FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on March 04, 2013, 12:37:50 AM

Title: சரும சுருக்கம் முதுமை தோற்றத்தை தருதா? அப்ப இத படிங்க...
Post by: kanmani on March 04, 2013, 12:37:50 AM
உண்ணும் உணவிலேயே உடல் நலம், சருமம், கூந்தல் போன்றவற்றின் ஆரோக்கியத்தை சொல்லலாம். மேலும் சிலரது உடலின் இளமையான தோற்றம் மற்றும் அழகின் இரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் வேறு எதுவும் இல்லை உணவு தான் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு ஆரோக்கியத்துடன், புத்துணர்வுடன் இருக்கும். ஆனால் அதுமட்டும் முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும் என்று நினைத்து, சருமத்தை சரியாக பராமரிக்காவிட்டால், பின் சருமத்தில் சுருக்கங்கள், வறட்சி போன்றவை ஏற்படும். மேலும் இத்தகைய பிரச்சனைக்கு கடுமையான சூரியக்கதிர்களும், சுற்றுச்சூழலும் தான் காரணம்.

 ஆகவே அத்தகைய பிரச்சனை இல்லாமல், முகம் பொலிவோடும், முதுமைத் தோற்றத்தை தரும் சுருக்கம் இல்லாமலும் இருப்பதற்கு, உணவுகளை உண்பதோடு, அவ்வப்போது முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டு பராமரிக்க வேண்டும். அதுவும் இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி பராமரிப்பதே சிறந்தது. சரி, இப்போது சருமத்தை சுருக்கமின்றி வைப்பதற்கு எந்த மாதிரியான ஃபேஸ் மாஸ்க்குகளை போட வேண்டும் என்று பார்ப்போமா!!!

* 2 டேபிள் ஸ்பூன் பாலில், சிறிது வைட்டமின் ஈ ஆயில் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அதில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை பொலிவோடும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ள உதவும்.

* நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் வாழைப்பழம் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். அதுமட்டுமின்றி சருமத்தையும் மென்மையாக்கும்.

* தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து, சருமத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், இதன் பலனை விரைவில் பெறலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை நீக்கிவிடும்.

* சருமத்தை இறுக்கமடையச் செய்வதில் கற்றாழை ஒரு சிறந்த அழகுப் பொருள். ஆகவே இதன் ஜெல்லை முகத்தை தடவி, மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவினால், சருமம் இறுக்கமாவதோடு, எண்ணெய் பசையுடனும் இருக்கும். மேலும் இது சரும நோய்களையும் குணப்படுத்தும்.

* அவகேடோ பழமும் சரும பராமரிப்பில் ஒரு சிறந்த பொருள். அவகேடோ பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, நன்கு கலந்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* முகத்தில் பருக்கள் இருந்தால், சந்தனப் பவுடர் சிறந்த பலனைத் தரும். எனவே அந்த பருக்களை போக்குவதற்கு, சந்தனப் பவுடருடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ச்சியான நீரில் கழுவினால், பருக்களுடன், சுருக்கங்களும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.