Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: mandakasayam
« on: Today at 02:03:25 AM »

  கனவு இல்லையென்றால் இலக்கை அடைய முடியுமா ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வோம் சிறிய முன்னேற்றம் கூட நமது வாழ்வின் மாற்றம்

உனது ஆசைகளையும் கனவுகளையும் மறைத்தாய் ஏன்?  உனது கண்களின் அசைவுகளே காட்டி கொடுத்தது என்னவளின் ஏக்கதை எனக்குள் சுமையாக்க கூடாதென!!

உனது கரங்கோர்த்து ஆராவாரம் இல்லாத இடத்தில்  பேசுகையில் இன்னும் கடினமான பாதைகள் வந்தாலும் பயமில்லாமல் சொல்வேன் .உன்னுடன்   பயணம் செய்தால் சுமை கூட சுகம் தான் ..

உடைந்த போன  கனவுகள் எல்லாம் வலியாய் நம் வாழ்க்கையில் வந்தாலும்  உனது  புன்னகையால் நம் நம்பிக்கை ஒளிரசெய்து விடும்.
சோகம் நிறைந்த நாட்களும் உண்டு  வாழ்க்கை தடுமாறுமோ என பயமுமம் உண்டு  அது எல்லாமே  அடங்கி நீர்த்து போகும் உனது அமைதியான சுவாசகாற்றால் ..

எனது மடியில் உறங்கும் தேவதையே விரக்த்தியான நினைவுகளில்  உனது சிரிப்பை விதைத்து இரசிக்க செய்தாய், இரவின் மடியில் உன்னுடைய மௌனம் எனக்கு காதலிசை. 

தோல்விகளின் தொடக்க கதைகள் எல்லாமே நமது வாழ்க்கை பயணத்தின் முகப்பு பக்கங்கள்.விழுந்தால்  தூக்கி நிறுத்த உன் காதல் இருக்க. மாற்றத்தை  நோக்கி நகர்வோம் இரு கரங்களுடன் ...

எதிர்வினைகளை கடந்து  ஒரே பாதையில் இருவரும் செல்வோம் நம் காதலோடு , ஒரு நாள் நமது வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையோடு அல்ல மாற்றி காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையோடு ...

 
[/siz
Posted by: Luminous
« on: Today at 01:42:28 AM »

ஒருநாள் மாறும் இந்த வாழ்க்கை
நமக்குப் பிடித்தாற்போல்
மட்டும் அல்ல தங்கையே,
அனைவருக்கும் பிடித்தாற்போல்
நம் வாழ்க்கை மாறும்
ஒரு நாள்…
தாய் இல்லா வெற்றிடத்தில்,
மது நாற்றம் சூழ்ந்த
ஒரு வீட்டில்,
அன்பும் அரவணைப்பும்
கல்வியும் இன்றியே
வளர்ந்தோம் நாம்.
குடித்துக் குடித்தே
உயிரை கரைத்த தந்தையும்
ஒரே அடியாய்
நம்மை விட்டு போனார்…
ஆனால் தங்கையே,
இனி
அந்த கடந்த காலமே
நம் அடையாளம் அல்ல.
“அண்ணா…
பயமா இருக்கு”
என்று நீ சொன்ன அந்த வார்த்தை
என் நெஞ்சை
உலுக்கியது.
ஆம்…
பயம் எனக்கும் உண்டு,
இந்த சமூகத்தில்
எப்படி வாழ்வோம்
என்று…
ஆனால் தங்கையே,
பயந்தபடியே முன்னே நடப்பதுதான்
தைரியம்.
இந்த சமூகத்தில்
நாம் வாழ்ந்தே ஆக வேண்டும்...
தலைநிமிர்ந்து,
நிம்மதியாக,
சந்தோஷமாக.
அதற்கான ஒரே வழி...

நம் கல்வி.
ஆம்…
கல்விதான்
கைகளில் விளக்காய்,
கண்களில் கனவாய்,
வாழ்க்கையில் வழிகாட்டி.
என் கையில் இருந்த
தந்தையின் கசப்பான நினைவாய்
அந்த மது பாட்டிலை
இன்று
தூக்கி வீசுகிறேன்.

அதற்குப் பதிலாக
உன் கையிலிருக்கும்
புத்தகப் பையை
எடுக்கிறேன்.

இனி நாம்
சமூகத்திற்கான
ஒரு எடுத்துக்காட்டாய் இருப்போம்...
“குடிகாரனின் பிள்ளை
குடிகாரனாகவே
மாற வேண்டியதில்லை
படித்தால்
உயர்ந்த நிலை அடையலாம்”
என்று.
அப்போது இந்த சமூகத்திற்குச்
சொல்வோம்....
குடிப் பழக்கம்
ஒரு தீர்வு அல்ல,
அது ஒரு வீழ்ச்சி என்று.

அந்த நாளுக்காக
நாம் இன்று
விழிப்போம்.
எழு தங்கையே…
எழு…

உன் கனவுகளை
முதுகில் சுமந்து,
உன் கல்வியை
ஆயுதமாக்கி,
உன் முயற்சியை
அடையாளமாக்கி..
இந்த உலகிற்கு
நாம் யார் என்பதை
சொல்ல…

நமக்குப் பிடித்தாற்போல்
மட்டும் அல்ல,
அனைவருக்கும் பிடித்தாற்போல்
நம் வாழ்க்கை மாறும்.

அந்த நாளை
நாமே
உருவாக்குவோம்.

LUMINOUS 💜💛🧡💚😇
Posted by: VenMaThI
« on: Today at 12:37:57 AM »




ஏக்கங்கள் அலை போல் மோத
எதிர்பார்ப்புகளோ அதற்கும் மேலோங்க
என் வாழ்க்கை எங்கே என்ற தேடலில்
எனக்கான வரமாய் வந்தவன் நீ...

காலன் வந்து என் கை கோர்க்கும் வரை
உம் கைகளில் நான் தவழ நினைத்தேன்
நரை கண்டு கிழப்பருவம் எய்தினாலும்
நாம் ஈருடல் ஓருயிராய் வாழ நினைத்தேன்...

கனவுகள் பல என் கற்பனையில் ஓட
அக்கனவுகளை நினைவாக்க - இந்த வாழ்க்கையில் நான் ஓட
காலமும் ஓடியது என் கனவுகளும் ஒய்ந்தது
கனவுகள் நினைவாவது எளிதல்ல என்பதும் என் மனதில் பதிந்தது..

எது வந்த போதும் உன்னை பிரியேன் என்றாயே
என் கண் போல் உன்னை காப்பேன் என்றாயே
என் கண்கள் குளமாக.. பட்டுப்போன
தனி மரமாய் இன்று நிற்கிறேன்
இந்த தனிமையை எனக்கு வரமாக்காதே
என்று உன் மடியில் விசும்பி அழுத நொடியில்

'இன்னுமா இந்த கனவில் மிதக்கிறாய்

நீ கண்ட கனவுகளும் உனக்கில்லை
நீ தவழ்ந்த காரங்களும் இன்று உனதில்லை
வாழ்வியல் பாடத்தில் தேர்ச்சி பெற
இன்னும் பல அத்தியாகங்கள் மீதமுள்ளது...
அழுதது போதும் எழுந்து வா"
என்ற அசரீரி எங்கோ ஒலிக்க

எனக்கு மட்டுமே ஏன் இந்த நிலை
என்ன தவறு தான் நான் இழைத்தேன்
தனிமை மட்டுமே எனக்கு துணையா?
என்ற வினாவுக்கு விடையளித்தது என் மனம்

"இரவில் பல்லாயிரம் நட்சத்திரங்கள் ஜோலித்தாலும்
தனக்கான தனிச்சிறப்புடன் நிலவு இல்லையா  - அந்த
சூரியன்தான் பகலில் தனியாக உலா வரவில்லையா
உனக்கு பசித்தால் நீ தான் உண்ண வேண்டும்..
ஆயிரம் பேர் உன்னுடன் இருந்தாலும்
உனக்கான வாழ்க்கையை நீ தான் வாழ வேண்டும்
தனிமை என நினைத்தால்தான் அது தனிமை
அதையே வரமென நினைத்தால் அதற்க்கில்லை ஈடுயிணை'...

தனிமையுடன் கரம் கோர்த்து
எதார்த்தங்களை படிக்க தொடங்கினேன்
ஏமாற்றங்கள் ஏற்றுக்கொள்ள பழகினேன்
எதிரிகளை எதிர்த்து நின்று வீழ்த்தினேன்
எங்கு வீழ்ந்தேனோ அங்கிருந்தே எழுந்தேன்
புதிய விதையில் முளைக்கும் புதிய செடியாய்....

எனக்கான வாழ்க்கை
என்னால் மட்டுமே  - என்றும் அது
எனக்காய் மட்டுமே....



Posted by: சாக்ரடீஸ்
« on: Today at 12:01:21 AM »

அவள்
இல்லாத வீட்டில்
சூரியன் மெதுவாக
உதிக்கின்றது
ஒளி கதிர் வீசுகின்றது
ஆனால்
அதில் அவள் நிழல் இல்லை.

இரண்டு சிறு கைகள்
என் வாழ்க்கையை
பிடித்துக்கொள்கின்றன
அவர்களின் சிரிப்பில்
அவள்
கொஞ்சம் கொஞ்சமாக
நினைவாக தெரிகிறாள்

வலி தினமும்
என்னோடு இருக்கிறது
நான் அதை
ஒதுக்கி விடவில்லை
ஏனென்றால்
அந்த வலிதான்
அவளை
என் மனத்தில்
உயிரோடு வைத்திருக்கிறது.

யார் காரணம்?
எது காரணம்?
என்று
இப்போது கேள்வி இல்லை
நடந்தது நடந்ததே.
அந்த வலி
என் உள்ளத்தில் பதிந்து விட்டது

சோர்ந்து போகும் நாட்களில்
குழந்தைகளின் சிரிப்புக்காக
நான் எழுந்து நிற்கிறேன்.

அவள் ஓய்வெடுத்த என் மடி
இப்போது
அவள் நினைவோடு
என் குழந்தைகள் உறங்கும்
இடமாக மாறிவிட்டது.

அவர்கள் கண்களில்
எதிர்காலம் தெரிகிறது.
அதில் ஒரு சிறிய
நம்பிக்கை பிறக்கிறது.

ஒருநாள்
எனக்கு தானாக
சிரிப்பு வரும்.
அன்று வாழ்க்கை
அமைதியாக நிம்மதியாக
என் கைகளில் வந்து சேரும்.

எனக்கு பிடித்ததுபோல்
வாழ்க்கை அன்று மாறும்.
அந்த மாற்றத்திலும்
அவள் இருப்பாள்.

அவள் இல்லாமல் அல்ல
அவள் நினைவோடு.
வலிகள் இல்லாமல் அல்ல
வலியைத் தாண்டி
ஒரு புதிய புத்துணர்வோடு.


வார்த்தைகளாக மாறிய என் நண்பனின் உணர்வுகள்.
அவனுக்காக, அமைதியாக சமர்ப்பிக்கிறேன்.
Posted by: joker
« on: December 29, 2025, 11:54:24 PM »

ஓர் அழகிய இரவு
என் மடியில் தலை சாய்த்து
நிலவை பார்க்கும் அவள்
அவள் முகத்தில்
நிலவை காணும் நான்

நிறம் ஏங்கும்
நிலவாக
நான் உன்னை நினைக்கிறேன்.
புன்னகையுடன் என்னைத் தேடி வரும்
கனவாக
நீ என்னுள் தங்குகிறாய்

நான் எழுதிவைக்கும்
ஒவ்வொரு சொல்லிலும்
நீ இருக்கிறாய்.
நான் உச்சரிக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன் மூச்சு
கலந்து விடுகிறது

என் கையை
உன் விரல்கள்
அருகே தேடும் போது
ஆகாயம் இன்னும்
அருகே வந்தது போல
எனக்குத் தோன்றுகிறது… 

இங்கேதான்
நான் உன்னோடு”
என்று
வானமே
மெதுவாக
மூச்சுக்குள்
கிசுகிசுப்பது போல…

என்னை குளிர்வித்த
காற்றாய் அவள்
என்னை நனைத்த
மழையாய் அவள்…

என்னை சிரிக்க வைத்த
புன்னகையாய் அவள்…
என்னைத் தழுவும்
கனவாய் அவள்…

என்னை உறங்க வைக்கும்
தாலாட்டாய் அவள்
என்னை ஏங்க வைத்த
மோகமாய் அவள்…

என்னுள் வற்றாத
ஊற்றாய் அவள்
என்னுள் சலிக்காத
தாகமாய் அவள்…

என்னை முழுதாய்
மூடிய அன்பாய் அவள்…
என்னை சிந்திக்க வைத்த
காதலாய் அவள்

என் கனவுகள்
உன் மூச்சு பட்டதும்
சத்தமில்லாமல்
விழித்துக்கொள்கின்றன.
என் சிந்தனைகள்
உன் பெயரைத் தொட்டவுடன்
அழகாகி விடுகின்றன.

நமக்கு பிடித்த ஒருவரின்
சந்தோஷத்துக்காக
எதையும் செய்யலாம் என்ற
துணிவு மட்டும்
எங்கிருந்தோ
உள்ளுக்குள் பிறக்கிறது…

நமக்கு பிடித்தது போல
இந்த வாழ்வு
ஓர் நாள்
மலரும் என்ற
நம்பிக்கை
பிறக்கிறது
வாழ்வோம் வா
அன்பே!


****Joker****
Posted by: Thenmozhi
« on: December 29, 2025, 11:43:53 PM »

    நம் காதல் கல்யாணத்தில் முடியும் வரை ....


நான் பூமியில் உதித்த போது
  என் கூட இல்லாத உறவு நீ!
நான் வளர்ந்த குழந்தைப் பருவத்தில்
   என்னுடன் இல்லாத உறவு நீ!
நான் இனி என் வாழ்வில் இழக்க
   முடியாத உறவு நீ!

நீ என் பெயரை உச்சரிக்கும் போது
   உணர்ந்தேன் என் நாமத்தின் அழகினை!
நீ பேசத் தயங்கும் விடயங்களை
   புரிந்து கொள்வேன்  உன் விழிகளில்!
நீ என்மீது கொண்ட பாசமும் ,அக்கறையும்
   உணர வைக்கின்றதே என் குடும்பமாய்!

விழிகளால்   ஈர்க்கப்பட்டு
மனங்களால்   ஒன்றுபட்டு
எண்ணங்கள்   பரிமாறப்பட்டு
உயிரோடும், உணர்வோடும் கலக்கப்பட்டு
உருப்பெற்றோம் உண்மைக் காதலர்களாய்!

நாம் எதையும் எதிர்பார்த்தில்லை
   காதல் வயப்பட்ட  போது!
நம் காதல் கல்யாணத்தில் முடிவுற
   தடையாய் நிற்கிறதே மதபாகுபாடு!
நாம் காத்திருப்போம் பெற்றோர் மனம் மாறி
   காதல் கல்யாணத்தில் முடியும் வரை!

உன் மடி போதும் என் துன்பங்கள்
   அனைத்தும் தூசாகி பறந்திட!
உன் புன்னகை  ஒன்றே போதும்
   என் மனம் புதுப்பொலிவு பெற்றிட!
உன் தோள் சாயும் போது உணர்கிறேன்
   நான் உலகின் சிறந்த அதிர்ஷ்டசாலி என்று!

கனவு காண்கின்றேன் நம்
    எதிர்கால வாழ்வை நோக்கி!
கனவு இல்லம் அதைச்சுற்றி இரசிப்பதற்கு       
     இயற்கையான பூந்தோட்டம்!
கலந்து பேசி மகிழ்ந்திட நம்ம இரு   
     பெற்றோர்கள் நம் வீட்டில்!
காதல் சின்னமாக இரசித்திடுவோம்
    இரு குழந்தைகள் பேசும் மழலை அழகை!


இப்போ நாம் காதல் மொழியில்   
   இரசிக்கின்றோம் வெண்ணிலாவை!
இதுக்கு அப்புறம் நிலவொளியில்
   உண்போம் கூட்டாஞ்சோறு!
இன்று பிடித்த உன் கரங்களை
   விடமாட்டேன் என்றும்!
நமக்கு பிடித்த போல வாழ்க்கை
  என்றோ ஒருநாள் மாறும்!
நாம் முயற்சி செய்வோம்
   சோர்ந்து போய்விடாமல்!

இன்றே மாறிவிடாது நம் வாழ்க்கை!
இடைவிடாது உழைத்திடுவோம்
     உன்னத தொழில் செய்து!
சிக்கனமாய் சேமிப்போம் சிறுக சிறுக!
நாம் நம் வாழ்க்கையை சிறப்பாக்குவோம்
  பெற்றோர்க்கு நம்பிக்கை வரும் வரை!

நமக்கு அளிக்கப்பட்டது இறைவனால்
   இன்பமான காதல் வாழ்க்கை!
நம் காதலுக்கு மனம் போதும்
    மதம் ஒரு தடை அல்ல என்னவனே!
நம் காதல் கல்யாணத்தில் முடியும் வரை
    கை கோர்த்து நிற்பேன் உன்கூட !
Posted by: Yazhini
« on: December 29, 2025, 11:41:54 PM »

உலகை மறந்து தாயிடம்
தஞ்சமடையும் சேயின் உறக்கமென...
விரல்கள் கோர்த்து தலைகோதும்
அன்னையின் அன்பு மடியென...
உன் மடிமீது துயில் கொள்கிறேன்
இன்னலறிய சிறு குழந்தையாக....

கனக்கும் இதயமும் கணப்பொழுதில்
இறகைவிட இலகுவாக்கும் ஸ்பரிசம்...
முத்தத்தின் முத்திரையால் முழுமையாக
சரணடைய செய்யும் ஆளுமை...
யாதுமாகி உயிரில் கலந்து
உணர்வை உருகசெய்யும் அன்பு...

நித்திரையிலும் நிழலாயிருப்பேன் என
உணர செய்யும் நம்பிக்கை...
சில ஊடல் நிமித்தங்களை
தணிய செய்யும் காதல்...
அனைத்தையும் ஒன்றாய் உணர்கிறேன்
உன் மடிமீது தலை சாய்க்கையில்...

காலத்தினால் அகவை கூடினாலும்
உன் கண்களுக்குள் ஏனோ
துள்ளி எழும் என் குழந்தைத்தனம்...
கண்விழிக்கையில் தான் தெரிகிறது
அனைத்தும் அழியாமல் ஆழ்மனதில்
அமிழ்ந்து கிடக்கும் நினைவுகளென்று...
நித்திரையைக் கலைக்கும் பதிவுகளென்று...

இன்றும் மனம் ஏங்குகிறது
கரம்பிடித்து உன்னோடு பயணிக்க
மகிழ்ச்சியின் மறுகரையென மாற... 💔 💔 💔
Posted by: Shreya
« on: December 29, 2025, 11:41:02 PM »

                                     நீ தந்த நரகம்!!!

அன்று உன் மடியில் சாய்ந்த அந்த நிமிடம்
இந்த உலகமே என் வசம் என எண்ணினேன்…
நமக்குப் பிடித்தபடி நம் வாழ்க்கை மாறும்
என்று நீ சொன்ன வார்த்தைகள் இன்றும்
என் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே
இருக்கின்றன…

நீல நிற இரவுகள் இன்னமும் வருகின்றன
ஆனால் உன் கதகதப்பான அணைப்பு
மட்டும் ஏனோ இல்லை…
“மாறும்” என்று நீ சொன்ன வாழ்க்கை
இன்றுவரை மாறவே இல்லை!
மாறிப் போனது நீயும்
உன் மனமும் மட்டும்தானடா…

நிழலாய் இருந்த உன் நினைவுகள் எல்லாம்
இப்போது நெருப்பாய் என்னைச் சுடுகின்றன…
நூறு கனவுகளை என் மனதில் விதைத்துவிட்டு
அவற்றை பறித்துச் சென்றது
நியாயமா…?

நீ இல்லாத இந்த நகரத்தின் சாலைகள்
எல்லாம் என்னை ஏளனமாய் பார்த்து சிரிக்கின்றன…
என் கூந்தலைக் கோதிய உன் விரல்களின் ஸ்பரிசம்
இன்றும் என் நினைவுகளில்
நெருப்பாய் எரிகிறது…

உன் மார்பில் தலை சாய்த்து
நான் கேட்ட அந்த இதயத் துடிப்பு
எனக்கானதென்று நம்பியது
என் தவறா…?
ஊரே உறங்கும் இந்த இரவின் வேளையில்
உன் நினைவுகளோடு
நான் மட்டும் யுத்தம் செய்கிறேன்…

காலம் ஓடினாலும்
காயங்கள் மட்டும் ஆறவில்லை…
“திரும்பி வருவாய்” என்ற
ஒரு மெலிந்த நூலிழையில்
இன்றும் இந்த உயிர்
வாழ்ந்து கொண்டிருக்கிறது…

“வாழ்க்கை மாறும்” என்று சொன்னாயே…
இதோ, அது மாறிவிட்டது —
நரகமாக…
“கனவுகள் மாறும்” என்று சொன்னாயே…
இதோ, அவை மாறிவிட்டன —
கருகிய சாம்பலாக…

கண்ணீர் வற்றிப் போனாலும்
வலி மட்டும் மாறவில்லையே…
சாகத் துணிவில்லை…
வாழ வழியும் இல்லை…
உன் நினைவுகளின் சிறையில்
நான் ஆயுள் கைதியாக…

இதயத்தின் ஓரத்தில் உறைந்த அந்த வலி
யாருக்கும் தெரியாத
ரகசியத்தின் பாரமாக…
யுகம் யுகமாய் ஆனாலும்
மறக்க முடியாத இறுக்கமாக…

பேசத் துடித்தும்
வார்த்தைகள் அற்ற நிலையில்
மௌனமாய்…
தனிமை என்னும் தீயில்
உன் நினைவுகளுடன்
நான் வாடுகிறேன்…

இறுதியில் ஒன்றை மட்டும் கேட்கிறேன்…
“வாழ்க்கை மாறும்” என்று
இன்னொரு பெண்ணிடம் மட்டும்
சொல்லாதே…
இந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி
எல்லா பெண்களிடமும்
இருப்பதில்லை…!
Posted by: Forum
« on: December 28, 2025, 10:18:39 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 393

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்