FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on January 04, 2013, 04:19:37 AM

Title: வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க
Post by: Global Angel on January 04, 2013, 04:19:37 AM
வளரும் நாடுகளில், வாந்தி, பேதியால், குழந்தைகள் பெருமளவில் உயிரிழக்கின்றனர். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 26 சதவீதம் பேர், வாந்தி, பேதியால் இறக்கின்றனர். இவர்களில் இந்தியாவில் மட்டும், 1.87 மில்லியன் குழந்தைகள். இதுதவிர, வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட, 10 மில்லியன் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால், பிற நோய்களை எதிர்கொள்ளும் சக்தி குறைந்து, மேலும், பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
ரோட்டா வைரஸ் கிருமி: வாந்தி, பேதி ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ரோட்டா வைரஸ் (Rota virus) எனும் நுண்கிருமியே. சமீபத்திய ஆராய்ச்சி முடிவின்படி, “ரோட்டா வைரஸ்’ கிருமி, 40 சதவீத சமயங்களில், வாந்தி, பேதிக்கு காரணமாக இருக்கிறது. இதுதவிர, பல கிருமிகளும் பேதிக்கு காரணமாக இருந்தாலும், “ரோட்டா வைரஸ்’ கிருமியே, குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகவும் மோசமான வாந்தி, பேதி மற்றும் நீண்ட நாட்கள் பாதிக்கக்கூடிய பேதிக்கு முக்கிய காரணம், “ரோட்டா வைரஸ்’ தான் என, ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறு பரவுகிறது: ரோட்டா வைரஸ், மக்களின் சுகாதாரக் கேடுகளால் தான் பரவுகிறது. கழிவறை சென்று வந்த பின், சோப்பு போட்டு கை கழுவுதல், கையை சுத்தமாக கழுவிய பின், சாப்பாடு உட்கொள்ளுதல் மற்றும் உணவூட்டுதல் போன்ற, மிகவும் அடிப்படை சுகாதார வழிமுறைகளை மேற்கொண்டாலேயே போதும்; வாந்தி, பேதி பரவுவதை தடுத்துவிட முடியும்.
சிகிச்சை முறை: வாந்தி, பேதியால் குழந்தை பாதிக்கப்பட்டால், உடம்பில் உள்ள நீர்ச்சத்து மிகவும் குறைந்து விடுகிறது. அதனால், குழந்தை மிகவும் சோர்ந்து காணப்படுகிறது. மேலும், தொடர்ந்து போகும் பேதியால், உடம்பில் உள்ள உப்பு மற்றும் நீரின் அளவு மிகவும் குறைவதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. எனவே, சிகிச்சையின் முதற்படியே, உடம்பில் உள்ள நீரின் அளவை கூட்டுவது தான். ஆகையால், வாந்தி, பேதி உள்ள குழந்தைகளுக்கு, கண்டிப்பாக தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்காத குழந்தைக்கு (உதாரணமாக 2 வயதுக்கு மேல்) உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும்.
ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து: நோய்கள் வந்த பின், சிகிச்சை அளிப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து (Rotarix), பிறந்த குழந்தைகளுக்கு, ஆறு வாரம் முதல் கொடுக்க வேண்டும். இதை இரண்டு முறை, ஒரு மாதம் இடைவெளியில் கொடுக்கலாம். தற்போது, இது தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. வரும் காலங்களில், அரசு மருத்துவமனைகளில், இந்த சொட்டு மருந்து கிடைக்கப் பெறும் போது, நம் நாட்டில், வாந்தி, பேதி தொல்லை பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.

- டாக்டர் கே.கே.ரவிசங்கர்
குழந்தை நல சிறப்பு மருத்துவர்