FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on July 30, 2013, 10:03:38 PM
-
ரத்த சோகை என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள mm 3 ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் குறைவாக இருத்தலே ஆகும். சாதாரணமாக ஆண்களுக்கு 5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 15 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும். பெண்களுக்கு 4.5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 14.5 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும்.
ஆனால் நம் நாட்டில் அனைவருக்கும் இப்படி உள்ளதா என்றால், அது முற்றிலும் தவறு. அப்படியானால் நாம் அனைவரும் இரத்த சோகை உள்ளவரா என்று கேள்வி நிச்சயம் எழும்.
நடைமுறையில் ஆண்,பெண் இருபாலருக்கும் சுமாராக 10.5 கிராம் முதல் 12 கிராம் வரை இருந்தாலே இவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குத்தான் இரத்த சோகையினால் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது எனினும் ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இரத்த சோகைக்கான காரணங்கள்:
1. இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைவான உணவுப்பொருட்களை உட்கொள்ளுதல்.
2. உண்ட உணவில் உள்ள சத்து சரியான விகிதத்தில் உறிஞ்சப்படாமையும், மேலும் பயன்படுத்தப்படாமையும் காரணமாக இருக்கலாம்.
3. கிருமிகள் தொற்று (கீரைப்பூச்சி, நாக்குப்பூச்சி, நாடாப்பூச்சி) சிறுநீரின் தொற்று ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.
4, இரத்தப்போக்கு.
அ) பல நாள்பட்ட இரத்தப்போக்கு
1. பெண்களுக்கு மாதந்தோறும் 30 லிருந்து 50 மில்லி என்ற அளவில் இல்லாமல் அதிக அளவில் மாதவிடாய்.
2. மூலத்தினால் மலக்குடலில் இரத்தக்கசிவு (மூலவியாதி).
3. உணவுக் குடலில் இரத்தக்கசிவு (பெப்டிக்அல்சர்,இரத்தக்கசிவு).
ஆ) திடீர் இரத்தப்போக்கு
1. பிரசவத்தின் போது (அ) கருக்கலைதலின் போது ஏற்படும் இரத்தப்போக்கு
2. விபத்தினால் ஏற்படும் இரத்தப்போக்கு
3. அடிக்கடி மகப்பேறு மற்றும் பிறப்பிற்கு பின் குறைவான கால இடைவெளியில்
இரத்த சோகை உடையவரின் தோற்றம்:
பார்ப்பதற்கு அழகாக மஞ்சள் பூத்த முகத்துடனோ, அழகான உப்பிய முகத்துடனோ, வறண்ட மெலிந்த செம்பட்டையான தலைமுடியோடோ, வற்றிய வறண்ட கன்னத்தோடும், குழி விழுந்த கண்களோடும், கருவளையத்தோடும், பட்டாம்பூச்சி போன்ற படர் முகத்தோடும், சோர்ந்தும், நாவில் பல வண்ணமும், பலவித கோலங்களும், வெளுத்தும், படபடக்கும் நெஞ்சத்தோடும் மூச்சிரைப்போடும், மெலிந்த கரத்தோடு, உப்பிய வயிறு, ஊதிய கால்கள், அழகற்ற நொடிந்து போகக்கூடிய வளைவுகள் மிகுந்த குழிவான நகத்தோடு காணப்படுவர்.
ஒரு சிலர் சாதாரணமாகவே நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் இருப்பதும். அதுவே அதிக அளவில் இரத்த சோகை காணப்பட்டால் மூச்சுத் திணறல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. பசியின்மை, சோர்வு, வழக்கமாக செய்யக்கூடிய வேலைகளை செய்ய முடியாத நிலை ஆகியவை ஏற்படும்.
சிறு குழந்தை முதல் பெரியவர் வரை இரத்த சோகையை எப்படி கண்டறிவது என மேற்கூறிய அறிகுறிகளை விட்டுவிட்டு வேறெங்கும் நாம் தேடிச்செல்ல வேண்டிய அவசியமில்லை.
சிறு குழந்தை ஒடிவிளையாடாமல் சோர்ந்த முகத்தோடு சூம்பி அமர்ந்து மற்ற குழந்தைகள் விளையாடுவதை ஏக்கத்தோடு கவனித்து கொண்டிருக்கும். அதிகளவில் தூக்கம், உணவு உட்கொள்ளாமல் சூம்பிய கை கால்களுடன் வயிறு மட்டும் வீங்கிக் காணப்படும். உணவு உட்கொண்ட உடனே மலம் கழிக்க ஓடுகையில் கண்கூடாக பூச்சிகள் வயிற்றிலிருந்து வெளியேறுவதைக் காணலாம்.
அதே சற்று வளர்ந்த குழந்தை படிப்பில் நாட்டமின்மை, எந்த வகையான போட்டியாக இருந்தாலும் தனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒதுங்கிவிடுதல், எளிதில் சோர்ந்து காணப்படுதல்.
வளரிளம் பருவத்தினராகிய பெண்கள் பூப்படைவதில் தாமதம் அல்லது மாதவிடாய்க் கோளாறு, அதுவே ஆண்களாக இருந்தால் துள்ளித்திரியும் இவ்வயதில் சோர்ந்து காணுதல் மேலும் படிப்பிலும், தான் செய்யும் வேலையிலும் ஆர்வமின்றி காணப்படுவர்.
இரத்த சோகை பாதிக்கப்பட்ட மகளிருக்கு பிறக்கும் குழந்தை சவலக்குழந்தையாக, எடைகுறைவாக(3 கிலோவுக்கும் குறைவாக) பலகீனமான குழந்தையாக பிறக்க வாய்ப்புள்ளது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இவர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்பு (மண்டை ஒடு அற்ற நீர்க்குடம் போன்ற முதுகெலும்பில் விண்ணம்) ஏற்பட வாய்ப்புள்ளது.
தாய்மார்களின் இறப்பு 20 விழுக்காடு நேரிடையாகவும், மேலும் 20 விழுக்காடு மறைமுகமாகவும் ஏற்படும் நிலை உள்ளது. இவர்களுக்கு பிறக்கும் குழுந்தைகளின் இறப்பு விகிதமும் கணிசமாக காணப்படுகிறது.
ஆண்களோ தன் உடல்நிலை பாதிப்பால் குடும்பத்தை சரிவர பராமரிக்க இயலாத நிலையும் இதனால் குடும்பத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே படும் பல அவலங்களும் கண்கூடு.
இவற்றை தடுப்பது எப்படி? ஆதலால் 12வயது வரும்போதே நம் இளம் சிறார்கள் 12/12 என்ற விகிதத்தில் அதாவது 12வயது உடையவர் 12 கிராம் ஹீமோகுளோபின் இருப்பதற்கு நம்மால் ஆவன செய்ய வேண்டும். முதலில் நம் நாட்டில் உள்ள எளிமையான, உன்னதமான உணவை உட்கொண்டாலே போதும்.
அதற்கு சத்தான உணவு உட்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
என்ன உணவு?
இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12
போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி. கால்சியம் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள்
தானிய வகைகள்: கேழ்வரகு, கொள்ளு, சாமை, பொட்டுக் கடலை, சோயா பீன்ஸ் மற்றும் பட்டாணி.
கீரை வகைகள்: முருங்கைக்கீரை, புளிச்சக்கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, மற்றும் மணத்தக்காளி கீரை.
காய் வகைகள்: பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ்.
கனி வகைகள்: பேரீட்சை, உலர்ந்த திராட்சை, சீத்தாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளை, தர்பூசணி, வெல்லம்.
அசைவ உணவு: ஈரல், இறைச்சி, முட்டை, மீன், இறால்.
இரும்பு பாத்திரங்களில் சமைத்தல் என்பது மிக முக்கியமானதாகும். மேலும், மலம் கழிக்கும் முன்னும், பின்னும் கை கழுவுதல், எங்கும் செருப்பு அணிந்து செல்லுதல் என்பதும் முக்கியமானதாகும். மேற்கூறியவை அனைத்தும் இரத்த சோகை வராமல் தடுக்க நாம் பின்பற்ற வேண்டும்.இரத்த சோகையின் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஹீமோகுளோபின் அளவு மற்றும் இரத்த சோகைக்கான காரணங்களை கண்டறிந்து இரத்த சோகையின் வீரியத்திற்கு தகுந்தாற்போல் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
மிதமான இரத்த சோகை இரும்புச் சத்து மாத்திரைகள், போலிக் அமிலம், கால்சியம் மற்றும் சத்தான உணவுஅதிகமான இரத்த சோகை ஊசி மூலம் இரும்புச் சத்து செலுத்துதல், இரும்புச் சத்து மாத்திரைகள், சத்தான உணவுமிக அதிகமான இரத்த சோகை தீவிர தொடர் கவனிப்பு பகுதியில் சேர்க்கப்பட்டு இரத்தம் ஏற்றுதல் அல்லது சமமான மாற்று சிகிச்சை மேற்கூறியபடி செயல்பட்டு இரத்த சோகையற்ற திடமான,வளமான, இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
இரத்த சோகைக்கு தீர்வு என்ன?
எந்தக் காரியத்தையும் உங்களால் ஒழுங்காக ஒருங்கிணைக்க முடியவில்லையா?
சோம்பலாக இருக்கிறீர்களா?
காலை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாமல் ஆட்டிக்கொண்டே இருக்கிறீர்களா?
உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம். உடனடியாக மருத்துவரைச் சந்தியுங்கள்.
ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புச்சத்து இருக்கும். இதுதான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது.
இன்று இந்தியாவில் 64 சதவிகித பெண் குழந்தைகள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவுகள் இன்றி வளர்கின்றனர். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது அவர்கள் போதிய சத்தின்றி உடல்நலம் குன்றி காணப்படுகின்றனர். இதனால் அவர்கள் பூப்பெய்தியவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
இரும்பு சத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சோர்வடைந்துவிடுகிறது. மேலும் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.
ஒரு வீட்டில் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த வீட்டில் அனைவரும் நலமாக இருக்க முடியும். ஆனால், பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்து சாகடித்தனர். அப்படியும், தப்பிய பெண் குழந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்காமல் அவளை உடலாலும் உள்ளத்தாலும், பாதிப்படையச் செய்தனர். அந்த பெண் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக் கூடியவள் என்பதை அனைவருமே மறந்தனர். அந்நேரத்தில் பெண்களே பெண் குழந்தைகளுக்கு எதிராக இருந்தனர். தானும் ஒரு பெண்தான் என்பதை மறந்து பெண் பிள்ளைகளை சுமையாக நினைத்தனர்.
இன்று இந்தியாவில் ஆண் பெண் விகிதாசாரம் 1000 ஆண்களுக்கு 971 பெண்கள் தான் உள்ளனர். இன்னும் சில மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
கல்வியில் முதலிடம் பெறும் கேரளாவில் மட்டும்தான் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.
உணவுப் பற்றாக்குறை காரணமாக வளரும் நாடுகளில் இருப்பவர்கள்தான் இந்தக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்பவர்களும் பாதிக்கப்படவே செய்கிறார்கள். ரத்த சோகைக்கான காரணம் ரத்தசோகை ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அவை:
இரத்த சோகை ஏற்பட காரணங்கள் :
இரத்த சிவப்பணுக்களின் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் இரத்தச் சோகை உண்டாகும்.
வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்தச் சோகை உண்டாகும்.
இரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் இரத்தச் சோகை ஏற்படும்.
இரத்தம்அதிகம் வெளியேறுவதால்
இரத்தம் மாசுபடுதல்
வயிற்றில் அல்சர்
வயிற்றில் கட்டி
வயிற்றில் வீக்கம்
வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்று நோய் காரணமாக சில சமயம் தொடர்ந்து ரத்தம் உள்ளே கசியும்.
வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், அவை காலப்போக்கில் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம்.
குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு போன்ற காரணங்களால் இரத்தச் சோகை பெண்களுக்கு ஏற்படுகிறது.
மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம் இழப்பதால், கை, கால், மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது. மேலும், மலத்தையும், சிறுநீரையும் பெண் குழந்தைகள் அடக்குவதால் மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்பாகிறது. இதனால் ஈரல் பாதிக்கப் பட்டு பித்தம் அதிகரித்து ரத்தத்தில் கலந்து உடலை நோய் எதிர்ப்பு சக்தியின்றி ஆக்குகிறது.
இரத்தச் சோகையின் அறிகுறிகள்
மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.
சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு.
உணவு செரிமானமாகாமல் இருத்தல்.
உடல் வெளுத்துக் காணப்படல்
முகத்தில் வீக்கம் உண்டாதல்
நகங்களில் குழி விழுதல்.
குழந்தைகளுக்கு கண்குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல்
உடல் நலம் சரியில்லாதது போன்ற உணர்வு
மூச்சுவிடுவதில் சிரமம்.
இதயம் வேகமாகத் துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது.
குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை
இதெல்லாம் போக, தலைவலி, நாக்கு உலர்ந்து போவது, சுவையுணர்வு பாதிக்கப்படுவது, முழுங்கச் சிரமமாக இருப்பது, உடல் வெளுத்துப் போவது, நகம் உதிர்வது, வாயின் ஓரங்களில் புண் ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, கை கால்களில் வீக்கம், வாந்தி போன்ற அறிகுறிகளும் சிலருக்கு அரிதாக ஏற்படும்.
சாதாரணமாக, ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். அதற்குப் பிறது சிதைந்துவிடும். ஆனால் நடக்கும்போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்படி எலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியாவிட்டால், ஹீமோலிசிஸ் என்ற ரத்தசோகை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய்த்தொற்று, சில மருந்துகள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றால் ஹீமோலிசிஸ் ஏற்படலாம். ரத்தசோகையின் அறிகுறிகள்.
ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோர்வும் சோம்பலும் ஏற்படும். சோர்வு என்பது உடல் ரீதியானது. சோம்பல் என்பது மன ரீதியானது. ஒருவர் உடல்ரீதியாக சோர்வாக இருந்தால் அவரது மன நலன் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இவை போக மேலும் சில அறிகுறிகள் இருக்கின்றன.
பரிசோதனை
ரத்தசோகை இருப்பது சாதாரண ரத்தப் பரிசோதனையின் மூலமே தெரிந்துவிடும். ஒருவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகத் தெரிந்தால், அவருக்கு ரத்தசோகை இருப்பதாக அர்த்தம். நோயாளியின் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அவருடைய ரத்த சிவப்பணுக்கள் சிறியதாகவும் வெளுத்துப் போயும் காணப்படும். வைட்டமின் குறைபாடு இருந்தால், அவர்களது ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாகவும் பெரியதாகவும் இருக்கும். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 11 -15 கிராம் ஹீமோ குளோபின் இருக்கும்.
இரத்த சோகையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்:
பிரசவம்: கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்குப் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின்போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்தசோகை நோய் இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும். தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
சோர்வு : ரத்த சோகை நோயாளிகளின் வாழ்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த சோகை தீவிரமாக இருந்தால், வேலை பார்ப்பதே அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தங்களுடைய தினசரி வேலைகளையே அவர்களால் கவனிக்க முடியாமல் போகக்கூடும். இந்த நீண்ட கால சோர்வின் காரணமாக ஒருவர் தீவிர மன அழுத்த நோயாளியாகும் வாய்ப்பும் இருக்கிறது.
நோய்க்குள்ளாகும் வாய்ப்பு :
ஆரோக்கியமானவர்களைவிட, ரத்தசோகையுடன் கூடியவர்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். ரத்தசோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்துச் செல்லப்படும் ஆக்ஸிஜனின் அளவுகுறைவதால், அதிக ஆக்ஸிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இருதயம் செயலிழக்கக்கூடும். ரத்தசோகையின் காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில் உடலில் இருப்பது அவசியம்.
இரத்த சோகைக்கான மருத்துவம்: இரும்புக் குறைபாடு - உடலில் தேவையான அளவு இரும்புச் சத்து இருப்பதை உறுதி செய்வதற்காக இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை யின் பேரில் சாப்பிடலாம்.
உணவுப் பழக்கம்: நோயாளி இரும்புச் சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால், இரும்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.
வலி நிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளாலும் ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தைச் சரி செய்ய வேண்டும். இத்தகைய ரத்தச் சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக் கீரை, அரைக்கீரை, புதினா கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, ரத்தச் சோகை நீங்கும்.
மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை நீங்கும்.