FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Sprite on October 30, 2011, 02:20:51 AM

Title: உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் (Does India concerns on Nuclear Safety?
Post by: Sprite on October 30, 2011, 02:20:51 AM
மின் ஆக்கத்திற்கு அணு விசையைப் பயன்படுத்துவதன் பெயரால் அணு உலைகள் அமைப்பது பற்றிய விவாதம் தொடர்கிறது. இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம், அணு உலை ஆக்கக் குழுமங்களோடு இந்திய அரசின் வணிக பேரம், அணு விபத்து இழப்பீட்டுச் சட்ட முன்வடிவு, மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டம் செய்தாபூரில் புதிய அணு உலை நிறுவ எடுத்து வரும் முயற்சி... இவையாவும் அணுவிசைத் தொடர்பான விவாதத்தை தூண்டித் தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால் இந்திய அரசு தன் அனுவிசைத் திட்டத்தைக் கிஞ்சிற்றும் தளர்த்திக் கொள்ளவில்லை.

உலக அளவிலும், அணுவிசை தொடர்பான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1993ஆம் ஆண்டு அமெரிக்காவில் மூன்று மைல் தீவிலும், 1986இல் சோவியத் நாட்டில் செர்னோபிளிலும் நேரிட்ட கொடிய விபத்துக்கள் அணு உலையின் ஆபத்தைச் சுட்டுவதாய்க் கருதப்பட்டது. இந்த விபத்துக்களுக்குப் பிறகும் இவற்றைக் காட்டிலும் சற்றே குறைந்த அழிவை ஏற்படுத்திய நூற்றுக்கணக்கான பிற விபத்துகளுக்குப் பிறகும் அணுவிசை வழி மின்னாக்கத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன. இவற்றால் மனித உயிர்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து குறித்து விடுக்கப்படும் எச்சரிக்கைகளை அணு உலையாக்கம் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் குழுமங்களோ, அரசுகளோ, இதுவரை பொருட்படுத்தவில்லை. அண்மையில் சப்பானில் நிகழ்ந்த நில நடுக்கமும், அதன் விளைவாக எழுந்த ஆழிப் பேரலையும், அந்நாட்டிற்கு பேரழிவு உண்டாக்கி இருப்பதோடு அணு உலைகள் பல வெடித்துச் சிதறவும் காரணமாயிற்று.

நீர் கொண்டு நெருப்பை அணைப்பதுதான் வாடிக்கை. அங்கே நிலத்தில் பிறந்த சீற்றம் நீருக்குத் தாவி நெருப்பாய்ப் படர்ந்து ஊழிப் பேரழிவை தோற்றுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணு உலைகளால் நேரிடக் கூடிய ஆபத்து பற்றிய விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

சப்பான் நாட்டில் புகுசிமா அணுவிசை நிறுவனத்தில் இதுவரை மூன்று அணு உலைகள் வெடித்துச் சிதறியுள்ளது. மேலும் சில அணு உலைகளும் வெடித்துச் சிதறுகிற அல்லது உருகிக் கலைகிற ஆபத்தில் உள்ளன. இந்த அணுமின் நிறுவனத்தை நடத்தி வரும் டோக்கியோ மின் விசைக் குழுமம் (டெப்கோ) என்ற தனியார் நிறுவனம் அணு உலைகளின் பாதுகாப்புக் குறித்து இதுகாறும் சொல்லி வந்த செய்திகளில் முழு உண்மை இல்லை என்பது இப்போது தெளிவாகிற்று.

புகுசிமா அணுவிசை நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள அணு உலை வெடிப்பினால் பெரும் அணுக் கதிர்வீச்சு தோன்றியுள்ளது. சுமார் நான்கு இலக்கம் மக்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அணு உலை வெடித்ததால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையால் அம்மக்களை கொடுங்குளிர் வாட்டியெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நில நடுக்கத்தாலும், ஆழிப் பேரலையாலும் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பிழைத்து உயிர் வாழ்வோரும் அணுக் கதிர்வீச்சின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஓடி ஒளிய வேண்டிய நிலை!

சப்பானில் மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளிலும் அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை பற்றி தனியார் குழுமங்களும், அரசுகளும் அளித்து வந்த உறுதிகளைப் புகுசிமா அணு உலை வெடிப்பு பொய்யாக்கிவிட்டது. மூன்று மைல் தீவு, செர்னோபிள், இப்போது புகுசிமா... இவையே போதும் அணு உலைகள் இனி நமக்கு தேவையில்லை என்று உலகம் முடிவெடுப்பதற்கு!

புதிய உலைகள் திறப்பதை நிறுத்த வேண்டும். பழைய உலைகளைப் பாதுகாப்பான முறையில் கலைத்து விட வேண்டும். அடுத்த பெருநேர்ச்சிக்காகக் காத்திருக்கத்....... தேவையில்லை.

அறிவியல் தொழில்நுட்பத்தில் வெகுவாக மேம்பட்ட நிலையில் இருக்கும் சப்பானிலும் மேலை நாடுகளிலும் அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்றால் இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் எப்படி பாதுகாப்பானவையாக இருக்க முடியும். அறிவியல் தொழில்நுட்பத்தில் பின் தங்கிய நிலை மட்டுமல்ல, ஊழல் மலிந்த அரசியல் தலைமையின் அதிகார வர்க்கமும் சேர்ந்து அணு உலை ஆபத்தைப் பன்மடங்காக்கி விடுகின்றன.

அண்மையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்பாக அம்பலப்பட்ட ஊழலை மறந்துவிட வேண்டாம். அறிவியலர் அறவியலராகவும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை.

சப்பானில் வெடித்துச் சிதறிய அணு உலைகளின் தொழில்நுட்பம் வேறு. இந்திய அணு உலைகளின் தொழில்நுட்பம் வேறு என்று இந்திய அணு விசைத் துறையினர் சிலர் வாதிடுகின்றனர். சப்பானில் ஏற்பட்ட விபத்துக்கும் அணு உலைத் தொழில் நுட்பத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இவர்கள் மறந்துவிட்டனர். நில நடுக்கத்தாலும ஆழிப் பேரலையாலும் மரபு சார் குளிரூட்டிப் பொறியமைவுகள் செயல் இழந்து, அதனால் அணு உலைகளின் வெப்பம் உயர்ந்ததுதான் அணு உலை வெடிப்புக்குக் காரணமாயிற்று. இதற்கும் அணு உலைத் தொழில்நுட்பத்திற்கும் என்ன தொடர்பு? நில நடுக்கம், ஆழிப் பேரலை போன்ற பேரிடர்கள் சப்பானில்தான் நிகழும் இந்தியாவில் ஒருபோதும் நிகழ மாட்டா என்று உறுதியளிக்க யாரால் முடியும்?

அணு உலை இயக்கம் என்பது அணுப் பிளவு அல்லது அணு விணைவு வழியாக கிடைக்கும் ஆற்றலை மின்விசையாக மாற்றும் தொழில்நுட்பம் தொடர்பானது மட்டுமல்ல. இதில் வேண்டுமானால் சப்பானுக்கும், இந்தியாவுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அணு உலைக் கழிவுகள், அவற்றிலிருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு... இவற்றில் எல்லா நாடுகளும் ஒன்றே! அணுக்கழிவுகளை ஆபத்தில்லாத முறையில் அழித்துத் தீர்வு காண்பதற்கு இதுவரை எந்த நாடும் உருப்படியான வழி காணவில்லை என்பதே உண்மை.

அணு உலைக் கழிவுகளில் இருந்து ஆனாலும், அணு உலை வெடிப்பிலிருந்து ஆனாலும் ஏற்படக் கூடிய கதிர்வீச்சின் ஆபத்து என்பது சப்பான், ருசியா, அமெரிக்கா, இந்தியா எல்லா நாடுகளுக்கும் ஒன்றுதான். இந்தியாவில் மொத்த மின்னாக்கத்தில் இரண்டு விழுக்காடுதான் அணு உலைகளிலிருந்து பெறப்படும் எனப்படுகிறது. தங்களுக்கு வேண்டிய மின்னாற்றலில் ஒரு பங்கை மின் உலைகளிலிருந்து எடுக்கக் கூடிய மேலை நாடுகள் உண்டு. இந்த நாடுகளையெல்லாம் புகுசிமா அணு உலை வெடிப்புகள் விழிக்கச் செய்துள்ளன. சற்றே நின்று இது தேவைதானா என்று எண்ணிப் பார்க்கச் செய்துள்ளன.

உலகிலேயே மிகப் பெரிய அளவில் வணிக முறையில் அணு மின்னாக்கம் செய்யும் அமெரிக்க நாட்டில் அணு உலைகளுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. வெர்மான்ட் என்ற இடத்திலிருக்கும் அணு உலை புகுசிமாவில் வெடித்துச் சிதறிய முதல் உலையை ஒத்ததாகும். அமெரிக்காவில் இதே வகைப்பட்ட தர அணு உலைகள் உள்ளன. வெர்மான்ட் அணு உலையை வடிவமைத்துக் கட்டிக் கொடுத்தது 'செனரல் எலெக்ட்ரிக்' என்னும் பன்னாட்டுக் குழுமம். இப்போது வெர்மான்ட் ஆளுநர் பீட்டர் சம்லின் உட்பட அம்மாநில மக்களில் பெரும்பான்மையினர் அங்குள்ள அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்கிறார்கள்.

சப்பானிய அணு நேர்ச்சி உலக மெங்கும் எதிர்வினைகளைக் கிளறியுள்ளது. அய்ரோப்பா எங்கிலும் கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினராயிருக்கும் பிரெஞ்சுக்காரர் ஈவாசோலி அணுவிசை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் இப்படிச் சொன்னார்: "அணு உலைகளை எப்படித் துறப்பது என்பதை நாம் அறிவோம். நமக்கு புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் தேவை, காற்றாலைகள் தேவை, புவி வெப்ப ஆற்றல் தேவை, சூரிய வெப்ப ஆற்றல் தேவை".

சுவிட்சர்லாந்து அரசு தன் அணு உலைகளுக்கு மறு உரிமம் வழங்கும் திட்டங்களை நிறுத்தியுள்ளது. செர்மானிய நகரம் இசுட்டக்கார்ட்டில் 10,000 மக்கள் திரண்டு அணு உலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் 1980க்கு உட்பட்ட 7 அணு உலைகளை உடனே மூட ஆணையிட்டார்.

அமெரிக்காவில் மசாக்சுசெட்சு நாடாளுமன்ற உறுப்பினர், சனநாயகக் கட்சியைச் சேர்ந்த எடுமார்க்கே கூறினார்: "சப்பானில் இப்போது நிகழ்வதைப் பார்க்கும் போது இங்கும் அணு மின்னாக்க ஆலையில் கொடிய விபத்து நேரிட முடியும் எனத் தெரிகிறது. எதில்தான் விபத்து இல்லை? வான் பயணத்தில் விபத்து நேரிடுவதால் வானூர்திகளே தேவையில்லை என்று சொல்லிவிட முடியுமா? பார்க்கப் போனால் வானூர்தி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் தொகையோடு ஒப்பிட்டால் அணு உலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் தொகை சொற்பமே".

அணு விசைக்குச் சப்பை கட்டுவோரின் மற்றொரு வாதம் இது. அணு உலைகளின் ஆபத்து என்பது விபத்துகளில் உயிரிழப்போர் தொகையோடு முடிந்துவிடக் கூடியதன்று. அணுக் கழிவுகளின் கதிர்வீச்சு ஒரு நிரந்தரச் சிக்கலாய் நீடிப்பதோடு, உலை வெடிப்புகளாலும் நேரிடும் கதிரியக்கத்தின் தீய விளைவுகள் அந்நேரத்தோடும், அவ்விடத்தோடும் முடிந்து போகிறவை அல்ல. வானூர்தி விபத்துகள் போன்ற பிற நேர்ச்சிகளுக்கும் அணு உலை வெடிப்புகளுக்கும் இடையிலான இந்த வேறுபாடு மிக முக்கியமானது.

அணு விசையின் அழிவாற்றல் காலத்திலும் இடத்திலும் நீண்டு விரிந்து செல்வதை மெய்ப்பிக்க எத்தனையோ சான்றுகள் உண்டு. இதே சப்பான் நாட்டில் கிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்க வல்லாதிக்கம் வீசிய அணு குண்டுகள் இலட்சக்கணக்கானவர்களின் உயிரைப் பறித்தன என்பதோடு அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தால் உருச்சிதைந்த குழந்தைகள், உலகமறிந்திராத புதுப்புது நோய்களுக்கு ஆளான ஆண்கள், பெண்கள் ஏராளம், ஏராளம். அணு குண்டுகளின் அதே கொடிய விளைவுகளை இன்னும் கூட பெரிய அளவில் அணு உலை வெடிப்புகளால் ஏற்படுத்த முடியும். உண்மையிலேயே புகுசிமாவின் விளைவு அப்படித்தான் இருக்குமோ என்று உலகம் அஞ்சிக் கொண்டிருக்கிறது.

விபத்து நேரிடும் வாய்ப்பே இல்லாத, முழுக்க முழுக்க பாதுகாப்பான அணு உலை என்பதாக ஒன்று இல்லை, இருக்கவும் முடியாது. அணுக் கொள்கை தொடர்பான ஓர் அமைப்பின் தலைவர் டேனியல் கிர்ட்சு இப்படிக் கூறினார்: "ஆபத்தில்லாத ஒரே அணு உலை நம்மிடமிருந்து ஒன்பது கோடி மைல் தொலைவில் உள்ளது. அதன் பெயர் சூரியன்".

அணு உலைகளின் துணையின்றி நம் மின் தேவையை நிறைவு செய்ய முடியாது என்று தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் போன்றவர்கள் புழுகி வருவதை நம்பிவிடக் கூடாது. நாட்டில் காணப்படும் மின் பற்றாக் குறைக்கான உண்மைக் காரணங்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்பி பன்னாட்டுக் குழுமங்களின் அணு உலை வணிகத்தை வளர்க்கும் உத்தியே இது. அணு மின்னாக்கம் என்பது இக்குழுமங்கள் குறைந்த முதலீட்டில் கொள்ளை இலாபமடிக்க வழி செய்வதை மறந்துவிடக் கூடாது.

இந்திய வல்லாதிக்க அரசைப் பொறுத்தவரை அதன் அணு விசை மோகத்திற்குத் தூபமிடுவது அணு ஆயுத குவிப்பு வெறியே என்பதை மறந்துவிடக் கூடாது. அணு விசைப் பயன்பாட்டில் அமைதி வழியையும் ஆயுத வழியையும் வேறுபடுத்திப் பிரிக்க இயலாது. அமைதி வழி அணுவாற்றல் என்ற ஒன்றே இல்லை. அணு விசை ஆக்கம் என்பது அணு குண்டுகளுக்குத் தரப்படும் ஊக்கமே தவிர வேறல்ல.

இந்திய மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பன்னாட்டுக் குழுமங்களின் சுரண்டல் வேட்டைக்கு இந்திய அரசு துணை போவதைப் போபால் நச்சுவாயு படுகொலை நிகழ்வில் பார்த்தோம். இராசீவ் காந்தி தொடங்கி அத்தனை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கொலைகாரனைப் பாதுகாப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களை வஞ்சிப்பதிலும் முனைந்து செயல்படக் கண்டோம்.

அணுவிசை பாதுகாப்பானது என்று ஆற்றுப்படுத்துகிற இதே அரசுதான், அணு விபத்து இழப்பீட்டு சட்ட முன்வடிவை இயற்ற முன்வந்தது. விபத்துகளுக்கு வாய்ப்பில்லை என்றால் இழப்பீடும், அந்த உச்சவரம்பும் ஏன்? பெரிய இழப்பீடெல்லாம் நாங்கள் தரமுடியாது என்று அணு உலைப் பெருங் குழுமங்கள் நிபந்தனை விதிப்பது ஏன்?

சுருங்கச் சொன்னால் அணு உலைகளோடு வாழ்வது என்பது மடியில் அணுகுண்டைக் கட்டிக்கொண்டு இருப்பதற்கு நிகரானது. உடனே இதற்கு முடிவுகட்டியாக வேண்டும். இந்தியாவெங்கும் இருபது அணு உலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை உடனே இழுத்து மூட வேண்டும். புதிய அணு உலை ஒப்பந்தங்களை கைவிட வேண்டும். இதனால் மின் பற்றாக்குறை ஏற்படுமென்றால் ஏற்படட்டும். இவை இருந்தும் பற்றாக்குறைதான், இல்லாமலும் பற்றாக்குறைதான் என்னும் போது இரண்டாவதே மேல். ஆபத்து இல்லாத வேறு வழியில் இந்த பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்பாக்கம் அணுமின் நிலையம் சென்னைக்கு அருகில் உள்ளது. இப்போது சப்பானில் நேரிட்டது போல் 2004இல் நாம் சந்தித்த அந்த ஆழிப்பேரலை ஒரு கெடு வாய்ப்பாகக் கல்ப்பாக்கம் அணு உலையை பாதித்திருக்குமானால், அதன் விளைவுகளை எண்ணிப் பார்க்கவே நடுக்கமாய் உள்ளது. மக்கள் அடர்ந்து செறிந்து வாழும் சென்னைப் பெருநகரத்தில் அணுக் கதிர்வீச்சு பரவினால் என்ன ஆகும்?

கல்ப்பாக்கம் போதாதென்று கூடங்குளத்திலும் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று வாரத்திற்குள் அங்கே ஆயிரம் மெகாவாட் அணு உலை இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலை கட்டும் பணியும் நிறைவுறும் நிலையில் உள்ளது. கூடங்குளத்தால் ஏற்படக் கூடிய ஆபத்து குறித்து முன்பே தமிழ்த் தேசம் இதழில் (பங்குனி 2007) தோழர் கதிர்நிலவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

உயிருக்கு உலை வைக்கும் அணு உலையை ஒருபோதும் நம் தமிழக மண்ணில் இடம் பெறவிடோம் என்று கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். சப்பானில் நிகழ்ந்திருப்பதை நமக்கு ஒரு கடும் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அணு உலைகளில் இருந்து நம் மண்ணையும், நம் மக்களையும் விடுவிப்பதற்காகப் போராடுவோம். அது உலக மக்கள் நலனுக்கு நாம் செய்யும் தொண்டாக அமையும்.



Title: Re: உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் (Does India concerns on Nuclear Safety?
Post by: Global Angel on October 31, 2011, 03:59:56 AM
ethayum panna veenamnu sonaathan panna thonum namaalungalukku.. so  solli ellam thiruntha maatanga... vera nadavadikaithan edukanum nalla pathivi sprite ;)
Title: Re: உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் (Does India concerns on Nuclear Safety?
Post by: Sprite on October 31, 2011, 11:12:45 PM
patta than thiruthuravaga nama aaluga  ths global
Title: Re: உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் (Does India concerns on Nuclear Safety?
Post by: RemO on November 01, 2011, 08:30:11 PM
ella idathulayum ella thozhilsaalaiyilum aabathu irukku

ipadi aabathunu payanthutu venam nu othukkuratha vida atha inum epadi safe ah use pananum nu yosicha naalarukum