Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Kavii
« on: May 26, 2026, 11:24:33 PM »

உடைந்த கண்ணாடி இதயம்... உருமாறிய பயணம்!

பளிங்கு போல இருந்த என் இதயம் - அன்று
சுக்கு நூறாய் உடைந்து போனதே!
தாங்க முடியாத இந்த வலியால் - என்
சந்தோஷங்கள் எல்லாம் தொலைந்ததே!

"அன்பு வைத்தது ஒன்றே நான் செய்த தவறு" - என்று
அழுது தீர்த்தது என் மனமே!
உயிராய் நினைத்த அந்த ஒரு உறவு - என்னை
உடைத்துப் போனது ஏனோ?

பிரிவின் வலி நெஞ்சைக் கிழித்த போது - நான்
பித்துப் பிடித்துத் தவித்துப் போனேன்!
தாங்க முடியா வேதனைக்குள் சிக்கி - என்
தன்னிலை மறந்து துடித்தேன்!

ஆனாலும்...
அதே கவலையில் வீழ்ந்து கிடக்க - நான்
அறிவற்றவள் இல்லையே!
பிரிவின் வலிகளைக் கடந்து செல்ல - என்னை
அறிவின் தேடல்களில் நிரப்பிக் கொண்டேன்!

நிமிடங்களை வீணாக்க விரும்பாமல் - என்
நினைவுகளை வேறு திசைக்கு மாற்றினேன்!
மனதை எந்நேரமும் மும்முரமாக்கி - அந்த
மௌன வலியைக் கொன்றுவிட்டேன்!

அவ்வப்போது கசிந்து வரும் கண்ணீர் - அன்று
அள்ளித் தெளித்த பாசத்தின் எச்சம்!
சுதந்திரப் பறவையாய் சிறகை விரித்தேன் - என்
சொந்தப் பாதையில் பயணத்தைத் தொடங்கினேன்!

கடந்து வந்த கசப்பான நினைவுகள் - இனி
கனவிலும் என்னைச் சுட வேண்டாம்!
தனிமை எனக்குத் தந்த பாடம் - நான்
தனித்துவமாக வாழப் போதும்!

பெண்ணே... நீ கலங்காதே!
உன் மனதைத் தேற்றிக்கொள்...
நிலையிலா இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை,
உன் மீது மட்டும் நம்பிக்கை கொள்!
காயங்கள் ஆறும், காலம் மாறும்,
உன் துணிவே உனக்குத் துணையாகும்!

உடைந்தது இங்கே இதயம் அல்ல - உன்னைச்
சிறைபிடித்து வைத்திருந்த இரும்புக் கூண்டு!
சிதறிய கண்ணாடிச் சில்லுகளில் தெரியும் உன் பிம்பம் - நீ
சிகரம் தொடப் பிறந்த புது விடிவெள்ளி!
மீண்டு வா தோழியே... அழுதது போதும்!
விண்ணைத் தொட உனது சிறகுகள் போதும்!


Posted by: Thooriga
« on: May 26, 2026, 10:54:46 PM »

“ஒருத்தனை முழு வாழ்க்கையா நம்புறது தப்பில்ல...
ஆனா அந்த நம்பிக்கையை
தூக்கி எறிஞ்சிட்டு போற அளவுக்கு யாரையும்
நம்ம உயிரோட கலக்கக்கூடாதுனு
இப்போ தான் கத்துக்கிட்டேன்…

ஒரு காலத்தில
‘அவன் இல்லாம நான் இல்ல…’ன்னு நினைச்ச நான்…

இப்போ
‘அவன் இல்லாததால தான்
என்னை நான் கண்டுபிடிச்சேன்…’ன்னு
அமைதியா சிரிக்க கத்துக்கிட்டு இருக்கேன்…

அவன் போன நாள்ல இருந்து
என் மனசு மட்டும் இல்ல…
என் கனவுகளும் உடைஞ்சது…

நான் கட்டிய எதிர்காலமே
கண்ண முன்னாடி சாம்பலான மாதிரி இருந்தது…

ஆனா…

அந்த சாம்பலுக்குள்ள இருந்துதான்
இப்போ நா புதுசா எழுந்து நிற்க கத்துக்கிட்டேன்…

யாராவது நம்மை விட்டு போனா
நம்ம வாழ்க்கை முடிஞ்சிடாது…

அது

நம்மை நாமே புரிஞ்சிக்க ஆரம்பிக்கிற
ஒரு புதிய ஆரம்பம் தான்…

இப்போ
யார் கூடவும் உயிரா பழகுறதுக்கு முன்னாடி
என்னோட மனசை
நான் பாதுகாக்க கத்துக்கிட்டேன்…

அதிகமா அன்பு கொடுக்குறதுக்கும்
ஒரு எல்லை இருக்கணும்னு புரிஞ்சிக்கிட்டேன்…

நான் உடைஞ்சது உண்மை…

ராத்திரி முழுக்க அழுததும் உண்மை…

ஆனா...

அதே கண்ணீர்ல இருந்து தான்
இப்போ நான் கொஞ்சம் கொஞ்சமா
பலமா மாறிக்கிட்டு இருக்கேன்…

அவன் என்னை ஏமாத்தினது
என் தோல்வி இல்ல…

உண்மையா நேசிச்ச என் மனசுக்கான சாட்சி…

இப்போ நான் யாரையும் வெறுக்கல…

ஆனா...

என்னை நான் இழக்குற அளவுக்கு
யாரையும் இனிமேல் நேசிக்க மாட்டேன்…

ஏன்னா…
ஒருத்தர் போயிட்டாங்கன்னு
வாழ்க்கை நின்னுபோகாது…

சிலர் நம்மை உடைக்க வருவாங்க…
ஆனா அந்த உடைச்ச துண்டுகளிலிருந்தே
நம்மள நாமே
மீண்டும் உருவாக்கிக்கணும்னு
வாழ்க்கை கத்துக்கொடுக்கும்…”

Posted by: Shreya
« on: May 26, 2026, 10:45:47 PM »

                                                     காதல் கடந்து!!


காதல் மட்டுமே
பெண்ணின் உலகமல்ல,
அவள் இதயம் உடைவதற்கு
அதுமட்டுமே காரணமுமல்ல!

கோடிப் பேராசை
அவள் கொள்வதில்லை,
சின்னஞ்சிறு எதிர்பார்ப்புகள்
சிதையும்போதே உடைகிறாள்!

​தாலாட்டுப் பாடித் தந்த
பெற்றோரை இழக்கும்போது,
வேர் அறுந்த மரமாக
விழுந்தே அழுகிறாள்!

​பாதி உடலென்று நம்பிய
கணவனை இழக்கும்போது,
மங்கல நாணோடு சேர்த்து
மகிழ்ச்சியையும் புதைக்கிறாள்!

​உதிரத்தில் சுமந்து பெற்ற
பிள்ளையை இழக்கும்போது,
தன் உயிரையே இழந்தவளாய்
பிணமாகிப் போகிறாள்!

​தன்மானம் இழந்து
தலைகுனிய நேரிடுகையில்,
அவள் கண்ணியம் குறையும்போது
கண்ணீரில் கரைகிறாள்!

ஆயுள் முழுக்க அவள்
காத்திருந்த கனவுகள் யாவும்,
கண்ணெதிரே தகரும்போது
நம்பிக்கை இழக்கிறாள்!

​அவன் தான் தன் உலகமென
அத்தனையும் நம்பியபின்,
அவசியம் தீர்ந்தவுடன் அவன்
விலகும்போது ஏமாறுகிறாள்!

​தன் தூய்மையான முதல் காதல்
இப்படித் தோற்குமென்று,
அவள் முட்டாளாய் நின்ற தருணத்தில்
முற்றிலுமாய் உடைகிறாள்!

​தன்னை வெறும் பகடைக்காயாய்
பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும்,
தடுக்க முடியாத் தவிப்போடு
தனிமையில் அழுகிறாள்!

கண்ணாடித் துண்டுகளாய்
அவள் கனவுகள் சிதறுகையில்,
அள்ளி அணைக்க இங்கே
அன்புள்ளங்கள் யாருமில்லை!

​புன்னகையைத் தொலைத்துவிட்டு
பூட்டிய அறைக்குள்ளே,
விடைதெரியா கேள்விகளுடன்
தினமும் போராடுகிறாள்!

வீழ்த்த நினைத்த வலிகள் யாவும்,
அவளின் மகுடமாய் மாறிப்போகும்!
காலத்தின் காலடிப் பாதையிலே,
பேராற்றலாய் வீறுநடை போடுவாள்!
Posted by: Luminous
« on: May 26, 2026, 10:28:18 PM »

நம்மை காப்பாற்ற வருபவர் யார்… நாமே அல்லவா?”

“நாம் ஏன் அழ வேண்டும்…?”
என்று ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்
ஒரு நாள் எரிந்து எழும் கேள்வி உண்டு…
மென்மையான இதயம் கொண்டதற்காகவா
நம் உயிர் சிதறிய கண்ணாடி போல
சுக்குநூறாக உடைய வேண்டும்…?
அன்பை நம்பியதற்காகவா…
அமைதியாக நடந்ததற்காகவா…
மரியாதையாய் வாழ நினைத்ததற்காகவா
பெண்ணின் கண்களில்
இவ்வளவு கண்ணீர் சேர்க்கப்பட்டது…?

சிறுகுழந்தை முதல்
முதிய பெண் வரை
பயம் என்ற நிழலை சுமந்தே வாழ்கிறார்கள்…
வீதி பார்த்து நடக்க வேண்டும்…
இரவை கணக்கிட்டு சுவாசிக்க வேண்டும்…
சிரிப்பிற்கே கூட எல்லை வைக்க வேண்டும்…

ஏன்…?
இந்த உலகத்தில் இன்னும்
பெண்ணின் உடலை
ஆசைக்கான பொருளாக பார்க்கும்
கொடூர மனங்கள் உயிரோடு இருக்கின்றன…
பாலியல் வன்கொடுமை என்பது
ஒரு உடலை மட்டும் காயப்படுத்தும் குற்றமல்ல…
ஒரு பெண்ணின் மனதை…
அவள் நம்பிக்கையை…
அவள் நிம்மதியை…
அவள் சிரிப்பையே கூட
உடைத்து சிதைக்கும் கொடுமை…
சிறுமியின் குழந்தைத்தனத்தையும்
ஒரு பெண்ணின் பாதுகாப்பு உணர்வையும்
திருடி செல்லும் இருள் அது…

ஒவ்வொரு முறையும்
“யாராவது காப்பாற்றுவார்கள்…”
என்று ஏன் காத்திருக்க வேண்டும்…?
அரசாங்கம் காப்பாற்றும்…
பெற்றோர் காப்பாற்றுவார்கள்…
சகோதரன் வருவான்…
கணவன் துணையாக இருப்பான்…

ஆனால்…
ஒரு பெண்ணின் உயிரின்
முதல் காவலன்
அவளே ஆகக் கூடாதா…?
ஏன் நம் கைகளுக்கு
துணிவு கற்றுக் கொடுக்கக்கூடாது…?
ஏன் நம் மனதுக்கு
“பயப்படாமல் எதிர்த்து நில்”
என்று சொல்லக்கூடாது…?

கண்ணீர் விடுவதைவிட
குரல் உயர்த்த கற்றுக்கொள்வோம்…
அஞ்சித் துடிப்பதைவிட
எதிர்த்து நிற்க கற்றுக்கொள்வோம்…
பெண் என்பது
அழுவதற்காக பிறந்த உயிரல்ல…
அவள் உயிர் தருபவள்…
அவள் உலகம் சுமப்பவள்…
விழுந்தாலும் மீண்டும் எழும்
புயலின் பெயர்…

தற்காப்பு என்பது
சண்டை மட்டும் அல்ல…
“இல்லை” என்று தைரியமாக சொல்லும் நாவும் தற்காப்பு…
தவறை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் குரலும் தற்காப்பு…
அபாயத்தை உணரும் விழிப்புணர்வும் தற்காப்பு…

சிறுமிகளுக்கு சொல்லுங்கள் —
அவர்கள் பலவீனமல்ல என்று…
அவர்களின் உடல் அவர்களுடையது என்று…
யாராவது தவறாக தொடினால்
அமைதியாக இருக்க வேண்டாம் என்று…
இளம்பெண்களுக்கு சொல்லுங்கள் —
கல்வியோடு
தற்காப்பு கலையும் அவசியம் என்று…
துணிவு அழகை விட முக்கியம் என்று…
அம்மாக்களுக்கு சொல்லுங்கள் —
மகள்களை பயத்தில் வளர்க்காதீர்கள்…
துணிவில் வளர்த்திடுங்கள்…

சமூகத்திடம் கேளுங்கள் —
பெண்கள் எப்போது வரை
தங்களின் சுதந்திரத்தை
பாதுகாப்புக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று…?

ஒரு பெண் பாலியல் வன்கொடுமையால் அழும்போது
அவள் மட்டும் உடைவதில்லை…
ஒரு குடும்பத்தின் நிம்மதியும்…
ஒரு தாயின் இதயமும்…
ஒரு தலைமுறையின் நம்பிக்கையும்
அதோடு சிதறி விடுகிறது…
அதனால்…
இனி அழுகையை மட்டும் வாரிசாக விடாதீர்கள்…
துணிவையும் விடுங்கள்…
பயத்தையும் மட்டும் கற்றுக்கொடுக்காதீர்கள்…
எதிர்த்து நிற்கும் நெருப்பையும் கற்றுக்கொடுங்கள்…

ஏனெனில் —
ஒவ்வொரு பெண்ணின் உள்ளிலும்
அழுதுகொண்டிருக்கும் இதயம் மட்டும் இல்லை…
அநியாயத்திற்கும்
பாலியல் வன்கொடுமைக்கும் எதிராக
எழுந்து போராட காத்திருக்கும்
ஒரு சக்தியும் உறங்கிக்கொண்டிருக்கிறது…!

LUMINOUS 😇🧡💛💚💜💯✌
Posted by: Thenmozhi
« on: May 26, 2026, 10:15:18 PM »

  "வானத்தில் பறக்கும்
      என்னவன் "

அன்பான அப்பாவாக
உன்  குழந்தைகளுக்கு !
அருமையான மகனாக
உன் பெற்றோருக்கு !
ஆசை கணவனாக எனக்கு !
இனிய சகோதரனாக
உன் சகோதரிகளுக்கு !
உற்ற தோழனாக
உன் நண்பர்களுக்கு !
திகழ்ந்த உன்னத உறவு நீ!

வானத்தில் பறக்க
ஆசைப்பட்ட உன்னை
என் மனம்  தடுமாறிய போதே
வேண்டாம் என்றேன்!
வீணாக பயம் வேண்டாம் என்று
வீம்பாய் கிளம்பினாய் நீ...
கிளம்புமுன் நீ பார்த்த பார்வை இன்னும்
மனதில் இருந்து மறையவில்லை..

புன்சிரிப்புடன் வழியனுப்ப வைத்தாய்
எங்கள் எல்லோரையும்!
பெற்றோரின் ஆசீர்வாதத்துடனும்,
பெற்ற பிள்ளைகள் வாங்கி வர
சொன்ன பொருட்களின் பட்டியலுடனும்...
எங்களைப் பிரியும் வலி
முகத்தில் காட்டிக்காமல்
கிளம்பினாய் அவசரமாய்!

நீ புறப்பட்டு ஒரு மணி நேரம்
கூட ஆகவில்லை!
செய்தி கேட்டு கண்ணாடி போல்
உடைந்தது என் மனசு!
விமானம் மட்டுமல்ல
என் மனது கூட சுக்குநூறாய் போனது!

ஒரு கணம் உறைந்து போய்
என் கண்களில் கண்ணீர்
தாரை தாரையாக...
அம்மா "அப்பா சாக்லேட் வாங்கிட்டு வருவாரா"
என்று இளைய மகனும்!
"பையன் சென்றடைந்து விட்டானா"
என்று அவங்க அப்பாவும்...
யாருக்கு என்ன பதில் சொல்ல?
மௌனமாய் அழுததுதான்!

காதல் மணம் புரிந்து
களிப்புற்று வாழ்ந்த என்னை
விதவை கோலம் தரித்து
வீட்டில் உட்கார வைத்துவிட்டாயே!
உன்னை  தூக்கி வளர்த்த
தாய்,தந்தையை கைவிட்டுவிட்டாயே!
அன்பாய் குழந்தைகளை பள்ளிக்கு
அழைத்து சென்ற நீ இன்று
பாதியில்  விட்டுச் சென்றது ஏனோ?

வானில் பறக்க ஆசைப்பட்ட நீ
இன்று வானிலேயே
மாயமாய் கருகிப் போனது..
எங்கள் வாழ்க்கையை நிற்கதி
ஆக்கிவிட்டதுதான் நிதர்சனம்...

பலரும் பலவிதமாய் கூறிய போது
நான் நம்பவில்லை....
இன்று நீ இந்த உலகில் இல்லை என்பதை
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை....

கடைசி நிமிட உயிர் போகும் வலியினை
இப்போது தினம் தினம் எங்களுக்கு
கொடுத்து சென்று விட்டாய் நீ!
உனக்கு கிடைத்து விட்டது
நிம்மதியான தூக்கம்!
இனி எப்போதும் எங்கள் வாழ்க்கையில்
தூக்கமே இல்லை என்பதை
நினைத்து பார்த்தாயா?

வாழ்க்கை முழுவதும் வலி
யாரிடமும் கூற முடியாமல்
இருட்டறையில் இதயம் நொருங்கி
அழுது புலம்புகின்றேன் !
ஏனென்றால் என்னை காதலித்த
என்னவன் உனக்கு மட்டுமே
என் இதயத்தின் வலி புரியும் !

கடைசியாக உன்னை தொட்டுக்கூட 
அழ முடியாத பாவி நான்..
உன் உடலும் உயிரும்
வானில் காற்றில் கலந்து
எஞ்சிய சாம்பலை
கருவறையில் வைத்து
காத்திருக்கிறேன் ...
என்னவன் என்னைத் தேடி
வருவான் என்ற கனவுடன்...



  Note: வான் விபத்தில் பலியான உயிர்களுக்கும்,அவர்களுடைய குடும்பங்களுக்கும்  இக்கவிதை சமர்ப்பணம்.

 










 






















Posted by: Rahmathulla
« on: May 26, 2026, 10:01:57 PM »


கனவே களையாதே



விடியல் வரும் என்று காத்திருந்தேன்
இரவுகள். மட்டும் நீள்கிறது.
நீ என்னை பிரிந்து
சென்ற போது..

நீ என்னை விட்டு சென்ற பின்பும் உன்மேல் உள்ள காதல் சிறிதளவும் குறையவில்லை என்பதை தினமும் என் கண்களில் இருந்து வரும் கண்ணீர் துளிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது..

உன்னை உயிருக்கு உயிரா நேசித்தேனே தவிர வேற எந்த தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை..

என் இதயம் உன்னை நேசிக்க  தொடங்கியது.
என்னையே அறியாமல்..
அந்த இதயம் இப்போது சுக்கு நூறாக நொரிங்கி கிடக்கிறது..
என் இனியவளே தொலைத்து விட்டேன் என்று..

வாழதா வாழ்வு கிடைத்ததென்று.
மிக சந்தோஷத்தில் மிதந்த எனக்கு..

நீ கொடுத்த பரிசு
எனக்கு உன்னிடம் பேச விருப்பமில்லை என்று..

என் இனியவளே  நீ சொன்ன அந்த ஒரு வார்த்தையை கேட்டு
நான் மீளா துயரத்தில் தள்ள பட்டேன்...

 என் இனியவளே
என் இதயத்தில் உனக்கு மட்டும் தான்இடமுண்டு.
அதை ஏன் உணர மறந்ததேனோ...

நித்தம் நித்தம் உன்னை நினைத்து ஏங்கி வாழும் எனக்கு என்ன பதில் சொல்ல போறாய்..

என் காதலை ஏன் ஏற்க மறுக்கிறாயோ..

உன் ஞாபகம் என்னிடம் அழியாமல் இருக்கிறது..

உன் ஞாபகத்துடன் நான் மட்டும் அழிந்து கொண்டுயிருக்கிறேன்...
என் பாசம் உனக்கு தொல்லையாக இருக்கலாம். ஆனால் அந்த பாசம் ஒரு பொழுதும் வேஷம் ஆகாது

காலையில் கண் விழித்ததும். உன்னை தான் என் இதயம் தேடும்...

அது உனக்கு தெரிந்தும்  என் இதயம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா  போனதே. என்று என்னும் போது என் இதயம் வலிக்கின்ற வலி எப்படி சொல்லி புரிய வாய்ப்பேன்...

என் இனியவளே நான் உன்னை விரும்பியது குற்றம் என்றால்..

நாம் இருவரையும் சந்திக்க வைத்த அந்த இறைவன் மேல் தான் பிழை..
 
முதல் சந்திப்பிலே என்னை உனக்கு பிடிக்காது. அதை தெரிந்தும்.. உன்னை விட்டு  விலக என் மனம் இடம் கொடுக்க வில்லை..
காரணம் காதல் எப்பொழுதும் சண்டையுடன் தான் ஆரம்பமாகும்..

என்றாவது ஒரு நாள் என் கனவில் நீ வருவாய் என காத்திருந்த நாட்கள் உனக்கு தெரியாது..
அப்படி என் இனியவளே நீ கனவில்  வந்தால்..
என் விழி தூக்கத்தையும் நேசிக்கும்..

கனவே களையாதிரு!!!

என் இனியவள் என்னிடம் பேச வந்துருக்கிறாள்..
அவளுடைய பேசுக்கு நான் ரசிகன்.. அவள் இன்னும் கொஞ்ச நேரம் என்னிடம் பேசட்டும்..  இந்த நாள் மட்டும் இரவு நீளட்டும்..

விழியின் தூக்கமே என் இனியவள் எண்னிடம் பேசுகிறாள்..
எனக்கு நீ பகையாகமல்.. என்னை நிம்மதியாக தூங்க விடு..

 காலையில்  கண் விழித்ததும். என் இனிவளை கனவில் கண்டவுடன் மகிழ்ச்சி எனக்குள் அளவில்லாத  சந்தோசம்..

 என் இதயம் கனவிலும்  உன்னை தேடுதே..

உன் குரலை கேட்டு என் உயிர் வளர்த்தவன் நான்..
இன்றோ நீ பேசாமல்  உன் மௌனத்தில் என்னை கொள்கிறாய்...

என்னையும் என் வாழ்க்கை முறைகளையும் மாற்றிய தேவதை நீ..

என் வாழ்க்கை முறையில் என்னை வெற்றியாளனாய் மாற்றிய உன்னை எப்படி மறப்பேன் சொல் இனியவளே..

உன்னை மட்டுமே நினைத்து வாழ பழகிவிட்டேன் உன்னை மட்டுமே நினைத்து வாழ்வது கூட உனக்கு கடினமாக தோன்றினால்..

என்னை மன்னித்து விடு...

இனியவளே என்னை விட்டு  பிரியாதே.. என்  இதயத்தை தூக்கி
 எரியாதே..

இந்த ஜென்மம் எனக்கு முடிந்தாலும். மறு ஜென்மம் எடுத்து வருவேன்.. என் காதலை சொல்லி உன் இதயத்தில் எனக்கொரு இடம் கொடுப்பாயாக...
 
        TQ
Priyamudan
Posted by: KS Saravanan
« on: May 26, 2026, 10:01:36 PM »

புதிய பயணம்..!

உடைந்த இதயத்தையும் உறங்காத கண்களையும்
மறைக்க தெரிந்தவள் நான்
ஆனா இன்றோ என் கண்ணீர் கடலில்
நீந்த தெரியாமல் மூழ்குறேன்..!

சிரிப்பின் பின்னால் சிதறிய மனசு
அதை மதியாதோர் மத்தியில்
கவனித்து மதித்தவன் அவனொருவனே
என் கைவிடக் கூடாதவனாகவும் மாறினான்..!

காலம் பல கடந்தது 
கனியாய் காதல் கனிந்தது..ஆனால்
மாற்றம் எனும் மாயையில்
அந்த காதலும் காற்றில் கரைந்தது..!

அழகு மெழுகு சிலையென்ற காதல்
கருகும் தீயாய் உருகியது
கைவிடாது இருந்த மனது
கண்ணாடி போல உடைந்தது..!

ஒட்ட வைக்க எண்ணியே
நித்தம் நானும் நினைக்கிறேன்
உடைந்த போன கண்ணாடி போல்
அத்தனை நினைவும் குத்துதே..!

அவன் போன பாதை இன்னும்
என் கண்ணுல மறையல
நான் இருக்கும் நிலைமை
இன்னும் அவனுக்கு புரியல..!
கண்ணை மூடினா
கனவாய் அவன் நினைவு
கண்ணீரால் மைவிழியும் உருகுது..!

இரவு வந்தால் பயம் பற்றிகொள்ளுது
தூக்கம் கூட அவன் பெயரை சொல்லுது
அவன் இல்லாத உலகமோ
வெற்றிடமாக இருக்குது
தனிமை எனும் நோயோ
என்னை வாட்டி வதைக்குது..!

என்னை உடைத்தது
காதல் என நம்பினேன்..அனால்
அவன் குடுத்த பொய்யான
நம்பிக்கைதான் என புரிந்தது..!
உடைந்த இதயம் கூட
ஒருநாள் மீண்டும் துடிக்கும்
ஆனா அந்த துடிப்பில்
முன்னிருந்த அன்பின் சத்தம்
மீண்டும் கேட்காது..!

வலிகளை தாங்கிய  என் மனசு
வைரம் போல மாறிடுச்சு
இப்போ நான் கண்ணீருல நீந்தறேன்
கரை சேர துடிக்கிறேன்
என் வாழ்க்கையை வாழ
புதிய பயணம் தொடங்குறேன்..!
Posted by: Oonjal
« on: May 26, 2026, 10:00:50 PM »

காத்திருப்பின் ஏக்கம்

எனக்கு இந்த ஆசை
எப்போ வந்தது என்று
எனக்கே தெரியவில்லை
என்ன மாதிரியே
எனக்கு ஒரு பெண் குழந்தை
வேண்டும் என்பது
என்னுடைய கனவு..

மனம் நிறைந்த சந்தோஷத்தோடு அடி எடுத்து வைத்தேன் இல்வாழ்க்கையில்...
எங்கள் காதல் வாழ்வின் அடையாளமாய் கருவுற்றேன்
என் கால்கள் தரையில் நிற்கவில்லை...
ஆகாயத்தில் பறந்தேன் சந்தோசத்தில்...

உள்ளங்கையில் வைத்து
தாங்கினர் குடும்பத்தினர்
எது சாப்பிட்டாலும்
வாந்தி எழும்பி
நடக்க கூட தெம்பு
இல்லை உடம்பில்..
மயங்கி மயங்கி சரிய
அள்ளி கொண்டு
ஓடினர் ஆஸ்பத்திரிக்கு...
சிறு ஊசிக்கும் அலறும் நான் குளுக்கோஸ் ஏறுவதை
பார்த்து கொண்டிருந்தேன் அமைதியாய்...

நாட்கள் நகர நகர
நின்று போனது வாந்தி மயக்கம்
மேனி எங்கும் மினுமினுப்பு ஏறியது
பார்க்கும் அனைவரும் பொட்ட பிள்ளை தான் என்றனர்
நானும் என் மகளோடு
விளையாடினேன்
கொஞ்சி பேசி...

பிரசவ நாள் நெருங்க நெருங்க
இனம்புரியாத பயம் என்னில்
ஆஸ்பத்திரிக்கு சென்றேன்
மரண பயத்தில்...
முதல்முதலாக பிரசவ வலி
எப்படி இருக்கும்
என்பதை உணர்ந்தேன்
உயிரை கொடுத்து
வெளி உலகிற்கு அழைத்து வந்தேன் என் மகளை...

சிறு அழுகுரல்
காதில் மோத மகன் பிறந்திருக்கிறான்
என்ற வார்த்தையை கேட்டு கொண்டே மயக்கத்திற்குள்
சென்றேன்..
மயக்கம் தெளிந்ததும்
மகனை காட்டினர்
பிங்க் கலரில் இருந்த அந்த
ரோஜா மொட்டை பார்த்ததும்
என் மனதில் தோன்றியது
என் மகளுக்கு அண்ணன் பிறந்திருக்கிறான் என்றே..

சிறிது காலம் கடந்தது
ஒவ்வொரு மாதமும்
வயிற்று வலியால்
துடிக்க ஆரம்பித்தேன்
பார்க்காத மருத்துவம்
இல்லை ஆனால்
வலி மட்டும் குறையவில்லை
பெண் குழந்தைக்கான
என் ஏக்கம்
தீர வலியாய்..
பார்க்கும் அனைத்து
மருத்துவரும் சொல்லும் ஒரே வார்த்தை உங்களுக்கு குறை ஒன்றும் இல்லை
காத்திருங்கள் என்பதே...
இன்று வரை காத்திருக்கிறேன்..
இருட்டில் அமர்ந்து அழும்போது
உன் நினைவுகள் மட்டும்
தான் என் துணை..

நீ வராத
ஒவ்வொரு மாதமும்
என் இதயம் கண்ணாடி போல் சுக்குநூறாக உடைந்து போவது 
யாரும் அறியாதது...
என் கண்களில்
வழியும் கண்ணீர்
உன் மடி தேடி
அலைகிறது
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என
ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன்..
Posted by: Forum
« on: May 25, 2026, 10:26:22 AM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 403

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்