FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on August 27, 2013, 10:27:11 AM
-
அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
இட்லி மணமாக இருக்க...
காய்ந்து போன கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை இட்லிச் சட்டி நீரில் போட்டு இட்லிவேக வைத்தால் இட்லி மணமாக இருக்கும்.
ஜவ்வரிசி கிளரும்போது...
ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
உப்பில் ஈரக்கசிவா?
சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.
வெங்காய அடை செய்யும் போது...
வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
அரிசி உப்புமா செய்யும்போது...
அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
கீரையை வேகவிடும்போது ...
கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
குழம்பில் தேங்காய் பயன்படுத்தும்போது..
தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
பாகற்காய் கெடாமல் இருக்க...
பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
தயிர் புளிக்காமல் இருக்க...
தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.
எண்ணெய்க் காறலை போக்க...
எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
பூரிக்கு மாவு பிசையும்போது ...
பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
இட்லி மிருதுவாக இருக்க...
இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.
பால் கெடாமல் இருக்க...
பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்
வெண்டைக்காய் சமைக்கும்போது...
வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.