FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on June 25, 2013, 10:33:39 PM
-
எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தாலே, முகம் நன்கு அழகாகக் காணப்படும். அதிலும் உதடுகள் நன்கு ரோஜாப்பூ நிறத்தில் இருந்தால், முகத்தின் அழகு இவ்வளவு தான் என்று சொல்லவே முடியாது. ஆனால் தற்போது நிறைய பேருக்கு உதட்டின நிறமானது கருமையாகவும், பொலிவிழந்தும் காணப்படுகிறது. இத்தகைய உதடுகள் இருந்தால், சிரித்தால் கூட அழகு வெளிப்படாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் உதட்டை அழகுப்படுத்த பயன்படும் அழகுப் பொருட்கள்.
அதுமட்டுமல்லாமல், இன்னும் நிறைய காரணங்கள் உதட்டின் அழகைக் கெடுக்கும் வகையில் உள்ளன. அத்தகைய காரணங்கள் என்னவென்று கீழே பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தவிர்ந்து வந்தால், நிச்சயம் அழகைக் கெடுக்கும் கருமையான உதட்டிலிருந்து விடுபடலாம்.
புகைப்பிடித்தல்
அனைவருக்குமே புகைப்பிடித்தால், உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதோடு, அழகுக்கும் கேடு விளையும் என்பது தெரியும். ஏனெனில் அதில் நிக்கோட்டின் என்னும் உதட்டை கருமையாக்கும் பொருள் உள்ளது. இருப்பினும் பலர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதில்லை. ஆனால் கருமையான உதட்டிலிருந்து விடுதலைக் கிடைக்க வேண்டுமெனில், முதலில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
காப்ஃபைன்
காப்ஃபைன் அதிகம் நிறைந்திருக்கும் பொருட்களான காபி/டீ போன்றவற்றை அடிக்கடி உட்கொண்டால், பற்களில் கறைகள் ஏற்படுவதோடு, பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். அதுமட்டுமல்லாமல், அத்தகைய காப்ஃபைன் உதட்டையும் கருமையாக்கிவிடும். அதிலும் எவ்வளவு முறை காப்ஃபைன் உள்ள பொருட்களை குடிக்கிறோமோ, அதைப் பொறுத்து உதட்டின் நிறமும் கருமையாகும்.
அதிகப்படியான சூரியவெளிச்சம்
நீண்ட நேரம் வெயிலில் சுற்றினால், உதட்டில் உள்ள மெலனின் அளவு அதிகரித்து, உதடானது கருமையாகிவிடும். எனவே வெளியே செல்லும் முன், உதட்டிற்கு புறஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாப்பு தரும் லிப் பாம்களை உதட்டிற்கு தடவி செல்ல வேண்டும்.
உதடு பராமரிப்பு பொருட்கள்
உதடுகளை அழகாக்குவதற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்களை வாங்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விலை குறைவாக உள்ளது என்று கண்ட பொருட்களை உதட்டில் பயன்படுத்தினால், அது உதடுகளைத் தான் கருமையாக்கும். எனவே நல்ல தரமான பொருட்களை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.
நீர் வறட்சி
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், உடலில் மட்டுமின்றி, உதடுகளிலும் வறட்சி ஏற்படும். இவ்வாறு உதடுகளில் வறட்சியானது நீடித்தால், அவை உதடுகளை பொலிவிழக்கச் செய்து, கருமை நிறத்தை அடைய வழிவகுக்கும். எனவே தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியம்.
உதடுகளில் எச்சில் வைத்தல்
உதடுகளில் அடிக்கடி எச்சில் வைத்தாலோ அல்லது உதடுகளை கடித்துக் கொண்டு இருந்தாலோ, அவை உதட்டை கருமையாக்கிவிடும். இதற்கு காரணம், எச்சிலை உதட்டில் வைக்கும் போது, அவை உதடுகளை விரைவில் வறட்சி அடையச் செய்யும். இவ்வாறு உதடுகளானது அடிக்கடி வறட்சி அடைந்தால், அவை விரைவில் கருமையாகிவிடும்.
வைட்டமின் குறைபாடு
உடலில் வைட்டமின் குறைபாடுகள் ஏற்பட்டால், உதடுகள் கருமை நிறத்தை அடையும். எனவே உதடுகளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் உதடுகளின் கருமை நீங்குவது மட்டுமின்றி, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
லிப்ஸ்டிக் அல்லது லிப் க்ளாஸ்
உதடுகளை அழகுப்படுத்தப் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் அல்லது லிப் க்ளாஸ்களில் ஒருசில சாயங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அவ்வாறு சேர்க்கப்பட்டிருப்பதால், சில சமயங்களில் அவை அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே எந்த ஒரு அழகுப் பொருட்களை வாங்கும் முன்பும், அதனை சருமத்தில் தடவி சோதித்து பார்த்து, பின்னரே உதடுகளில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும்.