FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on January 04, 2013, 04:50:15 AM
-
தூக்கம்… மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.
ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான்.
நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும், அப்புறம்… நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். இவர்கள் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக பரிந்துரை செய்த உணவுகள் பீன்ஸ், பசலைக்கீரை, தயிர் மற்றும் இறால்.
பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட `பி’ வைட்டமின்களும், போலிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை அமைதியாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க செய்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.
பசலைக்கீரையைப் பொறுத்தவரையில் அதில் இரும்பு சத்து அதிகம். அளவில் தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
கொழுப்பு குறைந்த அளவில் உள்ள தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உண்டு. இந்த சத்துக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். அதோடு, மன அழுத்தம், உடல் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மீன்களில் பலவகை உண்டு என்றாலும் இறால் மீனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த ருசி மிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனை பெற்றிருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.