FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on March 07, 2013, 05:21:17 PM

Title: பாத வறட்சி அழகைக் கெடுக்குதா? கவலையவிடுங்க...
Post by: kanmani on March 07, 2013, 05:21:17 PM
அனைத்துப் பெண்களுமே அனைத்து விதத்திலும் அழகாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று, கூந்தல், சருமம் என்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பணம் செலவழித்து பராமரிப்பார்கள். இவ்வாறு செய்வதால், பையில் உள்ள பணம் தான் கரையுமே தவிர, அதற்கான முழு நன்மைகளையும் பெற முடியாது. சொல்லப்போனால், அத்தகைய பராமரிப்புகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் இருக்குமே தவிர, சீக்கிரம் போய்விடும்.

குறிப்பாக இத்தகைய கெமிக்கல் கலந்த பொருட்களை உடலில் பயன்படுத்தும் போது, வறட்சி, அரிப்புகள், சிலசமயங்களில் வெடிப்புகள் போன்றவை ஏற்படும். அதிலும் கால்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், பாதங்கள் விரைவில் வறட்சியடைந்து, குதிகால் வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வலி ஏற்படுவதோடு, வெடிப்புக்கள் வந்த இடம் பொலிவின்றி, கடினமாக இருக்கும். எனவே இதனை போக்குவதற்கு சிறந்த வழி என்னவென்றால், அது இயற்கை முறைகள் தான். அத்தகைய இயற்கை முறைகளில், வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி பராமரிப்பதால், எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, அதன் நன்மையானது நீண்ட நாட்களும் இருக்கும்.

 சரி, இப்போது பாதங்களில் உள்ள வெடிப்புகளையும், வறட்சியையும் நீக்குவதற்கு எந்த பொருட்களை, எப்படி பயன்படுத்த வேண்டுமென்று பார்ப்போமா!!!

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் அழகுக்கான நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் ஒருவகையான நன்மைகள் தான் குதிகால் வெடிப்பு மற்றும் பாத வறட்சி. அதற்கு ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து, 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், பாதங்கள் மென்மையாகவும், வறட்சியின்றி அழகாகவும் இருக்கும்.

உப்பு

வீட்டில் இருக்கும் பொருட்களில் ஸ்கரப் செய்வதற்கு சிறந்ததாக இருப்பது உப்பு. அதிலும் பாதங்களை பராமரிப்பதற்கும் உப்பு ஒரு சிறப்பான பொருள். எனவே வெதுவெதுப்பான நீரில் உப்பை சேர்த்து, கால்களை அதில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லை வைத்து பாதங்களை தேய்த்தால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, வெடிப்புகள் ஏற்படாமல் பொலிவோடு இருக்கும்.

தேன் மற்றும் பால்

 குதிகால் வெடிப்பிற்கு தேன் மற்றும் பால் ஒரு சிறந்த பொருள். ஏனெனில் இவை ஒரு சிறந்த மாய்ச்சுரைசர்கள். ஆகவே வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லை கொண்டு, சிறிது நேரம் தேய்த்தால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். பின் தேனில் சிறிது பாலை சேர்த்து, கலந்து, கால் மற்றும் பாதங்களில் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல பலனை பெறலாம்

திராட்சை விதை எண்ணெய்

திராட்சை விதை எண்ணெய் அவ்வளவு பிரபலமானது இல்லை. ஆனால் இவை குதிகால் வெடிப்பு மற்றும் கால்களில் ஏற்படும் வறட்சிக்கு சிறந்த தீர்வைத் தரக்கூடியது. அதற்கு கால்களில் திராட்சை விதை எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனை குதிகால் வெடிப்பு நீங்கும் வரை செய்ய வேண்டும்.

வாஸ்லின்

சருமத்திற்கு ஒரு சிறந்த மாய்ச்சுரைசர் என்றால் அது வாஸ்லின் தான். குறிப்பாக கால் மற்றும் பாதங்களில் உள்ள வறட்சிகளை நீக்குவதில் சிறந்தது. எனவே இதனை வைத்து தினமும் சிறிது நேரம் மசாஜ் செய்ய, நல்ல பலன் கிடைக்கும்.

வெண்ணெய்

வெண்ணெய் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் வறட்சியை நீக்குவதில் சிறப்பான பொருள். எனவே கால்களுக்கு எந்த ஒரு ஸ்கரப் செய்த பின்னரும், வெண்ணெயை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், பாதம் மற்றும் கால்களில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

ஓட்ஸ் ஸ்கரப்

வறட்சியைப் போக்குவதில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு ஓட்ஸை அரைத்து, அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, கால் மற்றும் பாதங்களில் தடவி ஸ்கரப் செய்தால், பாதங்களில் வறட்சி நீங்கிவிடும். வறட்சியை நீக்கினால், வெடிப்புகளை தடுக்கலாம்.

கொக்கோ வெண்ணெய்

 குதிகால் வெடிப்பு மற்றும் வறட்சியான பாதத்திற்கு கொக்கோ வெண்ணெய் சிறந்த ஒரு வீட்டுப் பொருள். ஏனெனில் இதில் உளள வைட்டமின் ஈ குதிகால் வெடிப்பை நீக்குவதோடு, இதில் உள்ள மாய்ச்சுரைசர் பாதங்களை வறட்சியடையாமல் செய்கிறது. அதற்கு கொக்கோ வெண்ணெயை கால் மற்றும் பாதங்களில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இல்லையெனில் இரவில் படுக்கும் போது, தடவி கால்களுக்கு சாக்ஸ் போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் பாதங்கள் நன்கு மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.

கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்

கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கலவை சரும பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு தரக்கூடியது. அதற்கு இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, கால்களில் தடவி மசாஜ் செய்து வந்தால், பாதங்கள் வறட்சியின்றி, அழகாகவும் மென்மையாகவும் இருக்கும்.

காப்பி தூள் ஸ்கரப்

 காபி குடித்தால், எப்படி மனம் புத்துணர்ச்சி அடைகிறதோ, அதேப் போல் காப்பித் தூளை வைத்து, ஸ்கரப் செய்தால், கால் மற்றும் பாதங்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். அதற்கு ஒரு கப் காப்பி தூளுடன், 5 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பாதங்களுக்கு ஸ்கரப் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், பாதத்தில் வெடிப்பின்றி நன்கு பட்டுப்போன்று பொலிவோடு இருக்கும்.