FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on January 17, 2013, 02:21:43 AM

Title: அதிகமாகத் தூங்கினாலும், தூங்காவிட்டாலும் ஆபத்து!
Post by: Global Angel on January 17, 2013, 02:21:43 AM
அதிகமான தூக்கமும், குறைவான தூக்கமும் மூளையை அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை முன்னதாகவே முதுமை அடைய வைக்கின்றன என்று கூறுகிறது ஓர் ஆய்வு.

இந்த ஆய்வை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஒருநாளைக்கு 6 முதல் முதல் 8 மணி நேரத்துக்கு மேலாகத் தூங்குபவர்களுக்கும், 6 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்குபவர்களுக்கும் பாதிப்பு அபாயம் இருக்கிறது என்கிறார்கள் இவர்கள். குறைவான அல்லது அதிகமான தூக்கம், ஒருவரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் வீழ்ச்சி அடையச் செய்கிறது. அத்தகையவர்களை சீக்கிரமாக மரணம் நெருங்கிவிடும் என்கிறார்கள்.

லண்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஏழு மணி நேரத் தூக்கம், மூளையை அதன் உச்சபட்சக் கூர்மை நிலைக்குக் கொண்டு போகிறது என்று கூறுகிறார்கள். ஆனால், குறைவான தூக்கம், தர்க்கரீதியாகச் சிந்திப்பதையும், மொழித்திறனையும் பாதிக்கிறது என்கின்றனர்.

குறைவான அல்லது அதிகமான தூக்கம் தொடரும்போது அதன் தாக்கம், நான்கு முதல் ஏழு வயது கூடியதற்குச் சமமாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

பரிந்துரைக்கப்படும் அளவைவிட அதிகமாகத் தூங்குவோரில் 7 முதல் 8 சதவீதம் பேர், அறிவுத் திறனைச் சோதிக்கும் தேர்வுகளில் மோசமாகச் செயல்பட்டனர்.

இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஜேன் பெர்ரி கூறும்போது, “தூங்கும்முறையைத் தடாலடியாக மாற்றுவது, மத்திய வயதின் பின்பகுதியில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துவதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். இப்போதெல்லாம் 24 நேரமும் இயங்கும் சமூகச் சூழல் அதிகரித்து வருவதால் இதுகுறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.