FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 15, 2011, 02:03:24 PM

Title: குழந்தைத் தொழிலாளிகள்
Post by: thamilan on October 15, 2011, 02:03:24 PM
சிக்காமல் பறக்கும்
சோற்றுப் பருக்கைகளுக்குப் பின்னால்
அலையும் இவர்களுக்கு
புல் நுனியில் அமரும்
பட்டாம் பூச்சிகளைப் பிடிக்க‌
நேரம் ஏது?

கண்ணீர் வெள்ளத்திலிருந்து
கரையேறத் துடிக்கும் இவர்களுக்கு
மழை நீரில்
காகிதக் கப்பல் விட‌
நேரம் ஏது?

வாழ்க்கை இவர்களுடன்
கண்ணாமூச்சி ஆடும் போது
இவர்கள் கண்ணாமூச்சி ஆட‌
நேரம் ஏது?

பசிக்கயிற்றில்
பம்பரமாகி விட்ட இவர்கள்
பம்பரம் சுற்ற‌
நேரம் ஏது?

இந்த சின்னச் சிறிய வயதில்
இவர்களிடம் இருந்து
விளையாட்டுக்களை பறித்தது யார்?

பூக்க‌ளை ஏந்த‌ வேண்டிய‌
இந்த‌ மெல்லிய‌ காம்புக‌ளில்
வாழ்க்கையின் பார‌த்தை
ஏற்றிய‌து யார்?

பென்சில் பிடிக்க‌ வேண்டிய‌
சின்ன‌ச் சிறு விர‌ல்க‌ளில்
தீக்குச்சிக‌ள்

எதிர்கால‌த்தின் ஒளிவிள‌க்குக‌ள்
என்று
மினுமினுக்கும் வார்த்தை பேசுப‌வ‌ர்க‌ளே
இவ‌ர்க‌ள் நிக‌ழ்கால‌மே
க‌ரிந்து போவ‌து
உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌வில்லையா?

வ‌ருட‌ம் த‌வ‌றாம‌ல்
குழ‌ந்தைக‌ள் தின‌ம் கொண்டாடுப‌வ‌ர்க‌ளே
தின‌த்தை கொண்டாடுவ‌தை விட்டுவிட்டு
என்று
குழ‌ந்தைக‌ளை கொண்டாட‌ப் போகிறீர்க‌ள்?
Title: Re: குழந்தைத் தொழிலாளிகள்
Post by: Global Angel on October 18, 2011, 06:03:41 PM
Quote
வ‌ருட‌ம் த‌வ‌றாம‌ல்
குழ‌ந்தைக‌ள் தின‌ம் கொண்டாடுப‌வ‌ர்க‌ளே
தின‌த்தை கொண்டாடுவ‌தை விட்டுவிட்டு
என்று
குழ‌ந்தைக‌ளை கொண்டாட‌ப் போகிறீர்க‌ள்?

pahaddu vaalkkaiku palakivitta manithan ithellam maatuvaanaa ;)