FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on April 27, 2013, 01:10:35 AM
-
பலாச் சுளைகள் - 10
வெல்லம் - 50 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
பலாச் சுளைகளை பொடியாக நறுக்கவும். (மிக்சியிலிட்டு விப்பரில் ஒரு சுற்று சுற்றியும் எடுக்கலாம்).
நறுக்கிய பலாச் சுளைகளுடன் 2 கரண்டி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வெல்லத்தை பொடித்து கால் கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் (அல்லது நாண் ஸ்டிக் பாத்திரத்தில்) வேக வைத்து லேசாக மசித்த பலாச் சுளைகள், கரைத்து வடிகட்டிய வெல்லம், ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். ஓரளவு சுருண்டு வரும் போது ஏலக்காய் பொடி, மீதமுள்ள நெய் சேர்த்து மேலும் கிளறவும். (விரும்பினால் இப்போது கால் கப் தேங்காய் துருவல் சேர்க்கலாம். தேங்காய் சேர்த்தால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது).
அனைத்தும் சேர்ந்து நன்றாக சுருண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான வல்சியம் தயார்.
இது கேரளாவில் பிரபலமான சக்க வல்சியம் அல்லது சக்க வரட்டியது. நன்றாக சுருள கிளறி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். சக்க பிரதமன் என்னும் பலாப்பழ பாயாசம் செய்ய இதையே எப்போது வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிக அளவில் செய்யும் போது ஒரு கிலோ பலாச் சுளைக்கு அரை கிலோ வெல்லம் என்ற அளவில் சேர்க்கலாம். பலாச் சுளையின் இனிப்பை பொறுத்து வெல்லத்தின் அளவை சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்த்துக் கொள்ளலாம். நாண் ஸ்டிக் பாத்திரத்தில் செய்யும் போது மேலே சொன்ன அளவுக்கு நான் 2 தேக்கரண்டி நெய் மட்டுமே சேர்த்தேன். சாதாரண பாத்திரத்தில் செய்யும் போது 2 மேசைக்கரண்டி அளவு நெய் தேவைப்படும்.