Posted by: Shreya
« on: Today at 05:18:38 AM »விதி மாறும்!!
காலையில எந்திரிச்ச உடனே
கண்ணாடி முன்னாடி போய் நின்னேன்
என் முதுகுல இருந்த மூட்டையைப் பார்த்து
எனக்குள்ளே நானே அழுதுகிட்டேன்..
"ஏண்டா உனக்கு இந்த நிலைமை?"னு
என் மனசு என்கிட்ட கேட்டுச்சு
மத்தப் பசங்க படிக்க போகும்போது
உன் கைகள் ஏன் குப்பை பொறுக்குது?
அழுக்கு துணியும் காயம்பட்ட காலும்
இதுதான் உன்னோட விதியா?
படிக்கணும்னு ஆசைப்பட்டுட்டு
குப்பை தூக்குறதுதான் உன் மதியா?
ஊராரு உன்னை ஏளனமா பார்ப்பாங்க
குப்பை பையன் சொல்லித் தள்ளி வைப்பாங்க
நீ ஆசைப்படுற அந்தப் படிப்பு
உனக்கு கிடைக்காதுனு சொல்லுவாங்க..
இப்படி என் மனசுக்குள்ளே
கேள்விகள் கேட்டு அழுதுகிட்டு இருந்தேன்
அப்போதான் அந்தக் கண்ணாடிக்குள்ளே
ஒரு ஆச்சரியத்தை நான் பார்த்தேன்!
கண்ணாடிக்குள்ளே நின்ன அந்தப் பையன்
அழுக்கு மூட்டையைத் தூக்கிப் போட்டான்
அழகா ஒரு சீருடையைப் போட்டுக்கிட்டு
தோள்ல புத்தகப்பையை மாட்டிக்கிட்டான்..
அவன் முகத்துல ஒரு தனி வெளிச்சம்
கண்ணுல சாதிக்கணும்ன்ற வைராக்கியம்
என்னைப்பார்த்துப் பரிதாபப் படாம
அவன் கம்பீரமா நின்னான்!!
அவன் என்கிட்ட மெதுவா சொன்னான்:
"ஏன் வறுமையை நினைச்சுக் கலங்குற?
முதுகுல இருக்குற மூட்டையைப் பார்த்து
ஏன் இப்படி பயந்து நடுங்குற?
இன்னைக்கு உன் கையில இருக்குற குப்பை
நாளைக்கு உன் படிப்பை நிறுத்தாது
உன் நெஞ்சுல இருக்குற லட்சிய கனவை
இந்த உலகம் அழிக்க முடியாது!!
பகல்ல நீ படுற கஷ்டமெல்லாம்
உன் அறிவை இன்னும் கூர்மையாக்கும்
ராத்திரியில நீ படிக்கிற படிப்பு
உன் குடிசைக்குள்ள வெளிச்சம் கொண்டுவரும்..
இந்தக் கண்ணாடி வெறும் பிம்பம் இல்ல
இதுதான் உன்னோட நிஜமான எதிர்காலம்
நீ படுகிற இந்த அவமானம் எல்லாம்
நாளைக்கு நீ ஜெயிக்கிறதுக்கான அடையாளம்!!
அழுறதை நிறுத்திட்டு நிமிர்ந்து நில்லு
உன் உழைப்பை மட்டும் நம்பி நட"னு
கண்ணாடிக்குள்ள இருந்த என் மனசாட்சி
எனக்கு தைரியம் கொடுத்துச்சு..
அவன் சொன்ன பேச்சைக் கேட்டு
என் கண்ணீரைத் தொடைச்சுக்கிட்டேன்
முதுகுல மூட்டை இருந்தாலும்
நெஞ்சுல படிப்பை வச்சுக்கிட்டேன்!]!
இன்னைக்கு நான் குப்பை பொறுக்கலாம்
ஆனா என் அறிவு குப்பையாகாது
கல்வியென்ற ஆயுதம் என் கையில இருந்தா
வறுமை என்னை ஒன்னும் செய்யாது..
கண்ணாடி காட்டுன அந்தப் பாதையில
நான் ஓடத் தயாராகிட்டேன்
என் தோள்ல புத்தகப்பை ஏறும் நாள்
தொலைவுல இல்லைனு புரிஞ்சுக்கிட்டேன்!!!

