FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 15, 2013, 04:24:01 PM

Title: ~ வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்! ~
Post by: MysteRy on January 15, 2013, 04:24:01 PM
வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dinakaran.com%2FHealthnew%2FH_image%2Fht1686.jpg&hash=20d39640d1f32647a6d1095e5bd66644ebd98fcb)

‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது  புத்திக்கூர்மையும் நீ.....ளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன.  எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது  ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.
காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம். அட...எங்கே பைய எடுத்து கிளம்பிட்டீங்க... வெண்டைக்காய் வாங்கவா... ம்...ம்...!..