Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Luminous
« on: Today at 06:42:28 AM »

🔥 சாம்பலாக்கும் சுடர் 🔥
போர் வெடிக்கிறது எல்லைகளில்,
ஆனால் அடக்குமுறை வெடிக்கிறது வீடுகளின் உள்ளே.
வெளியில் குண்டு,
உள்ளே கட்டளை.
வெளியில் ரத்தம்,
உள்ளே அமைதியின் பெயரில் அடிமை.
“அமைதியா இரு” என்ற வார்த்தை
அவள் நாவை வெட்டுகிறது.
“வெளியே போகாதே” என்ற கட்டளை
அவள் கனவுகளைச் சுடுகிறது.
ஆனால்,
அவள் கண்களில் எரியும் அந்த தீ
பயத்தின் தீ அல்ல.
அது பழியின் தீ.
அது பொறுமை சாம்பலான பிறகு
புரட்சியாக வெடிக்கும் தீ.
படத்தில் போல
அவள் கைகளைச் சுற்றிய சங்கிலி
இரும்பு அல்ல,
ஆணாதிக்கத்தின் அகந்தை.
அந்த அகந்தை
அவள் நரம்புகளில் ஓடும்
உறுதியின் நெருப்பால் உருகும்.
அவள் இனி
பாதுகாப்புக்காக பூட்டப்பட்ட பறவை அல்ல,
புயலை கிழிக்கும் மின்னல்.
நெருப்பில் வெந்து அழிய மாட்டாள்.
அந்த நெருப்பை விழுங்கி
அதே நெருப்பாக மாறுவாள்.
அவள் எழும்பும் போது
சங்கிலி மட்டும் உடையாது,
அடிமைத்தனத்தின் வரலாறே சிதறும்.
போர் துப்பாக்கியால் வெல்லப்படலாம்,
ஆனால்
ஒரு நாட்டின் மரியாதை
அதன் பெண்கள் எழும்பும் போது தான் காக்கப்படும்.
அவள் இனி மௌனம் அல்ல,
அவள் முழக்கம்.
அவள் இனி அடிமை அல்ல,
அவள் தீர்ப்பு. 🔥
Posted by: Shreya
« on: Today at 12:31:13 AM »

நித்தம் ஒரு போர், அவள் நிழலோடும் நிஜத்தோடும்..
நிந்தனைச் சொற்கள் நெஞ்சில் தைக்கும் முட்களாய்..
அடுப்படிப் புகையில் தொலைந்த கனவுகள் ஒருபுறம்..
அலுவலகப் போட்டியில் நசுங்கும் உணர்வுகள் மறுபுறம்!!

தன் விருப்பத்தைச் சொல்லத் துடித்தால்..
"திமிர்" என்று முத்திரை குத்தியவர்கள்..
அவளது மௌனத்தை வசதியாக்கிக் கொண்டு..
அதிகாரம் செய்த உறவுகள் ஏராளம்!!

ஒவ்வொரு முறையும் வீழ்த்தும் போது அவள் நினைக்கிறாள்,
இதுவே கடைசி வீழ்ச்சியாய் இருக்கட்டும் என்று..
ஆனால் உலகமோ மீண்டும் ஒரு புதிய சங்கிலியைத் தேடும்,
அவள் கால்களைக் கட்டிப் போட..கனவுகளைச் சிதைக்க!!

"உன்னால் முடியாது" என உலகம் சொல்லும் போது,
"முடித்துக் காட்டுகிறேன்" என மெளனமாய் முழங்குகிறாள்..
பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் பிம்பம் இவள்!!

​வலிகள் அவளுக்குப் பழகிப் போனது..
வடுக்கள் அவளுக்குப் பாடமானது..
அழுவதை அவள் நிறுத்திய போது..
அறிவோ அவளுக்கு ஆயுதமானது!!

​​உலகம் சொன்னது "முடியாது",
உள்ளம் சொன்னது "முயன்றுபார்",
முயற்சி இன்று வெற்றியில்..
முழுமையாய் அவள் விடுதலையில்!!
Posted by: Yazhini
« on: March 02, 2026, 11:54:46 PM »

கட்டுண்டு கிடப்பது கைகள் மட்டுமல்ல
உள்ளத்தில் எழும் உணர்வுகளும்...
தானே பூட்டிக்கொண்ட விலங்கு தான்
தன்னிலை மறக்க பூட்டிக்கொண்ட விலங்கு தான்
ஆனால் காவலுக்காக அல்ல
சில பார்வைகளுக்காக பூட்டப்பட்ட விலங்கு...

சிறுவயதில் காப்பாக இருந்தது இன்று
கருங்கல் பாரமாகி போனது..
வட்டத்தை வரைந்த பந்தமும்
இன்று காணாமல் போனது
விமர்சனம் செய்யும் சுற்றமும்
மேலும் சங்கிலியால் இறுக்கியது...

பிம்பத்தைக் காட்டும் ஆடியும்
வேறொரு தோற்றத்தைக் காட்டிடவே
தேடலை நிறுத்திய சங்கிலியே இன்று
தன் பிடியை தளர்த்திடவே...
வறண்டு கிடந்த வேர்களும்
புதிய பூக்களை சொறிந்திடவே


பாலை நிலத்தின் மணலும்
மாரியின் சாரலில் குளிர்ந்திடவே...
இறுக பற்றிய சங்கிலியில்
புதிய விடியலும் உதித்திடவே...
போலித்திரையில் அடைப்பட்ட உள்ளமும்
பூட்டிக்கிடந்த விலங்கை தானே உடைத்திடவே...
புதியவள் ஆகிறாள் புத்துயிரோடு புணருகிறாள்
Posted by: Thenmozhi
« on: March 02, 2026, 11:32:21 PM »

     "பெண்களே மாபெரும் சக்தி"

பெண்கள் நாட்டின் இரு கண்கள்
பெண்கள் தான் இவ்வுலகின் தூண்கள்
பெண்கள் வாழ்க்கையின் ஆதி
பெண்கள் உறவுகளின் உயிர்
பெண்கள் சமூகத்தின் அத்திவாரம்

பூமியில் உயிர்களை மலர வைக்கும் மாபெரும் சக்தி பெண்கள்
ஒரு ஆண் இன்றி பெண்ணால்
வாழ முடிவது  பெண்களின் பெரும் தன்னம்பிக்கையே!
பெண் இன்றி ஆண்களால்
வாழ முடியாத காரணம்
ஆண்களின் தன்னம்பிக்கையே
பெண்கள் தான்!

பெண் சக்தி மாபெரும் சக்தி
இவ்வுலகில்....
பொறுமை பெரிது என்று வாழும்,
எத்தனையோ பெண்கள்...
வறுமையில் கூட போராடி வென்று
வாழும் பெண்கள்...
பெற்ற குழந்தைகள்,கணவன்,பிறந்த வீட்டார்,புகுந்த வீட்டார் என பாசத்தினால்
தாங்கிப் பிடிக்கும் சக்தி அவள்!

இன்னலில் அழுதாலும் ,
விடியலைத் தேடி புன்னகையுடன்
வீறுநடை போடுபவர்கள்
சிங்கப் பெண்களே!
தன் பசி,தூக்கம் விடுத்து
தன்னைச் சார்ந்தவர்கள்
பசி போக்கிடும் பெண் சக்தி!

ஒரு பெண்ணின் சிறு வயதில்
கற்றுத் தரப்படுகிறது "பொறுப்பு'
இளமையில் போராட ஆரம்பிக்கின்றாள்
தன் கனவுகளை நோக்கி...
ஒரு பெண் கல்வி கற்பதால்
குடும்பம் மட்டுமல்ல பயனடைகிறது வளமான நாடும்....
பட்டம்,பதவிகள் பல பெற்றாலும்
தன் கடமைகளை மறவாத
பெண் சக்தி அவள்!

விஞ்ஞான உலகை இயக்குவது சக்தி
பெண் தெய்வங்களை அழைப்பதும் சக்தி
அதே போன்று மனித உலகினை
இயக்குவது பெண் சக்தி அல்லவா ?
பெண் சக்தியை மாபெரும் சக்தி என்று கூறுவதில் வியப்பில்லையே!

பெண்கள் தைரியமானவர்கள்-ஆனால்
இந்த உலகம் கூறுவது "திமிர் "பிடித்தவள்
பெண் நியாயத்திற்காக குரல் கொடுத்துக்கிட்டே இருப்பாள்
அத்துமீறும் ஆண்களை சுட்டெரிக்கும்
மாபெரும் சக்தி பெண்களுக்கு உண்டு!

புரட்சி பெண்ணே உன் புன்னகையால்
பூமியை வென்றிடு!
அடிமை சட்டங்களை உடைத்தெறிந்திடு!
ஆணவக்காரர்களை அடக்கிடு!
தீயவர்களை திருத்தி நல்லவர்களாக
வாழ வைத்திடு !

பெண்கள் தொழில்,கல்வி, அரசியல்,
சமூகசேவை,விண்வெளி,விவசாயம்,
வர்த்தகம் எங்கும்  வியாபித்து
உள்ளமை பெருமையே!

உலகில் உயர்ந்தது உனது மன தைரியம்
உலகில் மிகப்பெரிய உடல் வலியாம்
பிரசவ வலியை தாங்கிய உனக்கு
அனைத்து தடைகளும் பெரிய வலி அல்ல..

யாருக்கும், எதற்கும் பெண்ணே
நீ அடிமை அல்ல..
அடிமை விலங்கினை தகர்த்தெறிந்திடு பெண்ணே உன் மாபெரும் சக்தியால்..
பெண்ணே உன்னால்  மலரட்டும் வண்ணமயமான வளமான மனித உலகம்!
நானும் பெருமை கொள்கின்றேன்
"பெண்" என்ற உன்னதமான பிறப்பினால்...










Posted by: Forum
« on: March 02, 2026, 08:33:29 AM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 398

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்