எகிப்தின் சிபிங்ஸ் சிலைகள் (Sphynx)..!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F3659_359585977480242_1324693892_n.jpg&hash=b37f43f6cb33c9b63a743d1d820d7a333a9b9ee4) (http://www.friendstamilchat.com)
காலை மடித்துப் படுத்தபடி தலையை நிமிர்த்தி நேர்ப் பார்வை பார்க்கும் சிங்கத்தின் உடலும் மனிதத் தலையும் கொண்ட சிபிங்ஸ் வடிவச் சிலை எகிப்தின் பிரமிடுகளுக்கு அருகில் காணப்படுகிறது. எகிப்தின் புராதனச் சின்னமான பிரமிடுகளைப் போல் அவற்றின் அருகாமையில் சிபிங்ஸ் சிலைகளும் இடம்பெறுகின்றன.
பிரமிடுகளுக்குள் அரச பரம்பரையினர், உயர்குடிப் பிறந்தோர் ஆகியோரின் உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பிரமிடுகளைத் காக்கும் காவல் தெய்வங்களாக சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்ட சிபிங்ஸ் சிலைகள் கருதப்படுகின்றன. இது ஒரு சாராரின் கருத்து மாத்திரமே. இந்தச் சிலைகள் பற்றிய மர்மம் இன்னும் முற்றாகத் துலங்கவில்லை.
சிபிங்ஸ் போன்ற மர்மம் (As Mysterious as the Sphynx) என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் இருக்கிறது. கிறிஸ்துவின் பிறப்பிற்கு முந்திய 2,500-3,000 ஆண்டுகளுக்கு இடையே சிபிங்ஸ் சிலைகள் எழுப்பப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆய்வுகளின் முடிவு. அதாவது இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முந்தியவையாக அவை இருக்கலாம்.
மனிதத் தலையின் நுண்ணறிவும் சிங்கத்தின் உடற் பலமும் ஒரு சேர்ந்த இலட்சிய வடிவம் என்று சிபிங்ஸ் பற்றிக் கூறப்படுகிறது.
சிபிங்ஸ் போன்ற சிலைகள் ஆசிய நாடுகள் சிலவற்றில் காணப்படுகின்றன. வடிவங்கள் வித்தியாசப் பட்டாலும் எண்ணம் பொதுமையாக இருப்பது கண்கூடு.
இந்து மதத்தின் ஒரு பிரிவினருக்கு முக்கியமான நரசிம்ம அவதாரம் இறைவன் இரணியனை வதம் செய்வதற்காக மனிதனும் சிங்கமும் கலந்த உடலமைப்பைக் கொண்டதாக இடம்பெறுகிறது. இந்த அவதாரம் சிபிங்ஸ் சிலைக்குப் பிந்தியதாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.