FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 17, 2011, 03:37:32 PM
-
பூமியை கருபட்டு துணியால்
போர்த்துகிறது வானம்
மறந்து சட்டென நினைவுக்கு வந்தது போல
எரிகிறது தெருவிளக்கு
பணிவான தெருவிளக்கு
அகல்விளக்கு கூட
கர்வத்தோடு தலை நிமிர்ந்து எரியும் போது
இது அடக்கத்துடன்
தலை குனிந்து எரியும்
பகல் எல்லாம்
ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்து
இரவில் வரம் பெரும் விளக்கு இது
உச்சியில் வேர்கள்
ஒவ்வொரு மாலையிலும்
ஒரே ஒரு பூ மலரும்
ஒற்றைக் கிளை
அதிசய பூமரம் இது
தெருவிளக்கின் வாழ்க்கை
இரவு வாழ்க்கை தான் ஆனால்
இருட்டு வாழ்க்கை அல்ல
இந்த இருள் தேச கொடிக்கம்பத்தில்
பகல் நாட்டு கொடி
ஒவ்வொரு மாலையிலும் ஏற்றப்பட்டு
காலையில் இறக்கப்படுகிறது
தெருவிளக்கு எரிந்தவுடன்
அதை சுற்றி மொய்க்கும் பூச்சிகள்
அபூர்வமாய் தண்ணீர் சொட்டும்
குழாயடியில் மொய்க்கும் பெண்களைப் போல
முட்டாள் காற்று
தினம் இதை ஊதி அணைக்க முயன்று
தேற்று ஊளையிட்டு செல்லும்
ஏழை நன்றியோடு பார்க்கிறான்
திருடன் எரிச்சலோடு பார்க்கிறான்
இது இருவரையும்
பற்றற்றுப் பார்க்கிறது
ஒருவன் தினமும்
தடியால் அடித்து விட்டு செல்கிறான்
ஒருவன் சுவரொட்டியை
ஒட்டி விட்டு செல்கிறான்
ஒரு நாய் காலை தூக்கி
நனைத்து விட்டு செல்கிறது
ஒரு துறவி போல இது
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறது
புத்தகத்தோடு தன் மடியில்
வந்தமரும் ஒரு ஏழை சிறுவனின்
தலையை அன்போடு வருடுகிறது
தன் வெளிச்சத்தில் இன்னொரு வெளிச்சம்
உண்டாவதை நினைத்து கர்வம் கொள்கிறது
இன்னொரு சிறுவன் வருகிறான்
விளக்கை கண்டதும் கல்லை தேடுகிறான்
இந்த வெளிச்சத்திலேயே
விளக்கு குமிழை நோக்கி கல்லை எறிகிறான்
அவன் எதற்காக கல்லை எறிந்தான்?
அதை கனி என்று நினைத்தானா
அல்லது சிரிக்கும் பைத்தியம் என்று நினைத்தானா
அல்லது இந்த உலகுக்கு
வெளிச்சம் தர வந்தவர்களுக்கெல்லாம்
இந்த உலகம் தந்த மரியாதையை தருகிறானா
தட்டுத் தடுமாறி வந்த
குருடன் ஒருவன்
கம்பத்தில் மோதுகிறான்
இப்போது தெருவிளக்கு அவமானத்தால்
தலைகுனிந்து நிற்கிறது
-
அதை கனி என்று நினைத்தானா
அல்லது சிரிக்கும் பைத்தியம் என்று நினைத்தானா
அல்லது இந்த உலகுக்கு
வெளிச்சம் தர வந்தவர்களுக்கெல்லாம்
இந்த உலகம் தந்த மரியாதையை தருகிறானா
ithula lasta sonathuthan unmai nadakirahu inga ;)