FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on January 21, 2013, 08:25:37 PM
-
சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
”அவருக்காக எதையும் செய்துகொள்ளத் தெரியாது. எல்லாத்துக்கும் நான் வந்து நிக்கனும்” என்று ஒரு திருமண இல்லத்தின் முதல் நாளன்று உறவினர் பலரும் அரட்டை அடித்த வேளையில் கணவரின் காலை வாரிவிட்ட ஒரு மனைவியின் வாக்குமூலம் என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது.
அந்தக் கணவரை எனக்கு நன்கு தெரியும். ”ஏய்! ஜா… (பூர்த்தி செய்து கொள்க) இங்க வா. இதை (?) எடுத்துக் குடு. நான் இப்ப என்னென்ன (!) மாத்திரை சாப்பிடணும்? நம்ம கணக்குல பணம் இருக்கா இல்லையா? புது செக் புத்தகம் வாங்கச் சொன்னேன். வாங்கினியா? ஊருக்குப் போக என் பெட்டியில் எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னேனே வச்சிட்டியா?” பாணியில் அத்தனை அடிப்படைகளிலும் மனைவி வேண்டும் இவருக்கு. இவர் மனைவி ஊருக்குப் போய்விட்டாலோ, ஒருவேளை இறந்துவிட்டாலோ (சாரி) என்ன பாடுபடுவார் என்று எண்ணிப்பாருங்கள்.
இப்போதெல்லாம் மின்வெட்டு சகஜமாகிவிட்டது. ஒரு கடையில் ஜெனரேட்டர் உள்ளது. இதை வேலை செய்யும் பையன்தான் இயக்கி ஆரம்பித்து வைப்பான். ”முதலாளி, இதை எப்படி இயக்கணும்னா…” என்று ஆரம்பித்தவனைக் கையமர்த்தி, ”அது இல்ல முதலாளி இதுல ஒரு சின்ன சூட்சுமம் இருக்கு முதலாளி” என்றவனை, ”அதெல்லாம் எனக்குத் தெரியணும்கிற அவசியமில்லை” என்று காது கொடுக்க மறுத்துவிட்டு, அவன் வேலைக்கு வராத ஒரு நாளில் ரொம்பவே அவதிப்பட்டுவிட்டார். ஒரு பார்வையாளனாககூடத் தெரிந்து வைத்துக் கொண்டால் என்னவாம்?
ஒரு பிரபல மனிதருக்குக் கார் ஓட்டத் தெரியாது. இதனால், அவரது தெரியக்கூடாத சில அசைவுகள் ஓட்டுநர் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டன. நெளிகிறார் இப்போது. கார் ஓட்டுவது, ராக்கெட் செலுத்தும் வித்தையா என்ன?
சட்டையை அயர்ன் செய்வது அசாத்தியக் கலையா? இதை முதல்முறையாகச் செய்ய நேர்ந்து 800 ரூபாய்ச் சட்டையைப் பொசுக்கிக் கருக்கிவிட்டார் என் நண்பர்.
நாமே சுயமாக இயங்க வேண்டும். எதையும் சற்றேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுதந்திரமாக இயக்குவதில் தனி சுகம் இருக்கிறது. இதை அனுபவிக்க முன்வர வேண்டும்.
பிறர் உதவி என்பது கூடுதல் சுகமே தவிர, அடிப்படைச் சுகமாகிவிடக்கூடாது.
நன்றி;
லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்