சர் ரோஜர் பேனிஸ்டர் ஒரு சாதனை மனிதன் ( ' The Miracle Mile Man') (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-frc1%2F249319_351884318250408_1725769211_n.jpg&hash=a314b5dd5df5a915b5a3ee89f16dbfb47e1b7739)
வாழ்க்கையில் வெற்றிபெற பல வழிகள் உண்டு. இதுவரை எட்டப்படாத ஓர் இலக்கை தீர்மானித்து மற்றவர்கள் அந்த இலக்கை அடையுமுன் நாம் அந்த இலக்கை அடைவது அந்த வழிகளில் ஒன்று. எதையுமே முதலில் சாதிப்பவர்களுக்குதான் வரலாறும் முதல் மரியாதை தருகிறது. புதிய இலக்குகளை அடைவது என்பது விளையாட்டு உலகத்திற்கும் பொருந்தும் ஒன்று. ஒரு மைல் தொலைவை ஓடிக்கடக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு மைல் ஓட்டத்திற்கு '4 மினிட் ஃபேரியர்' என்ற ஒரு இலக்கு இருந்தது. நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடிக்கடப்பது என்பது பகல் கனவாக இருந்த காலம் அது. தனது திறமையின்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தவர்கள்கூட அதனை அடைய முடியாத ஓர் இலக்காக கருதினர்.
1954ல் ஒருவர் ஓடினார் '4 மினிட் ஃபேரியர்' என்ற சொற்றொடர் காற்றோடு கரைந்தது. அவர் பெயர் ரோஜர் பேனிஸ்டர். 1929 ஆம் ஆண்டு மார்ச் 23ந்தேதி இங்கிலாந்தின் ஹெரோ என்ற நகரில் பிறந்தார் பேனிஸ்டர். அவர் ஆரம்ப பள்ளியில் படிக்கும்போதே திடல் திட போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டினார். அவரது பெற்றோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பல்கலைக்கழக படிப்புக்கு பெற்றோரால் உதவ முடியாது என்பது பேனிஸ்டருக்கு புரிந்தது. எனவே எப்படியாவது உபகாரச்சம்பளம் பெற்று மிகச்சிறந்த பல்கலைகழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை சிறு வயதிலிருந்தே வளர்த்து வந்தார்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது பேனிஸ்டரின் குடும்பம் இங்கிலாந்தின் வரலாற்றுப் புகழ்மிக்க பாத் என்ற நகருக்கு குடி பெயர்ந்தது. அங்கு சென்ற பிறகு தினசரி பள்ளிக்கு ஓடிச்செல்வார் பேனிஸ்டர். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடியே வருவார். படிப்பிலும் அவர் அதிக கவணம் செலுத்தியதால் ஆரம்பத்தில் சக மாணவர்களின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் ஓட்டப்பந்தயத்தில் அவருக்கு இருந்த திறமையைக்கண்டு அனைவருக்கும் அவர் மேல் நன்மதிப்பு ஏற்பட்டது. அவரது கடும் உழைப்பு அவர் கனவு கண்டதைப்போலவே உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க உபகாரச்சம்பளத்தை பெற்றுத்தந்தது. பல்கலைகழகத்திலும் அவர் திடல்திட போட்டிகளில் ஈடுபட்டார். 1500 மீட்டர் மற்றும் ஒரு மைல் ஓட்டத்தில் அவர் காட்டிய வேகம் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர்களின் கவணத்தை அவர் பக்கம் ஈர்த்தது. ஒரு தேசமே பேனிஸ்டரை நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்தது.
ஆனால் கல்விக்கே முதலிடம் தந்த பேனிஸ்டர் 1948 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்தை பிரதிநிதிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதற்கான காரணத்தை கேட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள் பேனிஸ்டர் தனது மருத்துவ படிப்பில் முழு கவணம் செலுத்த விரும்பியது முதல் காரணம், இரண்டாவது காரணம் தன் தேசத்தை பிரதிநிதிக்கும் அளவுக்கு தனக்கு இன்னும் தகுதி இல்லை என்று அவர் நினைத்தது. வாழ்க்கையில் நாம் இதுபோன்ற எத்தனை விளையாட்டு வீரர்களை சந்திக்க முடியும்! அவர் அப்படி சொன்னாலும் ஆனால் அடுத்த மூன்றே ஆண்டுகளில் அதாவது 1951ல் ஒரு மைல் ஓட்டத்தில் இங்கிலாந்தின் ஆகச்சிறந்த வீரராக உருப்பெற்றார் பேனிஸ்டர். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தான் தயார் என்று உணர்ந்தார்.
ஆனால் 1952 ஆம் ஆண்டில் ஹல்சிங்கி ஒலிம்பிக் போட்டிகளில் கடைசி நிமிட நேர மாற்றங்களால் போட்டிகளுக்கு இடையில் போதிய ஓய்வு இல்லாமல் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவரால் 1500 மீட்டர் ஓட்டத்தில் நான்காவதாகத்தான் வர முடிந்தது. பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் அவரை எள்ளி நகையாடின. பாரம்பரிய பயிற்சி முறைகளை பேனிஸ்டர் ஒதுக்கியதால்தான் பேனிஸ்டர் தோற்றார் என்று காரணம் கற்பித்தன. ஆனால் மனம் தளராத பேனிஸ்டர் ஒரு மைல் தொலைவு ஓட்டத்தில் உலக சாதனை நிகழ்த்தி பத்திரிக்கையாளர்களின் வாயை அடைக்க விடா முயற்சியோடு செயல்பட்டார். மருத்துவ படிப்பு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் அவரால் ஒரு நாளைக்கு 45 நிமிடத்தைதான் பயிற்சிக்கு ஒதுக்க முடிந்தது. ஆனாலும் தனது விடா முயற்சியில் நம்பிக்கை வைத்து படிப்பையும் பயிற்சியையும் தொடர்ந்தார்.
ஆண்டு 1954 மே திங்கள் 6 ந்தேதி வயது 25 ஆக்ஸ்பர்டில் நடைபெற்ற ஒரு போட்டியில் பிரிட்டிஷ் திடல்திட கழகத்தை பிரதிநிதித்து ஒரு மைல் பிரிவில் ஓடினார் பேனிஸ்டர். உலகச்சாதனையை நோக்கி விரைந்த அவரது கால்கள் 3 நிமிடம் 59.4 வினாடியில் கடிகாரத்தை உறைய வைத்தன. பேனிஸ்டருக்கு மூச்சு முட்டியது, விளையாட்டு உலகம் ஒரு கணம் மூக்கின்மேல் விரலை வைத்து மூச்சுவிட மறந்தது. 25 வயதில் வரலாற்றில் தடம் பதித்தார் பேனிஸ்டர். நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவு ஓடுவது மனித உடலுக்கு அப்பாற்பட்டது என்பதுதான் அப்போதைய விளையாட்டு வீரர்களின் பயிற்றுவிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அது சாதிக்கக்கூடிய ஒன்று என்று நம்பினார் பேனிஸ்டர். தனது மருத்துவ படிப்பின் மூலம் உடல்கூறுகளை கூர்ந்துகற்ற அவர் ஓடுவதைப்பற்றி நிறைய ஆராய்ட்சிகள் செய்ததோடு மட்டுமல்லாமல் அறிவியல் அடிப்படையிலான புதிய பயிற்சி முறைகளை வகுத்துக்கொண்டார்.
நம்பிக்கையோடு அந்த முறைகளை கையாண்டு வெற்றியும் பெற்றார். பேனிஸ்டர் சாதித்த அடுத்த மாதமே ஆஸ்திரேலியாவின் ஜான் லேண்ட் பி என்ற வீரரும் நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடி முடித்தார். அப்போதுதான் தடை உடலுக்கு அல்ல உள்ளத்துக்குதான் என்பதை உலகம் உணர்ந்தது. மிகப்பெரும் சாதனையை செய்த அதே ஆண்டு திடல்திட போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று தனது மருத்துவ கல்வியை தொடர்ந்தார் பேனிஸ்டர். பின்னர் சிறப்பாக தேர்ச்சி பெற்று நரம்பியல் மருத்துவரானார். எப்படி ஒரு மைல் சாதனையை நிகழ்த்துனீர்கள் என்று ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டபோது “உங்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் திறமைதான்" காரணம் என்று கூறினார் பேனிஸ்டர்.
ஒருமுறை அவரை எள்ளி நகையாடிய பத்திரிக்கைகள் “The man who ran the miracle mile" அதாவது அதிசய மைல் மனிதன் என்று இப்போது பாராட்டின. 1975 ஆம் ஆண்டு பேனிஸ்டருக்கு “சர்” பட்டம் வழங்கி கவுரவித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ வீரர்கள் ஒரு மைல் தொலைவை நான்கு நிமிடத்திற்குள் ஓடி முடித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே பேனிஸ்டரால் எட்டபட்ட இலக்கைதான் எட்டியிருக்கின்றனர். நான்கு நிமிட இலக்கை முதன்முதலாக முறியடித்ததால்தான் 50 ஆண்டுகள் கடந்தும் பேனிஸ்டரின் பெயரை பெருமையுடன் சுமந்து நிற்கிறது வரலாறு. ஒருவேளை இன்னொரு வீரர் மூன்று நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடி முடித்தால் பேனிஸ்டரின் பெயர் மறக்கப்படலாம், ஆனால் முடியாது என்று கருதப்பட்டதை முடியும் என்று செய்து காட்டியதாலேயே மூன்று நிமிட இலக்கையும் ஏன் முறியடிக்க முடியாது!! என்ற சிந்தனையை பல வீரர்களின் உள்ளங்களில் உருவாக்கியிருக்கிறார் பேனிஸ்டர். இது ஒன்றே பேனிஸ்டரின் வெற்றியாகும்.
உங்கள் வாழ்வில் நீங்கள் வகுத்துக்கொள்ளும் இலக்கு எது? மற்றவர்களின் இலக்குப்போலவே சாதாரணமாக இருந்தால் வாழ்க்கையும் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் பேனிஸ்டரைப்போல் நம்மலுடைய இலக்கும் உயர்வாக இருந்து விடா முயற்சியோடு வியர்வை சிந்தி உழைத்தால் வாழ்க்கையும் உயரும்