FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on January 04, 2013, 05:14:55 AM

Title: குருவுக்கு மரியாதை செய்வோம்!
Post by: Global Angel on January 04, 2013, 05:14:55 AM
மாதா, பிதாவால் நம் ஜனனம் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே! குருவருளால் தான் திருவருள் – இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, “அ’வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்றுத் தந்து அவர்களை சீர்திருத்தும் சிற்பிகள் ஆசிரியர்களே! ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் நிம்மதியாக இருப்பான்.

பகவான் கிருஷ்ணரும், குசேலரும் பள்ளிக்கூட நண்பர்கள். அக்காலத்தில் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள், அங்கேயே தங் கிப் படிக்க வேண்டும்; பள்ளி நேரம் தவிர, மற்ற சமயங்களில் குரு இடும் கட்டளைகளைச் செய்ய வேண்டும். ஒருநாள், இவர்களது குரு சாந்தீபனி முனிவரின் மனைவி, கிருஷ்ணரையும், குசேலரையும் சமைப்பதற்கு விறகு பொறுக்கி வரச்சொல்லி விட்டாள்.

குருவின் மனைவியின் கட்டளையை ஏற்ற அந்தக் குழந்தைகள், காட்டில் சென்று விறகு பொறுக்கினர். மழை வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க, ஒரு மரப்பொந்தில் அதை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது. குழந்தைகளைக் காணாத குரு, மனைவியைக் கடிந்து கொண்டு குழந்தைகளைத் தேடிச்சென்றார்.

குரு பத்தினியின் கட்டளையை நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர் வடித்தார். “நீங்கள் மிக நன்றாக இருப்பீர்கள்…’ என ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் பலித்தது. துவாரகையின் மன்னரானார் கிருஷ்ணர்; ஏழையான குசேலர், தன் நண்பனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.

குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.

குரு வணக்க நாள், ஆடி மாத பவுர்ணமியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் பஞ்சாங்கம் கணிப்பதில் மாறுபாடு ஏற்படுவதை ஒட்டி, ஆனிமாதக் கடைசியில் வரும் பவுர்ணமியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நாளில், அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். நீராடி, திருவிளக்கேற்றி, அதன் முன் அமர்ந்து, தங்களுக்கு கற்றுத்தந்த குருமார் மற்றும் தங்கள் ஆன்மிக குருக்களை மனதில் எண்ணி வணங்க வேண்டும்.

“த்யான மூலம் குரோர் மூர்த்தி

பூஜாமூலம் குரோர் பதம்

மந்த்ரமூலம் குரோர் வாக்யம்

மோக்ஷமூலம் குரோக்ருபா!’

என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். சமஸ்கிருத உச்சரிப்பு வராதவர்கள், “தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்; பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்; மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்; குருவின் அருள், மோட்சம் நல்குகிறது…’ என்று சொல்ல வேண்டும்.

துறவிகளை வணங்க வேண்டும்; ஆன்மிக சொற் பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அன்று பகலில் பழம், பால் மட்டுமே சாப்பிட வேண்டும். மகான்கள் படம் இருந்தால், அதற்கு பூஜை செய்ய வேண்டும்.

ஆன்மிக ரீதியாக குரு இல்லாதவர்கள், மகாபாரத ஆசிரியர் வியாசரை தங்கள் குருவாக எண்ண வேண்டும். அவர் நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்கள், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றை உலகுக்கு தந்து உலக மக்களுக்கு தர்மத்தின் பாதையைக் காட்டியவர். அவரை இந்நாளில் பூஜிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவருக்கு சன்னதி உள்ளது. அங்கு சென்று அவரைப் பூஜித்து வரலாம்.

நம் அறிவைப் பிரகாசிக்கச் செய்த குருமார்களுக்கு வியாசபூஜை நன்னாளில் மரியாதை செய்வோம்.