Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Yazhini
« on: January 27, 2026, 11:11:41 PM »

ஆயிரம் உறவு இருப்பினும்
ஆற்றா உறவு அண்ணன்...
அன்னையின் படிப்பினையை விட
அதிகம் போதித்தது என் அண்ணனே...
அண்ணனின் கைப்பிடிக்குள்
தந்தையின் பாதுகாப்பு
அம்மாவின் அன்பு
ஒருங்கே உணர்ந்தேன்...

ஆனாலும்.....
குட்டி சாத்தானாக என்னை
எள்ளி நகையாடுபவனும்(மாற்றுபவனும்) அவனே
குப்பைத்தொட்டி குழந்தை என்னை
மீட்டெடுத்து தன் தங்கையாக வளர்பவனும் அவனே
ஆழ்ந்து உறங்கையில் கையிலுள்ள
என் அன்பு பொம்மைக்கு
மொட்டையடித்து காது குத்துபவனும் அவனே...

கறி குழம்பிலுள்ள நள்ளிக்காக
கையை கடித்து சண்டையிடுபவனும் அவனே...
கடையிலுள்ள தின்பண்டத்திற்காக என்னை
அப்பாவிடம் ஏவி விட்டு அடிவாங்க
வைக்கும் ஆக சிறந்தவனும் அவனே

தனியே பேருந்தில் பயணம்
செய்ய கற்று தந்த
என் ஆசான் அவனே
இன்று தன்னந்தனியே
வாழ்க்கையை பயணிக்க
கற்று தருகிறான் மௌனியாக

அண்ணா....
மீண்டும் உன் அன்னைமடி
வேண்டும்
அதே சிறுபிள்ளையாக
உன் குட்டிசத்தானாக
இப்படிக்கு என்றும் ஏங்கும்
உன்னால் மீட்க பட்ட
உன் குப்பைத்தொட்டி தங்கை....
Posted by: joker
« on: January 27, 2026, 12:27:36 PM »

தம்பி பாப்பா வேணுமா
தங்கச்சி பாப்பா வேணுமா என்ற
பெற்றோரின் கேள்விக்கு
விடையாய் நான்

நான் சிரித்தால்
உனக்கு சந்தோஷம்,
நான் அழுதால்
தூக்கம் கூட உனக்கு
தூரம் தான்

உலகத்துக்கு முன்
நாம் சண்டையிட்ட
கணங்கள் ஏராளம்
ஆனால்
உலகமே எதிர்த்து நின்றாலும்
என் கூடவே நிற்கும் உன் அன்பு
தாராளாம்

நான் பேசாமல் இருந்த நாட்களில்
என் அமைதியின்
அர்த்தம் புரிந்தவன் நீ
என் சிரிப்புக்குப் பின்னால
ஒளிச்சு வைத்த வலியையும்
கண்டுபிடித்தவன் நீ.

உன் கனவுகளை
நீ விட்டுக்கொடுத்து
என் கனவுகளை
நீ தூக்கி நிறுத்தினாய்,

நான் பெரியவளா ஆனாலும்
உன் கண்ணுக்கு நான்
எப்பவும் சின்ன தங்கை தான்

இந்த ஜென்மம் போதாதுனா கூட
அடுத்த ஜென்மத்திலும்
பெண்ணாக பிறக்கணும்னா
அண்ணனா நீ தான் வேணும்.

எத்தனை பேரு வந்தாலும்
என் வாழ்க்கை முழுக்க
நான் தனியாக இல்லை என்று
உறுதியாய் சொல்ல
ஓர் உறவு
என் அண்ணா


****Joker***
Posted by: SweeTie
« on: January 27, 2026, 04:52:46 AM »

அன்னை முகம் கண்டிலேன்
தந்தை அரவணைப்பு அறிந்திலேன்
கடவுள்  தந்த பொக்கிஷம் அண்ணா
என் மூச்சும் பேச்சும் அவனே

 கைகளால் என் தலைகோதி
 தூங்கவைப்பான்  அண்ண
சொர்க்கபுரி எதுவென்றால்
என் அண்ணா மடி என்பேன் 

விடியலில் தெரிந்த முகம்
பாசத்தை சொரிந்த  முகம்
கை கோர்த்து  விளையாடி
கடந்துவந்த நாட்களவை

ஒரு கொடியில் இரு மலர்கள்
மூத்தவனின் பாசத்தில்
சின்னவள் நான் திளைத்திருந்தேன்
எங்கிருந்தோ வந்த என் காதல்
எங்களை இரு துருவம் ஆக்கியதே

வேண்டாம் அந்த காதல்
விட்டுவிடு என்றான் அண்ணா
கெஞ்சினேன்  .குளறினேன்
அசையாத கல்லானான் அண்ணா

காதல் என்ற வில்லங்கம்  என்
கழுத்தை சுற்றி  நெருக்கியதால்
சொத்து சுகம் வேண்டாமென்று
சற்று விலகி வந்துவிட்டேன்

சொந்தம் ஒரு கண்ணென்றால்  என்
பந்தம்  மறு கண்ணல்லவா?
பாசக் கயிற்றில்  தொங்கியவள் இன்று
நேசப் பிடியில்  சிக்கிவிட்டேன்

தொண்டையில் சிக்கிய
சோற்று கவளம்  போல
விழுங்கவும்  முடியாமல்
துப்பவும் முடியாமல்
இரண்டும் கெட்ட நிலை

ஆயிரம்தான்  இருந்தாலும்
அன்பு வற்றிப்போகுமா? 
ஒரு கூட்டில் வளரும்  இரு குயில்கள்
ஒன்றை ஒன்று   மறக்குமா?

நாளைய  விடியலில்
என் அண்ணன்முகம் காண   
தினம் தினம் வேண்டுகிறேன்
 
Posted by: சாக்ரடீஸ்
« on: January 27, 2026, 01:14:21 AM »

அஞ்சலி சொல்லப்படாத மறுபக்கம்


அஞ்சலி…

சிறு மழை துளியாய்
என் மனதிற்குள் வந்தாய்
சத்தமில்லாமல்
மனதில் இருக்கும்
ஈரத்தை உணரச் செய்தாய்

மொழி தெரியாத
வயதிலும் உன் சிரிப்பாலே
எல்லோரிடமும் பேசினாய்

அப்பாவின் கைகளில்
ஒரு சின்னஞ்சிறு
கனவாக இருந்தாய்

அம்மாவின் கண்களில்
காணல்நீராகி பிறகு
அவளின் தீராத
ரணங்களாய் மாறினாய்

என் கவலைகளும்
தங்கையின் பயங்களும்
உன்னைச் சுற்றி
வெறுப்பாக நின்றாலும்
நீ மட்டும் என்றும்
அன்பாகவே இருந்தாய்

நீ ஓடினாய்
நீ விழுந்தாய்
மீண்டும்
நீ எழுந்தாய்
எங்கள் நாட்களை
சிரிப்பொலியில் நிரப்பினாய்

ஒரு நாள்
உன் சிரிப்பு
மௌனமானது
உன் கண்கள்
அமைதியாக மூடியது

அஞ்சலி…
ஏந்திரி அஞ்சலி ஏந்திரி
என்று நாங்கள் கதறியது
உன் காதுகளில் விழவில்லையா ?

ஆனால்

நீ எங்களை
விட்டு சென்றாலும்
நம் வீட்டில்
உன் சிரிப்பு இன்னும்
ஒலித்துக்கொண்டு இருக்கிறது

அஞ்சலி
நீ இல்லாத இடத்திலும்
உன் இருப்பை
உணர செய்தவள் நீ

உன் வாழ்க்கை
வேண்டும் என்றால்
ஒரு சிறு கவிதையாக இருக்கலாம்
ஆனால்
உன் நினைவு
என்றென்றும் எங்கள்
மனதில் ஒரு தொடர்கதை

அஞ்சலி
நீ ஒரு சொல் அல்ல
நீ அன்பின் வரி

- இப்படிக்கு அண்ணன் அர்ஜுன்
Posted by: Agalya
« on: January 26, 2026, 11:22:54 PM »

கருப்பு நிலா
ஓடி ஆடி விளையாடி
எவ்வளவு
கலைத்து போய் இருந்தாலும்
காலயர்ந்து உறங்கினாலும்
என் விசும்பல் சத்தம் போதும்

என் அண்ணனை
உற்சாகப்படுத்த
என்னை வாரி அணைத்து
தூக்கத் தெரியாமல் தூக்கி
அம்மாவின்
சிறு கோவத்துக்கும் ஆளாகி

அழாதே என் தங்க கிளியே
என் கருப்பு நிலாவே
என என்னை கொஞ்சி
என் விசும்பல் சிரிப்பாக
மாறும் வரை
விடாமல் முயற்சிப்பவன்
என் அண்ணன்

அப்போது தொடங்கிய இந்த பந்தம்
இரவு பகல் பாராது
சிறு உடல் உபாதை ஏற்பட்டாலும்
அம்மாவின் அருகிலேயே
நான் என்ன செய்கிறேன்
என்று கண்ணின்
இமை போல காத்தவன்
என் அண்ணன்

இதோ நானும் வளர்ந்து
பள்ளியும் செல்ல
ஆரம்பித்து விட்டேன்.
அவளே நடந்து வந்து விடுவாள்
என அம்மா கூறினாலும்

என் பள்ளி முடிவதற்கு முன்பே
மிதிவண்டியில் வந்து நின்று
என்னை ஏத்திக்கொண்டு
வீடு வந்து சேர்த்ததற்கு பின்
தான் மறு வேலையே
என் அண்ணனுக்கு

எனக்கு வேண்டும் என்று
கை நீட்டிய மறுகணமே
என் கையில்
அதை வாங்கி தருபவன்
என் அண்ணன்

இவ்வளவு அன்பா
என்று வியர்ந்து பார்த்த
என்னுள்ளும்
மரியாதை கலந்த
அளவில்லாத அன்பு உள்ளது
என் அண்ணனுக்காக

இன்று அதை எனக்கு
காட்டத் தெரியாவிட்டாலும்
அவனது வாழ்க்கை பயணத்தின்
 ஒவ்வொரு நிகழ்விலும் 
நான் உறுதுணையாக இருந்து
என் அன்பை
வெளிப்படுத்துவேன்
 உன்னையும் பெருமைப்படுத்துவேன்
அண்ணே !!!

Posted by: Thenmozhi
« on: January 26, 2026, 10:46:24 PM »

   அழகிய அண்ணன் - தங்கை உறவு

ஒரே கருவறையில் அம்மாவின்
தொப்புள் கொடியில்
உருவான உறவு நாம்!
அண்ணா நீ சீக்கிரமாய் பூமிக்கு வந்து
உதித்து விட்டாய் என்னைப் பாதுகாக்க !
நான் அவதரித்தேன் பொறுமையாக
ஏனென்றால் உன் தங்கையாக வாழ்வதற்கு!

குழந்தை பருவத்தில் - உன்
மடிதான் என் பஞ்சு மெத்தை!
உன் மடியில் அன்பாக
தலை சாய்த்த போது உணர்ந்தேன்
தாயின் பாசத்தை உன்னிடம்!

நீ உன் பிஞ்சு விரல்களால்
என் முடியை வாரி விடுவாய்!
"பாப்பா பாடு " என்பாய்
நான் பாடகி என்று நினைத்து
பாடுவேன் பாடல்களை....

என் பிஞ்சு விரல்களை நீட்டி -நான்
"டாடி பிங்கர்..." என ஆரம்பிக்க
நீயோ அண்ணா பிங்கர்...
சொல்லு என்பாய்!
அண்ணா பிங்கர் தான்
 நீளமாகவும் நடுவிலும்
இருக்கிறது என்பாய்!
நீ சொன்ன போது புரியவில்லை?
இப்போ புரிகிறது அண்ணா உறவு
உலகினில் அசைக்க முடியாத
பெரிய உறவு என்று!

பாடிகிட்டே தூங்கிடுவேன் உன் மடியில்
நீயோ என்னை இரசிப்பது மட்டுமல்லாமல்,
என் தலை முடியை வாரி,
வண்ண வண்ணமாக அலங்கரிப்பாய்!
அம்மா சொல்லிக் கேள்விப்பட்டேன்
இந்தப் பசுமையான நினைவுகளை!

என் கைபிடித்து நடை பழக்கினாய்!
என் எண்ணங்கள் ,ஆசைகளைப்
பரிமாறிக் கொள்ளும் உற்ற 
தோழன் நீ அண்ணா.....
என் இன்பம், துன்பம்,வெற்றி,தோல்வி
அனைத்திலும் என் கூட இருப்பாய் நீ!

உன்னிடம் பேச ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் நான் சொல்வது
ஒன்றே ஒன்றுதான் miss you anna....
வேலையின் நிமிர்த்தம் குறைந்ததே
நாம் பேசி பழகும் நேரம்....

உடன்பிறக்கவில்லை என்றாலும்
இணையதளத்தில் பாசத்தால்
இணைந்த அண்ணாக்கள் பலர் உண்டு!
நான் பாக்கியசாலி தான்
அண்ணா -தங்கை உறவில்....

அண்ணா நீ இல்லாமல் உணர்ந்த தனிமையை போக்கி என்னை
இன்புறச் செய்தவர்கள் அரட்டை அரங்க அண்ணாக்களும், நண்பர்களுமே!
உடன் பிறந்த தங்கை இல்லையே
என்று ஒரு அண்ணாவின் ஏக்கம்...
கண்டிப்பாக நான் இருப்பேன்
அன்பு தங்கையாக.....

உலகில் ஒப்பிட முடியாத உறவு
அண்ணன் -தங்கை உறவு
அன்பினால் இணைக்கப்பட்ட
அழகான உறவு இதுவே!
அடுத்த ஜென்மத்தில் கூட
தொடர வேண்டும் இந்த
அண்ணன் - தங்கை உறவு!

குறிப்பு:- இந்த கவிதையினை என் அண்ணா,sethu anna,VidaaMuyarchi anna,RajKumar anna,Anoth anna,strom rider anna,vijay vj anna,Bunny anna எல்லோருக்கும் சமர்ப்பிக்கிறேன்.









Posted by: Luminous
« on: January 26, 2026, 10:37:14 PM »

கேள்வியாக நிற்கும் அண்ணன்–தங்கை
ஒரு அண்ணன்…
ஒரு தங்கை…
இன்னும் உலகம் என்னவென்று
முழுசாக அறியாத
சின்னச் சின்ன பிஞ்சுகள்.
அவர்களுக்கான உலகம்
புத்தகம் இல்லை.
பள்ளி இல்லை.
அப்பாவும் அம்மாவும் தான்.
அந்த அப்பாவும் அம்மாவும்
காதலித்தவர்கள்.
வேறு மதம்…
ஆனால்
ஒரே மனிதம்.
இரண்டு வீடுகள்
ஒப்புதல் சொல்லவில்லை.
“நம்மால் மாற்ற முடியாத விஷயம்” என்று
மௌனமாகத் தள்ளிவிட்டு,
ஊரைவிட்டு ஒதுங்கி,
யாருக்கும் இடையூறு இல்லாமல்,அவர்கள்
அமைதியைத் தேடி
வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால்…
அமைதி சிலருக்கு
பொறுக்கவில்லை.
அரசியலுக்காக,
அதிகாரத்துக்காக,
மதத்தின் பெயரை
ஆயுதமாக மாற்றிய
சில குள்ள நரிகள்
அந்த வீட்டை ஆடின.
ஒரு இரவு…இருள்,கத்தல்கள்,ரத்தம்
இரு உயிர்கள் அணைந்தன.
அப்போது
ஒரு கேள்வி எழுந்தது.
மதம் காப்பாற்றப்பட்டதா?
ஜாதி உயர்ந்ததா?
இல்லை…
ஒரு அண்ணனும்
ஒரு தங்கையும் மட்டும்
அநாதைகளானார்கள்.
அந்த நாளிலிருந்து
அந்த அண்ணன், தங்கை
தெருவின் ஓரத்தில்
மனிதர்களை நோக்கி
கேள்வியாக
உட்கார்ந்திருந்தார்கள்.
“எதற்கு எங்கள் அப்பா அம்மா சாகணும்?”
பதில் இல்லை.
அமைதி மட்டும்.
ஒரு நாள் மழை.
சிக்னலில் நின்றிருந்த கார்கள்.
அந்த தங்கை
தன் அண்ணனின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டு
ஓரமாய் நின்றாள்.
ஒரு கார் நின்றது.
உள்ளிருந்து
ஒரு அம்மா
தன் குழந்தையை
மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த காட்சியைப் பார்த்த
இந்தச் சின்னத் தங்கை
மழையில் நனைந்த
கண்களோடு
மெதுவாக சொன்னாள்
“நம்ம அம்மாவும்
நம்மள இப்படித்தான் பிடிப்பாங்க…மழை வரும்போது.”
தங்கை கேட்டாள்,
“அம்மா எங்க?”
அவன் பதில் சொல்லவில்லை.
அண்ணன்
தன் கையில் இருந்த
குட்டி குட்டி ரேகைகளை
அமைதியாகப் பார்த்தான்.
அந்த ரேகைகளில்
அப்பாவின் விரல்கள் மட்டும் இல்லை…
அவன் தூக்கிய நாட்கள் இருந்தது.
அம்மாவின் அரவணைப்பு மட்டும் இல்லை…
அவள் துடைத்த கண்ணீர் இருந்தது.
அந்த கைகளில்
ஒரு வீடு இருந்தது.
ஒரு உலகம் இருந்தது.
ஆனால்…
இப்போ
அந்த உலகம்
ஒரு மதத்தின் பெயரில்
மண்ணுக்குள் தள்ளப்பட்ட
மௌனக் கதையாக
மாறிப் போயிருந்தது.
அவர்கள் சாகவில்லை…
அவர்கள் சாகடிக்கப்பட்டார்கள்.
யாரால்?
மதத்தால்?
ஜாதியால்?
அரசியலால்?
இல்லை…
மனிதத்தை விட
அடையாளத்தை
பெரிதாக்கிய
மனங்களால்.
எப்போது மாறும் இந்த நிலை?
யார் மாற்றுவது?
நான் நினைத்தால் மாறுமா?
நீ நினைத்தால் மாறுமா?
ஒருவேளை…
அந்த மழையில்
எதையும் கேட்காமல் நின்ற அண்ணன், தங்கையின்
கண்களில் ஒரு நிமிடம்
நம் பார்வை
தடுமாறினால் போதும்…
நம் மனசுக்குள்ள
ஒளிந்து கிடக்கும்
மதமும்,
ஜாதியும்,
அடையாளங்களும்
மௌனமாக
உதிர ஆரம்பிக்கும்.
நாம் நினைத்தால்தான்......
அன்று முதல்
மதம் ஒரு அடையாளமாக
இருக்கும்.
மனிதம் மட்டும்
முதன்மையாக.

LUMINOUS 😇💜✌🙏💐
Posted by: Sethu
« on: January 26, 2026, 10:36:16 PM »

கஷ்டங்கள் பல வந்தாலும்
கவலைகள் ஆயிரம் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி
சமாதானம் ஆகும் ஒரு புனித உறவு அண்ணன் தங்கை உறவு
என்பது மறுக்க  முடியாத
உண்மை தானே!

எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
என் அண்ணன் மடியில்
தலை வைத்து படுக்கும் போது
என் மனம் லேசாகவும் ,மகிழ்ச்சியாகவும் மாறும் அதிசயம் என்னுள் கண்டேன்!

அண்ணா என்றென்றும் எனக்கு
இன்னொரு தகப்பன் நீ தானே!
என் மீது அதிக அக்கறையும், பாசமும் என் அண்ணனிடம் மட்டுமே கிடைக்கும் என்பதை நான் அங்கு அறிவேன் அண்ணா!

பிறக்கும்போது உன்னை தெரிந்து இருந்தால் அம்மா என்று அழுவதற்கு பதில் அண்ணா என்று அழுது  இருப்பேனே...
அண்ணா அம்மா இல்லாத போது ஒரு தாயாக இருப்பவள் தங்கை தானே... தங்கைக்கு ஈடு இணை வேறு இல்லை
இந்த பூவுலகில் !

நான் தவறான பாதையில் செல்லும்போது, என் தலையில் ஒரு குட்டு  வைத்து ,அவ்வாறு  செல்லாதடா அண்ணா இவ்வாறு செல் என்று சொல்லும் என் தங்கை தாயாக மாறுகிறார் என்பது உண்மைதானே !

எவ்வளவு கஷ்டப் வந்தாலும்
என் அண்ணா என்று நீ
அழைக்கும் போது ....
உனது அண்ணா என்ற சொல் எனக்கு அமிர்தம் ஆகிறது தங்கையே!
 
அண்ணா என்றால் அன்பு !
அண்ணா என்றால் பாதுகாப்பு என்பதை இந்த பூவுலகில் வாழும் அனைத்து தங்கைகளுக்கும் தெரிந்த உண்மைதானே! வாழ்க அண்ணா தங்கை பாசம்!
வளர்க அண்ணா தங்கை உறவு!
Posted by: Shreya
« on: January 26, 2026, 10:33:19 PM »

                                                   பாச மலர்!!

உன் விரல் பிடித்து பள்ளி சென்ற
காலம் இன்றும் நினைவிருக்கிறது..
வீட்டுக்கு வந்ததும் ரிமோட்டிற்காக நாம்
செய்த யுத்தங்களும், கோபத்தில் நான்
கடித்த உன் கையில் பதிந்த பற்களின் தடமும்,
அதற்காக அம்மாவிடம் நான் வாங்கிய
அடிகளும்—இன்று இனிக்கும் நினைவுகள்!!

​கடைக்குச் செல்லச் சொன்னால் நீ அசையமாட்டாய்;
உன் வேலையையும் நானே செய்தபோது பொங்கிய
ஆத்திரம், உன் மௌனமான பாசத்தை
உணர்ந்தபோது கரைந்து போனது.
நண்பர்களுக்கெல்லாம் நீ “ஹிட்லர்”!
என் முதல் காதலை நீ மிரட்டி முடித்தபோது
கோபம் வந்தாலும், அதன் பின்னால்
இருந்த உன் அக்கறையை உணர்ந்தேன்!!

​கல்லூரி செல்லும் வழியில் பிரேக் ஒயர் அறுந்தபோது,
வெறும் கையால் அதைப் பிடித்து விபத்தில் இருந்து
நம்மை மீட்ட உன் சமயோசித புத்தியைக்
கண்டு மிரண்டு போனேன்..
என்னை கிண்டல் செய்தவனைத் தேடிச் சென்று நீ கொடுத்த பதிலடியில்தான், "அண்ணா" என்ற சொல்லின் பலம் புரிந்தது!!

​அம்மா உனக்கு ஊட்டி விட்டபோது பொறாமைப்பட்டு
நானும் சண்டையிட்டிருக்கிறேன்,
“அவன் மட்டும் தான் உனக்கு புள்ளையா?” என்று..
தெருவே கைதட்டிய உன் முதல் நடனமும்,
என் உடையைச் சரி செய்த உன் தகப்பன்
அக்கறையும் என் பெருமிதங்கள்!!

நீ வாங்கித் தந்த அந்த 1100 மொபைலும்,
செக் செய்த உன் பயமும்,
அக்கா திருமண மேடையில் நீ பாடிய அந்த
நொடிகளும் என் வாழ்வின் அழகான பக்கங்கள்!!

இன்றும் உன் நினைவுகளைத் தாங்கியபடி
என் அலமாரியில் இருக்கிறது நீ தந்த முதல் புடவை!
​விபத்தில் கை ஒடிந்து வந்த உன்னை வண்டியில்
வைத்து அழைத்துச் சென்றபோது,
“தங்கச்சி நல்லா ஓட்டுறியே” என நீ சொன்ன
அந்த ஒற்றைப் பாராட்டு இன்றும் என் நினைவில்!!

பழைய பிளாக் காரில் பயணித்த அதே சுகம்
இன்றும் உன் புதிய காரில் மாறவே இல்லை..
சின்னச் சண்டையில் நீ என்னைப் புரியவில்லை
என்ற ஆதங்கத்தில் உயிரை விடத் துணிந்தேனே..
அது உன்மேல் இருந்த கோபமல்ல, உன்
அன்பு குறைந்துவிடுமோ என்ற பயம்!!

​முதன்முதலில் உன்னைப் பிரிந்தபோது, உன் கண்களில்
வழிந்த கண்ணீரில் என் உயிர் பிரிந்தது..
இன்று நாம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில்
இருந்தாலும், உன் மார்பில் சாய்ந்து அழுது
தீர்க்கத் துடிக்கிறது என் இதயம்!!

எத்தனை காலமானாலும் உன் தங்கை
என்றும் உன் அன்புக்காக ஏங்கும் அந்தச்
சின்னப் பெண் தான்!!!
Posted by: Forum
« on: January 25, 2026, 11:08:27 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 396

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்