Post reply

Warning - while you were reading 7 new replies have been posted. You may wish to review your post.

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Ninja
« on: Today at 12:06:41 AM »

‘கொல்லக் காட்டை வித்துட்டோம்ப்பா’
அம்மாவின் குறுஞ்செய்தி
மனதை அறுத்துக்கொண்டே இருந்தது.

சித்தப்பா சீர் செதுக்கி,
தூக்கி விட்ட
கழனிக் காடு

“எவ்வளவு கஷ்டம்னாலும் விவசாயத்த விட்டுராதய்யா”
பாட்டனின் சொல்லில்
வேர் பிடித்த சித்தப்பனின் வீராப்பு
நினைவுகளில் மின்னிச் சென்றது.

“சவுக்கு போடலாம் ம்மா,
அது பாட்டுக்கு கெடக்கும்… "
"ஆர்.எஸ். பதிய போட்டு விடுவோம் ம்மா,
அது பாட்டுக்கு கிடக்கும்”
“வேணாம்மா, வித்துறாத,
 நான் வேலையை விட்டுட்டு
கொய்யா தோட்டம் போடுவேன்…”

என் ஒவ்வொரு
வாய் சவடாலுக்கும்
கழனி மாடு மேயும் களை காடாகி கொண்டிருந்தது.

அவ்வளவுதான்.
முடிந்தது.

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும்
சித்தப்பாவின் தலையிலும் தோளிலும்
சுமந்த வரப்பட்ட
உளுந்து மூட்டைகள், வாழைத் தார்கள்,
எள் ஆடி எடுத்த எண்ணெய்கள்,
கடலை சாக்குகள்
மண மணக்க நிறைந்திருந்த வீடது.

இனி உலுக்கிய புளிகள் எங்கே போகும்?

ராய முனீஸ்வரனுக்கு
உளுந்து அறுத்து ஆடி பட்ட சாகுபடிய
படையல் இட
ஆளுமில்லை.
ஊருமில்லை.
பேருமில்லை.

நட்ட மரமெல்லாம் இனி பட்டுப் போகும்.

“களையும் கருவேலமும் முளைச்சுக் கிடக்குற காட்டுக்கு
யாரோ பாசனம் பண்ணி பயிர் வைப்பாங்களா?”
அம்மாவின் நியாயங்கள்,
நியாயங்கள்தான்.

சித்தப்பாவின் மெலிந்த கால்கள்
நினைவுக்கு வந்தது
உழைத்தே உழைத்தே தேய்ந்து போன கால்கள்,
சேற்றுப் புண்ணின் காய்ந்த தழும்புகள் நிறைந்த கால்கள்.
பாட்டனின் கால்களும்
முப்பாட்டனின் கால்களும்
நினைவுக்கு வந்தது.
எந்த நிலத்து சேற்றையும் அறியாத
என் கால்களை மெதுவாக தடவிக் கொண்டேன்.
மனக்குடையான் ராய முனீஸ்வரா
நெலத்த மட்டும்
எப்பவும் தழைக்க வச்சிருய்யா.
Posted by: VenMaThI
« on: January 06, 2026, 11:22:15 PM »



கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
என என்றோ ஒருவன் பாடினான் அன்று.. அனால்
கடவுளுக்கு மட்டுமே நீ தொழிலாளி
இப்பாரில் வாழும் மனிதருக்கெல்லாம்
என்றுமே நீ முதலாளி என
நான் பாட நினைக்கிறேன் இன்று....

இப்புவியில் வாழும் உயிர்களை
அன்னையின் கருவில் விதைப்பவன் இறைவன். எனில்
அந்த கரு வளர உணவை வழங்கும்
விவசாயியும் நமக்கு கடவுள் தானே??

பசியில் அழும் குழந்தைக்கு
புசிக்க உணவு தருபவள் தாயென்றால்..
உலகமே பசியாற்ற உணவளிக்கும் நீ
அந்த தாய்க்கும் மேலேன்றால் மிகையாகுமோ??

குழந்தைக்கு தன் குருதியை பாலாக ஊட்டும் அன்னை போல் - விளையும் பயிர்களுக்கு
தன் வியர்வையை பாலாக ஊட்டுபவன் நம் விவசாயி..
அடுத்தவர் பசியை போக்க - என்றுமே
தன் பசியை மறந்து உழைப்பவன் இந்த விவசாயி..

நெற்ககதிர்கள் தலையசைத்த பூமியில்
இன்று காற்றாலைகளின் அரசாங்கம்...
அரிசி விளைந்த பூமியில் இன்று
அடுக்குமாடி கட்டிடங்களின் ஆரவாரம்...

பத்து மாதம் கருவில் வளர்ந்தால் தான்
குழந்தை ஆரோக்கியமாய் இருக்குமாம்..அதுபோல்
பக்குவப்பட்ட காலத்தில் பொறுமையாய் அறுவடை செய்தால் தானே உணவும் ஆரோக்கியமானதாய் இருக்கும்??

குறுகிய காலத்தில் விளைச்சல் தரும்
விஞ்ஞான விளைச்சல் வேண்டாம்
நம் விளைநிலங்களை விலை பேசும்
அந்த விஞ்ஞான வளர்ச்சியே வேண்டாம் என்போம்..

உலகையே நம் உள்ளங்கையில்  அடக்க
அந்த விஞ்ஞானத்தால் முடியும்
ஆனால் நம் உள்ளங்கையில் உணவை அளிக்க
நம் விவசாயத்தால் மட்டுமே முடியும்

வாடிய பயிரை கண்டு வாடும்
விவசாயின் நிலை மாறவேண்டும்
விவசாயி படிக்க முடியுமா தெரியவில்லை - ஆனால்
பட்டதாரிகள் விவசாயிகளாய் மாறவேண்டும்..

படித்தால் தான் சோறு என்ற நிலை மாறவேண்டும்
சேற்றில் கால் பதித்தால் தான் சோறு
என்ற நிஜம் புரியவேண்டும்..

நெற்களமும் ஒரு போர்க்களமே
இயற்கையுடன் போரிட்டு
வருணனின் வரம் பெற்று
ஆரோக்கியமான விளைச்சல் கண்டு
அகமகிழ்வோடு அறுவடை செய்யும்
 ஒவ்வொரு விவசாயியும்  வீரனே

இந்த உலகின் பசி போக்க
இந்தா புசி என்று உணவளிக்கும்
விவசாயியை அரவணைப்போம்
விவசாயத்தை காப்போம்....




அனைவருக்கும் இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் தின நல்வாழ்த்துகள்..🌾🌾



Posted by: joker
« on: January 06, 2026, 08:24:10 PM »

மஞ்சள் வெயில்
மண்ணில் சாயும் வேளையில்,
நிஜத்தின்
நிழல்களாய்  மனிதனும் மாடும்

ஏர் பிடித்த கைகள்
அரசரின் அரியணை காணாதவை,
ஆனால்
உலகின் பசியைத் தணிக்கும்
முதல் விரல்கள்

மண் கீறப்படுகிறது
வலியால் அல்ல,
நம்பிக்கையால்.
விதை விழுகிறது
இன்று அல்ல,
நாளை என்ற கனவோடு.

ஆனால்
உழுத பின்
அவனுக்கான
அங்கீகாரமோ ,
அவனின் வேர்வைக்கான
கூலியோ
கிடைக்கிறதா என்றால்
விடையாய்
கேள்விக்குறி?

சேற்றில்
கால்நடைகளின்
காலடி தடத்தில்
கடந்து போகிறது
பல தலைமுறைகள்

ஏர் ஓடும் பாதை போலத்தான்
மனித வாழ்க்கையும்,
நேராக இல்லை,
ஆனால்
வெற்றிக்கான அறுவடையில்
நிறுத்தமுமில்லை.

சுட்டு எரிக்கும் வெயில்
மழையோ வரமால்  சோதிக்கிறது,
பயிர் காத்திருக்கச் சொல்கிறது

இங்கு
வெற்றி ஆரவாரம் இல்லை
தோல்வி அறிவிப்பும் இல்லை
உழைப்பு மட்டும்
தினசரி வழிபாடு.

சூரியன் மறைகிறான்
ஆனால்
மீண்டும் உதிப்பான்
அதுபோல தான்
மனிதனின்
தன்னம்பிக்கையும்

ஏர் உழுதலும்
மனிதனின் வாழ்க்கையும்
ஒரு நாளின் கதையல்ல
அது
மண்ணில் எழுதப்படும்
முடிவில்லா நெடுங்கவிதை.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்


****JOKER****
Posted by: சாக்ரடீஸ்
« on: January 06, 2026, 01:33:01 PM »

ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒரு கதை உண்டு
ஆனால்
ஒரு உழவரின் கதை
மண்ணில் எழுதப்பட்ட வாழ்க்கை.
சில வரிகள்
சேற்றில் புதையும்
சில வரிகள்
நினைவுகளாய் மனதில் பதியும்.
அவர்கள்
இந்த உலகிற்கு தரும்
உணவே காலம்
எழுதும் ஓர் கவிதை.

உழவரின் கதைகள்
படிப்பதற்கு மட்டும் அல்ல
உணர்வுகளை உணர்ந்து
வாழ வேண்டியவை
சில வரிகள்
சோகமாய் கண்ணீராய் சிந்தும்
சில வரிகள்
நெருடலாய் நெருப்பாய் வழியும்
ஆனால்
சில வரிகள்
சிந்தனையின் விதையாக
நம்முள் வளர செய்யும்
வாழ்க்கையின் ஓட்டத்தை மாற்றும்.

எத்தனை கதைகள்
நம் வாழ்வில்
கடந்து வந்திருந்தாலும்
வேறு எந்தக் கதையோடும்
ஒப்பீடு செய்ய முடியாமல்
சிறந்த கதையாக
வெகு சில கதைகள் உண்டு
அதில் என்றும் நிலைத்து நிற்பது
உழவரின் கதை.

தொழில்நுட்பம்
விண்ணைத் தொட்டாலும்
ஒரு துளி உணவையும்
உருவாக்க முடியாது.
உழவன் சேற்றில்
கால் வைக்காமல்
நாம் சோற்றில்
கை வைக்க முடியாது.

மண்ணோடு பேசும்
உழவரின் விரல்களில்
எத்தனை கனவுகள்
எத்தனை ஆசைகள்
மழையில் நனைய
தவறிய விதைகளும்
உழவரின் வேர்வையில்
உயிர் பெறும்.

உணவுக்கு “உ” என்ற
முதல் எழுத்து வந்ததே
உழவனின் உழைப்பிலிருந்துதான்
உழைப்பின் முதல் எழுத்து
உழவனின் முதல் அடையாளம்
அதுவே அந்த “உ”

தை முதல் நாள் வந்தால்
பானையில் கொதிப்பது
வெறும் நெல் விதை அல்ல
அது உழவரின் நம்பிக்கை
அது உழவரின் மகிழ்ச்சி
அது மாடுகளின் மணியோசை
அது மண்ணின் வாசனை
எல்லாம் ஒன்றாக
பொங்கி வருவதால்தான்
அது பொங்கல்.

நாற்று நடும்
கைகளில்தான்
நம் வாழ்வின்
எதிர்காலம் இருக்கிறது
என்பதை மறக்காமல்
உழவரின் உழைப்புக்கு
நன்றியும் வணக்கமும்
செலுத்துவோம்.

உழவர் வாழ்க
மண் வளம் பெறுக
மனிதக் கதைகளில்
மிக அழுத்தமான கதை
உழவரின் கதையாக
என்றும் பொங்கி நிற்கட்டும்.

இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்
இனிய உழவர் தின நல்வாழ்த்துகள்
Posted by: Shreya
« on: January 06, 2026, 11:19:50 AM »

                                       மண் வாசனை..!

சூரியன் உதிக்கும் முன்னே அவனோ
சுறுசுறுப்பாய் எழுந்து விடுவான்
ஊரே தூங்கும் நேரம்தான்
விழி திறந்து நடந்தோடுவான்..

அவன் சேற்றில் கை வைத்தால்தான்
நாம் சோற்றில் கை வைக்க முடியும்..
சொந்த நிலம் கூட இல்லையென்றாலும்
அந்த மண்ணையே தாயாய் மதிப்பான்..!

பகலெல்லாம் சூரியன் சுட்டெரிக்க
வியர்வைத் துளி நிலத்தில் விழ..
முதுகெலும்பு வளைந்தாலும்
ஏர் பிடித்து உழைத்தே நிற்பான்..!

மழை பொய்த்தால் ஒரு கவலை..
மழை கூடினால் ஒரு கவலை..
கடன் சுமை கழுத்தை நெரிக்க
கண்ணீர்த் துளிகள் மண்ணில் வடிகின்றன..!

இயற்கை ஒருபுறம் சோதிக்க,
மனிதர்கள் மறுபுறம் வதைக்க..
ரத்தமெல்லாம் வியர்வையாய் சிந்தும் இவன்
உலகுக்கே உணவளிப்பவன்..
இன்றும் ஏழ்மையில்
வாடுவது கொடுமையல்லவா?

நாள் முழுதும் உழைத்த நிலத்தில்
இன்று முத்துச்சரமாய் நெல் மணிகள்..
வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள்
வீடு வந்து சேரும் பொன்னாளே..!

பானை சுற்றிய மஞ்சள் கொத்து
நம் வாழ்வில் மங்கலம் சேர்க்கட்டும்..
புதிய அரிசியின் வாசனையில்
வறுமை விலகிப் போகட்டும்..!

கரும்பின் இனிப்பைப் போலவே
அவன் வாழ்க்கை மாறட்டும்..
விளைந்த பயிருக்கு நல்ல விலை
அதுவே விவசாயி காணும் பெரிய பொங்கல்..!

உழைக்கும் கரங்கள் உயரட்டும்
உழவர் திருநாள் சிறக்கட்டும்
பானையில் பொங்கல் பொங்கட்டும்
வானம் மும்மாரி பொழியட்டும் 
மண் வாசனை எங்கும் பரவட்டும்
இனிதாய் மகிழ்ச்சி பெருகட்டும்..!


இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!!!
Posted by: SweeTie
« on: January 06, 2026, 08:33:32 AM »

காளைமாடு ரெண்டு கட்டி
கலப்பை பூட்டி வயல் உழுது
நாட்டு  சம்பா நெல் விதைத்து
ஏற்றமதில் நீர் இறைத்து
கன்னி  பெண்கள் நாற்றுநட்டு
குருவி காகம் கொத்தாம
நடுநடுவே வெருளிநட்டு
இரவு பகல் காத்திருந்து
விளைந்த  பயிர்….  அறுவடைக்கு
நாள் பார்த்து படையல் போட்டு 
கதிர் வெட்டி சூடு போட்டு 
வீடு வந்து சேரும்  நெல்லுமணி
பொன்விளையும் பூமியென
உழவண்வண் கொண்டாட
வந்திடுமே  பொங்கல் தைப்பொங்கல்
 
 நெல்லை  குத்தி அரிசியாக்கி
பச்சரிசி  பால் கலந்து 
பயறுடனே  சக்கரையும் 
நெய்யில் வறுத்த முந்திரியும்
கம கமன்னு மணமெழுப்ப
ஏலக்காய் கொஞ்சம்  தூள்செய்து
தூக்கலாக தூவிவிட்டு  ... ஆஹா   ...ஒஹோ....என
குழந்தைகள்  அனந்த கூச்சலிட
பொங்கலோ  பொங்கல்  என
பெண்களோ  குரவையிட 
வந்திடுமே  பொங்கல் தைப்பொங்கல்

உலகுக்கே உணவூட்டும் உழவன்
உழைப்பால் உயர்ந்தவன் ஆவான்
அறியாத மூடர்கள் அவனை 
குறைவாக  எண்ணி நகைப்பார்
சேற்றிலே  காலூன்றும்   உழவன்
இல்லலாமல்…..  மக்கள் 
சோற்றிலே  கை வைக்கலாமா?

சேற்றிலே   அவன் உழைப்பு 
சுத்த காற்று அவன் மூச்சு
நோய்  நொடி   ஏதுமில்லை 
நிம்மதியான வாழ்க்கை
நாடு விட்டு நாடு
பணம் தேடி  ஓடிடுவார்
கறை படியா  வெள்ளைஉடை
கலையாத  கேசம்
மனம் முழுதும்  சங்கடங்கள்
சொல்லி அழ யாருமில்லை 
சுதந்திர  காற்றும்  இல்லை
என்னடா  வாழ்க்கை இது  என
ஏங்குவார் பலரும் இங்கே 
 
Posted by: Sethu
« on: January 06, 2026, 01:15:41 AM »

b]விண்ணிற்கு ஆராய்ச்சி செய்ய எத்தனை விஞ்ஞானிகள் இருந்தாலும்.... மண்ணைப் பண்படுத்தத் தெரிந்த விஞ்ஞானி விவசாயிகளே..." -

விவசாயிகளே உண்மையான விஞ்ஞானிகள் என்ற கருத்தை மறுக்க முடியாது யாரினாலும்!

"உலக வாழ்வின் அடிப்படை ஆதாரம் விவசாயமே.....
தாய் இன்றி சேய் இல்லை என்பது போல விவசாயம் இன்றி அன்னம் இல்லையே..." - விவசாயத்தின் அவசியத்தையும், உணவின்றி வாழ இயலாது என்பதையும் விளக்குகிறது நமக்கு!

"சேற்றில் கை வைத்து பாடுபடுபவன் இணையில்லா விவசாயி...
நெற்பயிரும் தலை நிமிர்ந்து நிற்கும் வரை எத்தனை போராட்டம்..." -
விவசாயியின் போராட்டத்தையும், உழைப்பையும் போற்றுகிறது!

மண் மனிதனின் முதல் தோழன்!
மண் மனிதனின் கடைசி எதிரி !
கருவறை தாண்டிய பாதங்கள் மண்ணின் முதுகு மிதித்து புழுதி பிடித்து உரண்டு புரண்டு உறவாடுகின்றன..."
மண் மீதான மனிதனின் தொடர்பையும், விவசாயியின் உழைப்பையும்  உணர்த்துகின்றன கவிதை வரிகள் !

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் எனும் பெரியோரின் வாக்கு... பெற்ற பிள்ளை போல பேணி வளர்ப்பான் விவசாயி..."
விவசாயியின் மனத்தையும், பயிர்கள் மீதான பாசத்தையும் காட்டுகிறது!
விவசாயத்தைக் காப்போம்!
Posted by: Ramesh GR
« on: January 05, 2026, 10:53:30 PM »

வயலில் நிமிர்ந்து நிற்கும் கதிர் சொல்லும் அவன் உழைப்பை

கூடத்தில் இருக்கும் காளை சொல்லும் அவன் அன்பை

பசி என கையந்து கைக்கு கூரும் அவன் கருணையை

அந்த கலப்பை சொல்லும் அவன் இரத்தத்தில் உள்ள விடாமுயற்சியை

அங்கே சிதறி கிடக்கும் சோற்று பருக்கை சொல்லும் அவன் உழைப்பை

அந்த குப்பை தொட்டியில் அழுகிய நிலையில் இருக்கும் பழம் சொல்லும் அவன் வலியை

அங்கே உயர்ந்து நிற்கும் கட்டிடம் சொல்லும் அவன் வேதனையை

அங்கே வறண்டு இருக்கும் நிலம் சொல்லும் அவன் கண்ணீரை

இறுதியாக அந்த பூச்சி மருந்து சொல்லும் அவன் உயிரின் ருசியை.......

உணவை பார்த்து ரசித்த கண்கள்

தொட்டு உணர்ந்த கைகள்

ருசித்து உண்ட நாக்கு

பசியாரிய வயிறு

 இதில் நாம் கண்டது உணவை மட்டுமே அதன் பின் உள்ள வலியை அல்ல

உணவின் ருசியை பார்க்கும் நாம் அதை நமக்கு தந்தவன் நிலை உணரவில்லை

பசிகும் அனைவரும் உழுது உண்ணும் நிலை வரும்...

 அப்போது நினைவுக்கு வரும் உழவனின் தியாகம்
Posted by: Yazhini
« on: January 05, 2026, 10:37:31 PM »

நிதம் நிதம் சோறு தின்றோம்
அது வந்த வழி உணரலையே...
பக்குவமாய் பசி ஆத்தியவனை
நாமும் தான் பாக்கலையே...
கொண்டாட வேண்டியவனை
கொஞ்சம் கூட நினைக்கலையே...

தரணியின் தாயுமானவனை
தந்திரம் தான் சூழ்ந்ததோ...
இயற்கை விஞ்ஞானியை
செயற்கை தான் தின்றதோ...
ஆட்கொல்லி மலட்டு விதை
கையேந்த வைத்ததோ...
செயற்கை உரம் தான்
அன்னை அவளை மலடாக்குதோ...

மண்ணை செழுப்பாக்கியவனை
வறுமை தான் ஆட்கொண்டதோ...
அன்று வானம் பார்த்த பூமியையும்
பசுமைப்போர்வையால் போர்த்தினானே
இன்று காய்ந்த வயிறு பசியாற
ஈர துணி போர்த்தினானே...
அவன் கொண்டாடிய அன்னையை
கூறுப்போட்டு விற்றோமே...

டெல்டா பகுதி கூட
வெடித்து நிற்க
ஓடும் ஆறும் தான்
குடுவைக்குள் அடைப்பட
நெற்றிப்பொட்டுக்குள் கசக்கும்
உண்மையும் உணர்ந்திட
இனியொரு விதிசெய்வோம்
பூமிதாயுடன் உறவாடுவோம்...
உழவின்றி நாமில்லை
உழவனின்றி ஒருவனுமில்லை....
Posted by: Thenmozhi
« on: January 05, 2026, 10:32:55 PM »

      "விவசாயம் இந்த உலகின் முதுகெலும்பு"

மக்களின் பசி பட்டினியைப் போக்கும்   
   விவசாயிகள் கடவுளே!
மண்ணில் விவசாயிகள் கால்கள் படுவதால்,
   சோற்றில் கை வைக்கின்றோம் நாம்!

காளைகளில் ஏர்,கலப்பை பூட்டி !
கழனியை உழுது  ,மண்ணைப் பதப்படுத்தி!
கால போகம் பார்த்து விதை விதைத்து!
கழனியை சுற்றி வரம்புகள் கட்டி!

இயற்கை சேதனப் பசளைகளை 
    பயிர்களுக்கு  உரமாக்கி!
இன்புற்று செழித்துப் பயிர்கள் வளர
   நீர்ப்பாசனம் பாய்ச்சி!
இன்பமாய்  களைப்பை போக்க
   பாடல்கள் பாடும் விவசாயிகள்!

வெயில் ,மழை பாராது வியர்வை சிந்தி
   உழைப்பவர்கள் விவசாயிகள்!
பயிர்கள் செழிப்புற வளர்ந்ததும் 
   அறுவடை செய்து ,சூடு மிதித்து!
தங்கள்  கஷ்டத்துக்கு சிறந்த விலை மதிப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் விவசாயிகள்!

மானியம் வாங்கி ,நகை அடகு வைத்து, விதைத்தவன் பெறுவது சிறிய சன்மானமே!
வர்த்தகர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் 
   பெருந்தொகையை ஈட்டிடுவார் கஷ்டமின்றி!
கடன் இருந்தும் விவசாயிகள் மனதில் 
     எல்லையில்லா சந்தோசம்
 மக்கள் பசியை போக்கிவிட்டோம் என்று!

இயற்கை விவசாயம் இப்போ பெரும்பாலும்
   செயற்கை விவசாயம் ஆகிறதே!
விஞ்ஞான வளர்ச்சி விவசாயத்தில் கூட
   இயந்திரமயமாகிவிட்டதே!
விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு 
    சூழலை  மாசுபடுத்துகிறதே!
செயற்கை அசேதன பசளைகள் மனித 
   ஆரோக்கியத்தை கெடுக்கின்றதே!

சீக்கிரமாக விளைச்சலை பெற்று,  சந்தைப்படுத்தும் நோக்கத்தில் ,
இயற்கை விவசாயத்தை
அழிக்கின்றான் மானிடன்!
ஆறறிவு படைத்த மானிடனுக்கு புரியவில்லை அவன் ஆயுட்காலமும்   
 சீக்கிரமாய் முடிகின்றது என்பது!
அன்று உடலை வலுப் பெறச் செய்தது 
    இயற்கை விவசாயம்!
இன்று உடல் வலுப் பெற பணம் செலுத்தி
    உடற்பயிற்சிக் கூடங்கள்!

கழனியில் வேலை செய்பவனை     
    கேவலமாகவும்,
கணனியில் வேலை செய்பவனை   
     கெளரவமாகவும் ,
கண்டுகொள்ளும் மானிடனே!
புரிந்து கொள் வலைத்தளத்தில்
   அரிசியை விளைவிக்க முடியாது
      என்ற உண்மையை!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம்!வளரும் குழந்தைகளுக்கு விவசாய 
   அறிவினையூட்டுவோம்!
விவசாயிகளுக்கு ஏற்ற சன்மானத்தை   
    வழங்குவோம்!
"விவசாயம் இந்த உலகின் முதுகெலும்பு"
     என்பதை உரக்கச் சொல்லுவோம்!

விவசாயிகள் இல்லையேல்
      நாங்கள் இல்லை!
பொங்கலுக்கு மட்டும் தான்
    உழவர் திருநாள் இல்லை !
எல்லா நாளும் உங்கள் திருநாளே!
உலகில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் நான் தலை வணங்குகின்றேன்!
Posted by: Forum
« on: January 04, 2026, 08:12:56 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 394

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்