-
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/380073_529606470397602_1863904696_n.jpg)
குறுந்தொகை - 1
இயற்றியவர் : திப்புத் தோளார்.
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
அருஞ்சொற் பொருள்:-
செங்களம் பட = இரத்தத்தாற் போர்க்களம் செந்நிறமாகும் படி
கொன்று அவுணர் தேய்த்த = அவுணர் - அசுரர், அசுரர்களைக் கொன்று தேய்த்த
செங்கோல் அம்பின் = இரத்தத்தாற் சிவந்த திரண்ட அம்பையும்,
செங்கோட்டி யானை = சிவந்த கொம்பை உடைய யானையையும்,
கழல் தொடி = கழல் - ஓரணிகலன்;தொடி - வளையல், வளையலணிந்த
சேஎய் குன்றம் = முருகக் கடவுளுக்குரிய மலையானது,
குருதி பூவின் குலை காந்தட்டு - செவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளையுடையது.
இதன் பொருள் :-
தலைவன் தான் தலைவியின்பால் கொண்ட அன்பின் பொருட்டு அவளுக்கு செங்காந்தல் மலர்களை பரிசளிக்கிறான்.அப்போது தோழி தலைவனை நோக்கி , அவுணர்களைக் கொன்று குவித்ததால் போர்க்களம் முழுவதும் சிவப்புறுமாறு செய்வதன் முருகன் - பகைவரைக் குத்திக் கொன்றதால் அவனது வேலும், களிற்றின் கோடுகளும் சிவப்புற்றன. இத்தகைய சிறப்புடைய முருகன் குடிகொண்டிருக்கும் இம்மலையில் சிவந்த நிறமுடைய காந்தள் மலர்கள் எங்கும் மலர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் இச்சிறிய பொருளைக் கொடுத்து தலைவியாகிய பெரிய பொருளை அடைய எண்ணுவது அறிவீனம். அதனால் நின் கையுறையாகிய இம்மலரை, யாம் ஏற்பதற்கு இல்லை என்று கூறுகிறாள்.
-
குறுந்தொகை - 2
இயற்றியவர் : இறையனார்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
அருஞ்சொற் பொருள்:-
கொங்கு = பூவின் மகரந்தம்
தேர் = தேர்நெடுக்கும்
வாழ்க்கை = வாழும்
அஞ்சிறைத்தும்பி = சிறகுகளை உடைய தும்பி(வண்டு)-(அம் சிறை -அழகிய சிறகுகள்)
காமம் செப்பாது = நான் விரும்பியதைச் சொல்லாது
கண்டது மொழிமோ = நீ கண்டறிந்ததைக் கூறு
பயலியது கெழீய நட்பின் = பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும்(கெழி-நட்பு)
மயிலியல் = மயில் போன்ற
செறியியெற் றரிவை- செறிவான பற்களைக்(எயிறு) கொண்ட பெண்
கூந்தலின் = கூந்தலை விட
நறியவும் உளவோ = மணமிகுந்த ஏதேனும் உள்ளதோ
நீ அறியும் பூவே = நீ அறிந்த பூக்களிடம்
இதன் பொருள் :-
மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில் என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய அழகிய பற்களை உடைய பெண்ணில் கூந்தலைவிட மணமுடையது ஏதேனும் உள்ளதோ?எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கற்றறிந்ததைக் கூறு!
-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/527642_575547322470183_247803935_n.jpg)
குறுந்தொகை - 3
இயற்றியவர் : தேவ குலத்தார்
=====================================
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
சூழல்:-
தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
இதன் பொருள் :-
மலைப்பக்கத்திலே கரிய குறிஞ்சி மரத்தின் மலர்களைக்கொண்டு பெருந்தேன் எடுக்கும் வண்டுகள் நிறைந்த வளமான நாட்டினைக்கொண்டிருக்கிற தலைவனின் நட்பு (காதல்)
நிலத்தைவிட பெரியது(அகலமானது)
வானத்தைவிட உயர்ந்தது
கடலைவிட ஆழமானது.
உரை:-
தலைவன் தலைவியை வரைவு செய்ய அதாவது மணம் முடிக்க கருத்தின்றி இருக்கிறான். தலைவியைக்காண வருகிறான் .தோழி தலைவனைப்பழிக்கிறாள் .தலைவி அவற்றை மறுத்து தலைவனைப் புகழ்கிறாள்.இதற்குப்பிறகு தலைவன் திருமணத்தை தள்ளிப்போடுவானா?
-
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/269257_575905312434384_1044095115_n.jpg)
குறுந்தொகை - 4
இயற்றியவர் : காமஞ்சேர் குளத்தார்.
நோகும் நெஞ்சே
நோம்என் நெஞ்சே; நோம்என் நெஞ்சே;
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்தநம் காதலர்
அமைவுவிலர் ஆகுதல், நோம்என் நெஞ்சே.
சூழல்:-
கடலும் கடல் சார்ந்த பகுதியும் என்பது நெய்தல் நிலம்.தலைவன் மீன்பிடிக்கவோ அல்லது கடல் கடந்த நாட்டிற்கு வாணிகத்திற்கோ போகிறான்.அவன் திரும்பி வர நாட்கள் வாரங்கள் மாதங்கள் ஆகலாம்.அவன் பிரிவைத்தாங்க இயலாமல் உள்ளம் நொந்து வாடும் தலைவி தோழியிடம் சொல்வதாக அமைந்த பாடல்...
இதன் பொருள்:-
என் நெஞ்சம் நோகுகிறது(துன்புறுகிறது). என் நெஞ்சம் நோகுகிறது. இமைகளைத் தீய்க்கும்
தீப்பந்தத்தைப்போல் பிரிவால் வாடி கண்ணில் வரும் கண்ணீர் வருத்துகிறது தலைவனின் கரங்கள் சேர்ந்திருந்த காலங்களில் என்னுடன் அளவளாவி கண்ணீரைத் துடைக்கும் இப்பொழுது தலைவனின் ஆற்றுதல் இன்றி என்
நெஞ்சம் நோகுகிறது.