Posted by: VenMaThI
« on: Today at 12:40:15 PM »யாருமில்லா தனி உலகம்
நமக்கென நாம் - இல்லை இல்லை
உனக்கென நானும் எனக்கென நீயும்
நமக்காய் நாம் மட்டுமே ...
ஓடி ஆடி களைத்த நொடியிலும்
கலையாத அந்த அழகான கூந்தல்....
சீரான பற்கள் சீர்குலைந்தாலும்
குறையாத அந்த காதல் புன்னகை...
நெடுந்தூரம் பயணித்தும் - வயோதீக
வலி வந்தும்... நடையே நாட்டியமான கால்கள்..
பற்றிய நாள் முதல் இந்த நொடி வரை
என்றுமே விட்டு விலகாத கைகள்...
மணமுடித்த நாள் முதல்
இதோ இந்த தருணம் வரை
எனக்காய் என் தாயாய் நீ..
என்றுமே உன் முதல் குழந்தையாய் நான்...
நரை வந்து சூழ்ந்தாலும்
நாடி நரம்பு தளர்ந்தாலும் - தோலில்
சுருக்கம் வந்து சேர்ந்தாலும்
என்றும் மாறாதடி நம்மீது நாம் கொண்ட காதல்..
பால் தேடும் மழலை போல்
உன் பாசம் தேடும் பிள்ளையாய் நான்
அழும்போது தேற்றும் தாய்போல்
அன்பால் என்னை அரவணைக்கும் அம்மாவாய் நீ...
அறுபது ஆனாலும் அழகு குறையல
ஆச்சி ஆனாலும் அன்பு மாறல
அதே அன்பும் அதே பாசமும்
அன்றும் இன்றும் என்றும் எனக்காய்...
அன்றும் ரசித்தேனடி உன்னை
உன் துடுக்கான குறும்புகளுக்காய்....
இன்றும் ரசிக்கிறேனடி உன்னை
கிழப்பருவம் எய்தியும் மாறாத உன் குறும்புகளை...
என்றுமே சலிக்கல உன்னுடனான இப்பயணம்
இன்னும் பலகாலம் வாழ நினைக்கிறேன்
நீ இல்லா உலகமதை கனவுலயும் காண விரும்பல...
இறைவனிடம் இதை மட்டுமே என் வரமாய் கேக்கிறேன்...
ஆயுசுக்கும் அன்பா ஆதரவா வாழ்ந்தாச்சு
அம்மாவா அவ எனக்கும் அப்பாவா நான் அவளுக்கும்
வேறென்ன கேப்பேன் கடவுளே - எங்களுக்கு
சாவிலும் பிரியாத வரம் மட்டும் போதும்...
இறந்தும் பயணிப்பேன்...
எனக்கான என்னவளுடன்...
என்றுமே கைகளை பற்றிக்கொண்டு
என்றுமே அவளை ரசித்துக்கொண்டு....

