FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on January 17, 2013, 01:44:51 AM
-
நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர். இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம். தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை.
இப்படி நம் வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை உதறிவிட்டு செயற்கை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய் கறிகளை வாங்கி உண்ண வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இதனால் நோயின் பிடியில் சிக்கி அன்றாடம் மருந்து மாத்திரைகளுடன் அலைகின்றோம். காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன.
இத்தகைய காய்களில் நாம் அனைவரும் அறிந்த புடலங்காய் பற்றியும் அதன் மருத்துவப் பயன் பற்றியும் அறிந்துகொள்வோம்.
இன்றும் கிராமங்களில் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும், பந்தல் போட்டு வளர்க்கப்படும் கொடி வகைதான் புடலை. இதன் காய் நன்கு நீண்டு காணப்படும்.
புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது சுவை மிகுந்த காயாகும். இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.
புடலையில், இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.
இதனை புடல், சோத்தனி, புடவல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
இதன் காய் மட்டுமே உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.
போகம் விளையும் பொருந்தி வளருமையாம்
ஆகமதிற் பித்த மணுக்குங்காண்-மேக
புடலங் கவியளகப் பாவாய் கேணாளும்
புடலங் காய்க்குள்ள புகழ்
-அகத்தியர் குணவாகடம்
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.
புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
புடலங்காயின் பயன்கள்
* உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
* குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.
* மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
* சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.
* விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.
* கண் பார்வையைத் தூண்டும்.
* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..
இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.