FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on September 28, 2011, 04:56:47 PM

Title: உங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability) எப்படி இருக்கிறது ?
Post by: Yousuf on September 28, 2011, 04:56:47 PM
நமது கல்வி முறை தான் நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருப்பதால் பெற்றோர்களின் கவலையும் கவனமுமாக இருப்பது கல்வி முறை தான். இதனால் தான் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை இன்று பெரிய கவனம் செலுத்தப்படுகிறது.

கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் வாழ்க்கை முறையில் குழந்தைகளின் கல்வியறியும் தன்மை குறித்து தேவைப்படும் கவனத்தை செலுத்த முடிவதில்லை. கல்வியறியும் தன்மையில் சில குழந்தைகளுக்கு இயற்கையிலேயே குறைபாடுகள் இருக்கின்றன.

இவை குறித்து எண்ணற்ற ஆய்வுகளும் ஆலோசனைகளும் இருந்தும் கூட, அன்றாட வாழ்வின் வேகமான போக்கினாலும் அடிப்படையிலேயே பொறுப்பற்ற பெற்றோர்களாலும் இது போன்ற குழந்தைகள் இலக்கின்றி காலத்தின் போக்கில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

ஒத்த வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது படிப்பது, எழுதுவது, தகவல் பரிமாற்றம், கவனிக்கும் திறன், ரீசனிங் மற்றும் கணிதம் தொடர்புடைய அம்சங்களில் பிரச்னைகள் உள்ள குழந்தைகளை Learning Difficulty Children என கூறுகிறார்கள்.

இள வயதில் பெரிய பிரச்னையாக பெற்றோரால் உணரப்படவில்லையென்றாலும் அந்த குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடும் சாத்தியம் அதிகம் என்பதை இது போன்ற குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர் உணருவதில்லை.

இந்த கல்வி கற்கும் குறைபாடானது படிப்பில் துவங்கி, படிப்படியாக மனக்குறைபாடு, தாழ்வு மனப்பான்மை, மனச் சோர்வு, சக மாணவர்களுடன் உறவுச் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு அவர்களை இட்டுச் செல்லும் தன்மையை கொண்டுள்ளது.

இதுபோன்ற பிரச்னை தங்களது குழந்தைகளுக்கு இருப்பதை பெற்றோர் உணரும் போது பிரச்னையின் தன்மை, ஆழம் ஆகியவற்றை அறிவதுடன், இதில் நாம் எப்படி செயல்பட்டு குழந்தைக்கு உதவலாம் என்று யோசித்து செயல்படவேண்டும் என திட்டமிட்டு செயல்பட வேண்டும். இது போன்ற குழந்தைகளிடம் பொறுமையாக இருப்பதன் மூலமாக மட்டும் இதை சரி செய்ய முடியாது. குறைபாட்டின் முதல் கட்டத்திலேயே அதனை சரி செய்யும் முயற்சிகள் தொடங்கப்படவேண்டும்.

குழந்தைகளின் குறைபாடுகளை கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களின் பங்கு தலையாயது. சக மாணவர்களுடன் பழகும் தன்மை, ஒதுங்கும் மனப்பான்மை, கோபம், தகவல் பரிமாற்றம், புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறன் போன்றவற்றில் குழந்தையின் நிலை என்ன என்பதை ஆசிரியர்களால் மட்டுமே உணர முடியும். தற்செயலாக ஒரு குழந்தையிடம் இதுபோன்ற குறைபாடுகள் காணப்பட்டால் உடனே பெற்றோருக்குத் தெரிவிப்பது ஆசிரியரின் கடமையே.

இதில் காட்டப்படும் லேசான அலட்சியம் கூட எதிர்கால சந்ததியை பாதித்து பலமற்ற சமூகத்தை உருவாக்கும் என்பதை ஆசிரியர்கள் கட்டாயம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

குறைபாடுகள் உணரப்பட்டவுடன் பெற்றோர் குறிப்பிட்ட குறைபாட்டுக்கான சிறப்பு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இப்போது முரண்பட்ட குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான பள்ளிகள் உள்ளன. இதில் இது போன்ற குழந்தைகளை சேர்ப்பதில் தயக்கமே கூடாது.

எல்.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்கு முன் பிரீகேஜி வகுப்புகளில் சேர்ப்பது கூட ஒரு விதத்தில் பிரச்னையை முதற்கட்டத்திலேயே அறிய உதவலாம். இந்த குறைபாடுகள் ஒரு நோயல்ல என்பதையும் சரியான கவனிப்பின் மூலமாகவும் நமது உடனடி நடவடிக்கைகளின் மூலமாகவும் இவற்றை களைந்து குழந்தையை மேம்படுத்தலாம் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

கல்வி கற்பதில் பொதுவாகக் காணப்படும் சில குறைபாடுகள் பற்றிய சுருக்கமான தகவல்கள் இதோ…


டிஸ்பிராக்சியா:

ஒருங்கிணைப்பற்ற செயல்கள், சப்தங்கள் பற்றிய பயம், மந்தமான மொழி வளர்ச்சி, போதுமான கவனமில்லாதிருப்பது, தூக்கத்தில் பிரச்னை ஆகியவை ஒரு குழந்தையிடம் இருந்தால் அது டிஸ்பிராக்சியா.

ஒலி,ஒளி குறித்த குறைபாடுகள்:

விசுவல் மற்றும் ஆடியோவை ஒரு குழந்தை எப்படி புரிந்த கொள்கிறது என்பது தொடர்பான குறைபாடு இது. இதை ஆசிரியர்கள் தான் முதலில் அறிகிறார்கள்.

டிஸ்கால்குலியா:

கணிதத்தை புரிந்து கொள்வதில் உள்ள பிரச்னை இது. வரிசைப்படுத்துவது, பெருக்குவது, வகுப்பது, சூத்திரங்களை புரிந்து கொள்வதில் பிரச்னைகள் இருந்தால் அது டிஸ்கால்குலியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.

டிஸ்கிராபியா:

மனதில் நினைப்பதை எழுதுவதில் பிரச்னைகள் இருந்தாலோ கையெழுத்து மிகவும் மோசமானதாக இருந்தாலோ அது டிஸ்கிராபியாவாக இருக்கலாம்.

டிஸ்லெக்சியா:

படிப்பது, எழுதுவது மற்றும் உச்சரிப்பில் பிரச்னை இருந்தால் அது டிஸ்லெக்சியாவின் அறிகுறியாக இருக்கலாம். தயக்கமான பேச்சு, வலது மற்றும் இடது அறிவதில் குழப்பம், வார்த்தைகளை உச்சரிப்பதில் குழப்பம், ரைம்ஸ் உரைப்பதில் சிரமம், குழப்பமான கையெழுத்து போன்றவை இதன் அறிகுறிகள்.

குறைபாடுகள் நோயல்ல… சரிசெய்யப்படக் கூடியவை தான் என்பதை அறிந்து செயல்பட்டால் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைத்துக்கொள்ளலாம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
Title: Re: உங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability) எப்படி இருக்கிறது ?
Post by: Global Angel on September 28, 2011, 07:05:45 PM
Quote
குறைபாடுகள் நோயல்ல… சரிசெய்யப்படக் கூடியவை தான் என்பதை அறிந்து செயல்பட்டால் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைத்துக்கொள்ளலாம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.


nalla pathivu ;)
Title: Re: உங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability) எப்படி இருக்கிறது ?
Post by: Yousuf on September 28, 2011, 07:24:39 PM
Nandri...! :)