டில் எண்ணெய் தடவி கனமான அடைகளாகத் தட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:49:48 AM
ராகி முருங்கை அடை

தேவையானவை: ராகி மாவு - 2 கப், முருங்கை கீரை - அரை கப், பச்சரிசி மாவு - கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், உப்பு - தேவையான அளவு. தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, வெங்காயம், முருங்கை இலை சேர்த்து வதக்கவும். பத்து நிமிடம் வதங்கியதும், ராகி மாவு, அரிசி மாவில் கொட்டி இளஞ்சூடான தண்ணீரை ஊற்றிப் பிசைந்து, தோசைக் கல்லில் கனமான அடைகளாக தட்டவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:50:15 AM
ராகி புட்டு தேவையானவை:

வறுத்த ராகி மாவு - ஒரு கப், அச்சு வெல்லம் - அரை கப், துருவிய தேங்காய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை:

உப்பு கலந்த தண்ணீரை மாவில் சிறிது சிறிதாக தெளித்து புட்டுக்கு பிசைந்து கொள்ளவும். பதினைந்து நிமிடம் கழித்து மிக்ஸியில் போட்டு சுற்றவும் (அப்போதுதான் கட்டி இருக்காது). இந்த மாவை இட்லி தட்டில் துணி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும். வெந்த மாவில் துருவிய வெல்லம் அல்லது வெல்லப்பாகு (தேன் பதத்தில்), துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும். வெல்லத்தைப் பாகாக செய்து சேர்த்தால் புட்டு தொண்டையை அடைக்காது.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:50:45 AM
ராகி இடியாப்பம்

தேவையானவை: ராகி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: ராகி மாவை இட்லி தட்டில் துணி போட்டு வேக வைக்கவும். மாவில் தண்ணீர் தெளிக்க வேண்டாம். வெந்த மாவை ஆற வைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெந்த ராகி மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்தில் கிளறவும். சூடாக இருக்கும்போதே இடியாப்பங்களாக பிழியவும். ஒன்றின் மேல் ஒன்று பிழியாமல் பரவலாக பிழிந்தால் கொழகொழப்பு இருக்காது. வெல்லம் சேர்ந்த தேங்காய்ப் பாலுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ராகி மாவுடன் அரிசி இடியாப்ப மாவை சம அளவு கலந்தும் செய்யலாம்
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:51:31 AM
ராகி சேவை

தேவையானவை: உதிர்த்த ராகி இடியாப்பம் - 2 கப், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - அரை கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, உதிர்த்த இடியாப்பத்தை போட்டுக் கிளறவும். கறிவேப்பிலை தூவி பரிமாறவும். -
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:51:56 AM
ராகி வற்றல்

தேவையானவை: ராகி மாவு - 2 கப், கல் உப்பு - தேவை யான அளவு, பச்சைமிளகாய் விழுது - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, உப்பு, பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்க்கவும். இந்த தண்ணீரை ராகி மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்துக்கு கிளறி, ஓமப்பொடி அச்சில் போட்டு சிறு முறுக்குகளாக பிழியவும். வெயிலில் நன்கு உலர்த்தி, டப்பாவில் பத்திரப்படுத்தவும். தேவையானபோது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:52:24 AM
ராகி பால் அல்வா

தேவையானவை: முழு கேழ்வரகு - கால் கிலோ, நெய் - கால் கிலோ, சர்க்கரை - அரை கிலோ, முந்திரி - 50 கிராம், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகை முதல்நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலை கிரைண்டரில் அரைத்து 4 முறை பால் எடுக்கவும். இந்த கேழ்வரகு பாலை 4 மணி நேரம் வைத்திருந்தால் தெளிந்து விடும். மேலே நீர்த்திருக்கும் நீரை கொட்டி விடவும். கடாயில் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி, ஜீரா பதத்தில் (சர்க்கரை தண்ணீரில் கரைந்ததும் ஏற் படும் பதம்) காய்ச்சவும். இதில் தெளிந்த கேழ்வரகு பால், நெய் ஊற்றி கிளறி அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த் தூள், ஜாதிக்காய்த்தூள், முந்திரி தூவி இறக்கவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:52:53 AM
ராகி மாவு அல்வா

 தேவையானவை: ராகி மாவு, வெல்லம், தேங்காய்ப் பால் - தலா 2 கப், தண்ணீர் - ஒரு கப், நெய் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய்ப் பாலில் தண்ணீர், வெல்லம், ராகி மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். நெய் ஊற்றி அல்வா பதம் வரும் வரை கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இந்த அல்வாவில் தேங்காய்ப் பால் சேர்த்திருப்பதால் 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:53:21 AM
ராகி ரெடிமேட் தோசை

தேவையானவை: ராகி மாவு - 2 கப், பச்சரிசி மாவு - ஒரு கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையான அளவு, நறுக்கிய வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாக தண்ணீரில் கரைத்து ரவா தோசை போல் ஊற்றவும். ஊற வைக்க வேண்டியதில்லை. உடனே செய்யலாம்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:53:44 AM
ராகி ஸ்பான்ஜ் தோசை

தேவையானவை: ராகி மாவு - 2 கப், உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுந்தையும் வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைக்கவும். இதில் ராகி மாவு, உப்பு போட்டு கரைத்து மறுநாள் கனமான தோசைகளாக வார்க்கவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:54:09 AM
ராகி சப்பாத்தி

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், கோதுமை மாவு - கால் கப், தண்ணீர் - 1 (அ) ஒண்ணேகால் கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தளதளவென கொதிக்கும்போது எண்ணெய், ராகி மாவு சேர்த்து கட்டியில்லாமல் ஐந்து நிமிடம் கிளறவும். பிறகு கோதுமை மாவை சேர்த்து ஆறியவுடன் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் சுடவும். அடுப்பில் வைத்து கிளறாமல் சாதாரண சப்பாத்தி செய்யும் முறையிலும் எல்லாவற்-றையும் சேர்த்து, பிசைந்து செய்யலாம்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:54:31 AM
ராகி பணியாரம்

தேவையானவை: ராகி மாவு, ரவை, சர்க்கரை, பால் - தலா ஒரு கப், சோடா உப்பு - கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாலில் ராகி மாவு, ரவை, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு மணி நேரம் வைக்கவும் (விரும்புகிறவர்கள் துருவிய தேங்காய் சேர்க்கலாம்). பிறகு அப்பக்குழியில் நல்லெண் ணெய் ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:54:55 AM
சத்துமாவு உருண்டை

தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், துருவிய வெல்லம் - அரை கப்புக்கும் சற்று குறைவாக, தேங்காய் - ஒரு மூடி, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முழு கேழ்வரகை 48 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி ஒரு மூட்டையாக கட்டி வைத்தால் மறுநாள் காலை முளைவிட்டிருக்கும். (ஊறும்போது அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும்). முளைவிட்ட ராகியை வறுத்து, மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை ஒரு வாய் அகன்ற பேசினில் கொட்டி நடுவில் ஒரு குழி போட்டு, சுடுதண்ணீர், துருவிய வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் போட்டு கிளறி உருண்டைகளாக பிடிக்கவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:55:25 AM
ராகி சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, துருவிய தேங்காய் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: முளைவிட்ட ராகியை இட்லி தட்டில் பரப்பி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் வேக வைத்த ராகி, தேங்காய் துருவல், கறிவேப்பிலையை சேர்த்து, கிளறி இறக்கவும். தேங்காய் துருவலை தவிர்க்க நினைப்பவர்கள் வறுத்த நிலக்-கடலையை கரகரப்பாக அரைத்தும் சேர்க்கலாம்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:55:54 AM
ராகி சாலட்

தேவையானவை: முளைகட்டிய ராகி - ஒரு கப், துருவிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் - தேவைக்கேற்ப, மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை - சிறிதளவு, எலுமிச்சை சாறு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும். எல்லா சத்துக்களும் நிறைந்த அற்புதமான டிஷ் இது.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:56:20 AM
ராகி பழ அப்பம்

தேவையானவை: ராகி மாவு, மைதா மாவு - தலா அரை கப், கனிந்த வாழைப்பழம் - 2, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும். அதனுடன் மைதா மாவு, ராகி மாவு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கையால் கரைக்கவும். அப்பக்குழியில் எண்ணெய் ஊற்றி, அப்பமாக சுடவும். குறைந்த தீயில் செய்யவும். இல்லையெனில் கருகிவிடும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:56:47 AM
ராகி வடை

தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், ராகி மாவு - கால் கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து பாதி தோல் மட்டும் போகும்படி கழுவவும். கழுவிய உளுந்தை கரகரப்பாக அரைத்து அதனுடன் ராகி மாவு, உடைத்த மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி, கறிவேப்பிலை கலந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:57:11 AM
ராகி பக்கோடா

 தேவையானவை: ராகி மாவு, மஞ்சள் சோள மாவு - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, இஞ்சி - ஒரு அங்குல துண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்-பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ராகி, சோள மாவுகளுடன் சேர்க்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து பக்கோடாவாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சோள மாவுக்கு பதில் கடலை மாவும் சேர்க்கலாம்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:57:37 AM
ராகி கீர்

தேவையானவை: முழு கேழ்வரகு - அரை கப், தண்ணீர் - கால் கப், பால் - முக்கால் கப், பால் பவுடர் (அ) மில்க்மெய்ட் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - தேவைக்கேற்ப, முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை: முழு கேழ்வரகை வெறும் கடாயில் வறுத்து, ரவை போல உடைத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். இப்போது இதில் உடைத்த ராகியைப் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பால் பவுடர், முந்திரி சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:58:10 AM
ராகி கூழ்

தேவையானவை: முழு கேழ்வரகு - 5 கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முழு கேழ்வரகை முதல் நாள் சுத்தமாக கழுவி ஊற வைக்கவும். மறுநாள் நன்றாக அரைத்து 4 முறை பால் எடுக்கவும். எடுத்த பாலின் அளவைவிட மூன்று முதல் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி தனியே வைக்கவும். ஏழு (அ) எட்டு மணி நேரம் கழித்து மேலே தெளிந்திருக்கும் நீரை கொட்டி விடவும். அடியில் வண்டலாக படிந்திருக்கும் பாலை ஒரு துணியில் கட்டி தொங்க விடவும். அடுத்த நாள் துணியைப் பிரித்துப் பார்த்தால் ராகி விழுது படிந்திருக்கும். இதை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பவுடராக்கி வைத்துக் கொள்ளவும். கூழ் தேவைப்படும்போது, தேவையான அளவு இந்த மாவை எடுத்து உப்பு, தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி கொடுக்கவும். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பருவத்தில் இதைக் கொடுக்கலாம்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:58:39 AM
ராகி மோர் கூழ்

தேவையானவை: ராகி மாவு - கால் கப், கடைந்த மோர் - கால் கப், தண்ணீர் - முக்கால் கப், உப்பு - தேவையான அளவு, துருவிய கேரட் - 3 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிய வெங்காயம் - சிறிதளவு.

செய்முறை: ராகி மாவை தண்ணீரில் கரைத்து முதல் நாள் இரவே தனியாக வைத்து விடவும். மறுநாள் காலை அதை அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து கூழாகக் காய்ச்சி ஆற வைக்கவும். இத்துடன் மோர், பச்சைமிளகாய், கேரட், சிறிய வெங்காயம், இஞ்சி சேர்த்து சாப்பிடவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:59:06 AM
ராகி முறுக்கு

தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், எள், உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.

செய்முறை: ராகி மாவை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். மாவு சூடாக இருக்கும்போதே இதனு-டன் பச்சரிசி மாவு, கடலை மாவு, எள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை தண்ணீர் விட்டு பிசைந்து (ரொம்ப கடினமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல்), முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, எண்ணெ-யில் பொரித்துக் கொள்ளலாம். ராகி மாவை வேக வைக்காமலும் முறுக்கு செய்யலாம்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:59:29 AM
சத்துமாவு கஞ்சி

தேவையானவை: முளைகட்டிய கேழ்வரகு, முளைகட்டிய பயத்தம்-பருப்பு, முளைகட்டிய கோதுமை, முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை - தலா ஒரு கப், பொட்டுக்கடலை, கோதுமை ரவை தலா -ஒரு கப், புழுங்கல் அரிசி, வேர்க்கடலை, முந்திரி - தலா அரை கப், எள் - கால் கப்.

செய்முறை: எல்லா பொருட்களையும் வெயிலில் காய வைத்து தனித் தனியாக வறுக்கவும். பிறகு ஒன்றாக சேர்த்து அரைத்து தேவையான வெல்லம், பால் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடிக்கவும். இது, குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது இனிப்பு பிடிக்காதவர்கள் வெல்லத்துக்கு பதிலாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம்
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 04:59:54 AM
ராகி பூரி

தேவையானவை: ராகி மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: எல்லா பொருட்களையும் ஒன்று சேர்த்து பூரி மாவுபோல பிசைந்து கனமான பூரிகளாக பொரித்து எடுக்கவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 05:00:20 AM
ராகி போண்டா

தேவையானவை: நறுக்கிய வெங்காயம் - கால் கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. மேல் மாவுக்கு: ராகி மாவு - ஒரு கப், கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு இவற்றை சிறு உருண்டைகளாக செய்து, கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள மேல் மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 05:00:45 AM
ராகி பிஸ்கெட்

தேவையானவை: ராகி மாவு - ஒன்றரை கப், சர்க்கரைத்தூள் - முக்கால் கப், டால்டா (அ) நெய் - அரை கப், முந்திரி - 10, பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை.

செய்முறை: ராகி மாவையும் பேக்கிங் பவுடரையும் மூன்று முறை சலிக்கவும். இதனுடன் டால்டா (அ) நெய், சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசையவும். நறுக்கிய முந்திரியை போட்டு பிஸ்கெட்டுகளாக தட்டவும். கடாயில் மணலை பரப்பி, பத்து நிமிடங்கள் சூடு செய்து, பிறகு ஒரு அலுமினிய தட்டில் பிஸ்கெட்டுகளை வைத்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து மூடி 'பேக்' செய்யவும். 'மைக்ரோவேவ் அவன்'-ல் செய்பவர்கள் 1600 சென்டிகிரேட்டில் 20 நிமிடங்கள் 'பேக்' செய்யவும்.
Title: Re: 30 வகை ராகி சமையல்!
Post by: kanmani on September 06, 2013, 10:18:38 AM
ராகி இட்லி



    ராகி மாவு - நான்கு கப்
    உளுத்தம்பருப்பு - ஒன்றரை கப்
    உப்பு - தேவையான அளவு

 

    உளுத்தம் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
    ராகி மாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவுடன் உப்பு போட்டு கலந்து புளிக்க விடவும்.
    புளித்த மாவை இட்லியாக ஊற்றி வேக வைக்கவும்.

Note:

இந்த இட்லியுடன் தேங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி சுவையாக இருக்கும்.