FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on January 04, 2013, 04:21:03 AM

Title: மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால்
Post by: Global Angel on January 04, 2013, 04:21:03 AM
சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள், நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன.

நாகரிக வளர்ச்சியின் காரணமாகவும், விளையாட போதுமான இடமின்மை மற்றும் குறுகிய மனப்பாங்கு காரணமாக, இது போன்ற விளையாட்டுகள் குறைந்து, தொலைக்காட்சி, கணினி என்று பூட்டிய அறைக்குள் விளையாடுவதே, பல குழந்தைகளின் உடல் பருமனுக்கும், எதிர்காலத்தில் தோன்றும் மூட்டுவலிக்கும், முக்கியமான காரணம்.
நமது பாட்டி, தாத்தாக்களின் உடல் வலிமை நமக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். பல பெண்கள் நாற்பது வயதிலேயே பெண் தன்மையை இழந்து வருவதும், ஆண்கள், கழுத்துவலி, முதுகுவலி என்று அலுத்துக் கொண்டிருப்பதும் அதிகரித்து வருவதற்கு உடற்பயிற்சி இன்மையும், மூட்டுகளை சூழ்ந்திருக்கும தசை, தசைநார் மற்றும் சவ்வுகளின் வலிமை குறைவதுமே காரணம். இளம் பிராயத்தில் விளையாடாததால் தான், பிற்காலத்தில் எக்ஸ்ரே, ஸ்கேன் என்று, பல மருத்துவமனைக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது.

முழங்கால் மூட்டில் ஏற்படும் பாதிப்பினாலும் சவ்வில் ஏற்படும் வீக்கம் மற்றும் திரவ பற்றாக்குறையினாலும், முழங்கால்வலி உண்டாகிறது. பெண்களுக்கு நொண்டி, பாண்டி, கயிறு தாண்டுவது, கயிறு இழுப்பது போன்றவற்றால், முழங்கால் மூட்டு தசைகள் பலமடைவதுடன், கருப்பை கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.

ஆண்கள், சிலம்பம், கபடி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கிட்டிப்புல் போன்றவற்றால், மூட்டுகள் நன்கு சுழன்று, திரும்பி வேலை செய்வதுடன், ஆண் ஹார்மோன்கள் அதிகரித்து, போதுமான அளவு சுண்ணாம்பு சத்து சேர்ந்து, எலும்புகளின் பலம் அதிகரிக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு, நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை தான் முடவாட்டுக்கால்.

டிரைனேரியா குர்சிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாலிபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த புறணிச்செடிகள், பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன.
இவற்றின் வேர்கிழங்குகள் முடவாட்டுக்கால் என்ற பெயரில் கொல்லிமலைப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.
முடவாட்டுக்கால் கிழங்கு 250 கிராம் வாங்கி, நன்கு கழுவி, சுத்தம் செய்து, மேற்தோலிலுள்ள ரோமங்களையும், புறணியையும் நீக்கி, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, அத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து, லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.
முடவாட்டுக்கால், அரைத்த மசாலா, வதக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.

டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.