FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on August 30, 2013, 09:36:18 AM

Title: நிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்?
Post by: kanmani on August 30, 2013, 09:36:18 AM
நூறு நபர்களை சந்திரனில் குடியமர்த்த என்ன செலவாகும்? 15 பில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

ஒரு மனிதன் ஓர் ஆண்டில் சாப்பிடும் உணவின் எடை 450 பவுண்டுகள். 100 பேர்களுக்குத் தேவையான உணவை சந்திரனுக்கு கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்பதால் சந்திரனிலேயே உணவை விளைவித்துக்கொள்ள முடியுமா? முடியும்.

விவசாயம் செய்வதற்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தனிமங்கள் தேவை. இந்த தனிமங்களை ஒருமுறை சந்திரனுக்குக் கொண்டு சென்று விவசாயம் செய்துவிட்டால் போதுமாம். சந்திரனில் குடியிருக்கும் மனிதர்களின் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் அடுத்தடுத்த சாகுபடிகளுக்கு இந்த தனிமங்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்

காற்றடைத்த குடியிருப்புகள்தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்படுமாம். செராமிக் மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சந்திரனில் மின்சக்தி தட்டுப்பாடு இருக்காது போல் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரமும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்க்கையால் பெறப்படும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரனில் கிடைக்கக்கூடிய யுரேனியத்திலிருந்து அணுமின்சக்தி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.

இவ்வளவு வசதிகள் இருந்தும் சந்திரனில் மனிதன் குடியேற இன்னும் என்ன தடை?

முதல் குடியிருப்பை தொடங்குவதில்தான் தடை.

சந்திரனுக்கு போகும் மனிதனின் எடை 200 பவுண்டுகள்.

முதன்முதலாக உணவிற்காக கொண்டு செல்லப்படும் தனிமங்கள் 500 பவுண்டுகள்.

தங்குமிடமும், கருவிகளும் 1,000 பவுண்டுகள்.

உற்பத்தி செய்யும் கருவிகள் 1,000 பவுண்டுகள்.

ஏறத்தாழ ஆள் ஒன்றுக்கு 3000 பவுண்டு வீதம் 100 பேருக்கு 300,000 பவுண்டு எடை சந்திரனுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு பவுண்டு எடையை சந்திரனுக்கு சுமந்து செல்ல 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஆக, 15 பில்லியன் டாலர் இருந்தால் சந்திரனில் நூறுபேர்கள் கொண்ட ஒரு காலனி அமைப்பதைப் பற்றி சிந்திக்கலாம்.

செலவுக்கணக்கு இத்துடன் முடிந்து விடவில்லை. விண்வெளி நிலையத்தை ஏற்றி இறக்குதல், ஆட்களைத் திரட்டுதல், பயிற்சியளித்தல், நிர்வாகம், விலைவாசி ஏற்றத்தாழ்வுகள், அனாமத்து செலவினங்கள் என்று எல்லா செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பலநூறு பில்லியன் டாலர்கள் செலவழித்தால் தான் சாத்தியப்படும்.

அதனால்தான் தாமதம்.