Post reply

Warning - while you were reading a new reply has been posted. You may wish to review your post.

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: KS Saravanan
« on: Today at 04:30:36 PM »

கண்ணாடி சிறகுகள்..!

அறிமுகம் எனும் ஆரம்பத்தில்
நாம் இருவரும் வெறும் புழுக்களே
தவிப்புகளின் நேரத்தில்
ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டோம்
உன் மனக்கண்ணாடியின் பிம்பத்தில்
நான் ஒரு வண்ணத்துப்பூச்சியானேன்..!

என் உலகத்தில் நீ வந்த அந்த நொடி
எனக்குள் காதல் சிறகுகள் முளைத்தன
ஆரம்பம் முழுவதும் ஒரு கனவுபோல்
சிறகுகள் வண்ணங்களால் நிறைந்தன..!

எவ்வளவு தூரம் நடந்தோம் என்பதே தெரியவில்லை
காதலின் பாரம் ஒருபோதும் வலிக்கவில்லை
பிரிவு என்ற முடிவு வரும்வரை
நாம் சிறகடிக்கப் பிறந்தவர்கள் என்றே நம்பினோம்..!

ஒரு பயணம் முடியும் போதுதான்
அதன் உண்மையான ஆழம் புரிகிறதோ
முடிவு என்பது உறவின் பிரிவாகி
நினைவுகளின் தொடக்கமோ..!

அன்று நான் கண்ட நம் பிம்பமும் பொய்யல்ல
இன்று நீ விலகிச் செல்வதும் பொய்யல்ல
கண்ணாடியில் நான் கண்ட அந்த அழகிய உருவம்
மீண்டும் கிடைக்குமா என மனம் ஏங்குகிறது..!

கண்ணாடி சொல்லாத சில உண்மைகள்
மனசுக்குள்ளே மட்டும் ஒலிக்குது
புழுவாக இருந்த காலத்தை நினைத்தால்
வண்ணத்துப்பூச்சியான கனவு வலிக்குது..!

சிறகுகள் இருந்தும்
பறக்க முடியாத சில நொடிகள்
அந்த நொடிகளில் மௌனம் கூட
சத்தமாய் பேசுது..!

முடிவென்று ஒன்றில்லை என்று தெரிந்தும்
மனம் அதை ஏற்க மறுக்குது
ஏனெனில் இந்த முடிவில்தான்
மற்றொரு ஆரம்பத்தின் விதை இருக்குது..!

காலம் பல கடந்து இந்த நினைவுகளே
என்னை மாற்றும் பிம்பமாக 
மீண்டும் ஒரு நான் தொடர்வேன் ஆனால்
புழுவாக அல்ல வண்ணத்துப்பூச்சியும் அல்ல
என்னை நான் கண்டுகொள்ள
கண்ணாடி சிறகுகளாய் என் பயணம்
இது முடிவல்ல
என்னை நானே சந்திக்கும் இன்னொரு ஆரம்பம்..!
Posted by: சாக்ரடீஸ்
« on: Today at 03:19:58 PM »


ஒரு மரத்துல
எறும்பும் புழுவும் லீஃப் மேட்

எறும்பு 24×7 active mode
புழு 24×7 Complaint Mode

டேய் நீ எப்ப பார்த்தாலும்
சுறுசுறுப்பாக ஓடுற
என்னால
அதுக்கு அப்டேட் ஆக முடியல
என்று புழு புலம்ப

எறும்பு சொன்னது
Cool நண்பா
Relax நண்பா
பேஷன்ஸ் + டெடிகேஷன் = ரிசல்ட்.

ஒருநாள்
நீயும் என்ன மாதிரி
Turbo Modeக்கு மாறுவ

புழு சிரிச்சுகிட்டே சொல்லுச்சு
இதெல்லாம்
கார்ப்பரேட் லெவல் மோட்டிவேஷன்
நான் வாலன்டரி ரிட்டயர்மென்ட்
வங்க போறேன்

என்று சொல்லி
தன்னை சுற்றி Full Cover
Securityயோட கூடு கட்டிச்சு.

எறும்பு அப்பவும்
பாசிட்டிவா சொல்லுச்சு
சரி சரி
கூட்டுக்குள்ள தவம் பண்ணு
அங்க WiFi இல்ல
அங்க டிவி இல்ல
நல்ல mediate பண்ணு
Result Strongஆ இருக்கும்.

நாட்கள் ஓடின.
எறும்பு ஓடிக்கிட்டே இருந்தது.
புழு meditation le இருந்தது.

ஒரு நாள்

Tandangaaa

கூடு திறந்துச்சு.
ஆனா உள்ள புழு இல்லை.
கலர் கலரா
ஒரு பட்டாம்பூச்சி Entry.

எறும்பு Shockல
டேய் இது என்ன da இது
Free Trial app மாதிரி இருந்த
ஆனா இப்போ
Premium Version 2.0 ஆ மாறிட்ட

சும்மா மச்சான் nu
பட்டாம்பூச்சி சிரிச்சுக்கிட்டே
சொல்லுச்சு "பட்டாம்பூச்சி டா"

அதுக்கு அப்புறம் தான்
அதுக்கே புரிஞ்சது.
சில Retirementகள்
உண்மையில Promotion தான்.

ஒரு முடிவுனு நினைப்பது
இன்னொரு தொடக்கத்தோட
வெயிட்டிங் பிரியட் தான்.

அதனால
முடிஞ்சிடுச்சுனு பயப்படாதீங்க.
அது முடிவு இல்ல.
அது சும்மா
Loading Please wait தான்.

கொஞ்சம் பொறுமையா இருங்க.
உங்க Version 2.0
பின்னால ரெடியா ஆகிட்டு தான் இருக்கு.

Its not end its Just begining.
Posted by: Madhurangi
« on: Today at 12:33:51 PM »

உயிர்ப்பின் பேரழகு
[/color]

பெருவெளியின் ஒரு சிறு துகளாய் அடையாளமற்ற ஓர் அங்கமாய், வெறும் கம்பளிப் பூச்சியென இம்மண்ணில் உதித்தேன்...

அழகின் தராசில் என்னை யாரும் நிறுத்தியதில்லை,
 அருவருப்பின் படிமமாய், விகார முட்கள் கொண்ட உருவமாய், கண்டவுடன் விலகிச் சென்றனர் பலர்.

என் தற்காப்பு ஆயுதங்களையே என் விகாரங்களென உலகம் தூற்றியபோது,
நானும் என்னை வெறுக்கக் கற்றுக்கொண்டேன்.
ஆனால் - அந்த இருண்ட மௌனத்திலும்,
என் ஆழ்மனம் ரகசியமாய் கிசுகிசுத்தது: "இது முடிவல்ல!"

வானத்தை அளக்கும் வேட்கையும்,
 சிறகுகளின் ரகசியக் கனவும்,
ஊர்ந்து செல்லும் என் கால்களுக்குள் உறங்கிக் கிடந்தன.

உலகை உதறி, பசியை வென்று,  சிறு கூட்டிற்குள் எனை நானே சிறைபூண்டு  தவமிருந்தேன்.
அங்கே ,
என் வலி மாற்றமானது
என் அமைதி பரிணாமமானது.

ஒரு பொழுதில்...
என் குறுகிய சிறைக்கூடு உடைந்தது!
வண்ணங்கள் என் உடலெங்கும் கவிதை எழுதின!
தரை தொட்ட கால்கள் யாவும் திசை தொடும் சிறகுகளாய் விரிந்தன.

நேற்று என்னை நசுக்கத் துணிந்த கரங்கள்,
இன்று என் வண்ணக் கோலங்களில் வசப்பட்டு,
"நசுங்கி விடுமோ" எனப் பற்றத் தயங்கின.

என் உயிர் மாறவில்லை,
மாறியது என் புறத்தோற்றம் மட்டுமே!

புற அழகைக் கொண்டாடும் இவ்வுலகம்,
என்றாவது ஒருநாள் உணர்ந்து கொள்ளும்,
அழகென்று ஏதுமில்லாத போதும் என் உயிருக்கு ஓர் உன்னத மதிப்பு இருந்தது என்பதை!

புறக்கோலம் கடந்த உயிர்ப்பின் இருப்பே பேரழகென்று,
என் மௌனப் பரிணாமம் உலகிற்கு மொழிந்தது
[/size][/size][/size]

(பி .கு : எழுது எழுது.. என எனை ஊக்குவிக்கும் என் தோழி யாழினிக்கு  சமர்ப்பணம் )
Posted by: Clown King
« on: Today at 01:08:33 AM »

எனை 25 ஆண்டுகள் பின்னோக்கி
பசுமையான நினைவுகளை எடுத்துரைக்கவே இந்தப் புகைப்படத்தை பதிவேற்றி வைத்தீர்களோ
என்னுடைய முதல் பெண் நண்பி எனது பிறந்த நாளிற்காக கொடுத்த ஒரு அன்பளிப்பில் எழுதி இருந்த ஆங்கில வாசகம் இது
ஒரு கம்பளிப்பூச்சி பட்டாம்பூச்சியாகவும், முட்டையின் மஞ்சள் கரு கோழியாகவும், ஏகோர்ன் ஒரு வலிமையான ஓக் மரமாகவும் மாறுவதை விட அற்புதமான அதிசயம் என்ன இருக்க முடியும்?
நமது உறவு ஒரு சிறந்த நட்பாக மாறியது இதை விடவா ...

ஆம் அவள் கூறியது உண்மைதான் எங்களது நட்பானது 25 ஆண்டுகளை தாண்டி நடை பயின்று கொண்டிருக்கின்றது இந்த நட்பானவை எங்கள் மூச்சிருக்கும் வரை தொடரும் நாங்கள் அறிமுகமானது ஒரு பொது மேடையில்
மலையாள கரையோரம் பிறந்த அவள் பெயரோ மஞ்சு மஞ்சுவின் அர்த்தம் அன்று தான் அவள்வாய் மூலம் தெரிந்து கொண்டேன் அழகு என்பது அவள் அதன் பொருள்

ஆம் அழகு வெறும் விழி தோற்றத்தில் மட்டுமல்ல மனதிலும் கூட அழகாய் இருந்தால் வேடிக்கை விளையாட்டு அன்பு  பாசம் அனைத்தும் அவளது நட்பில்
அவள் மூலமே அறிந்து கொண்டேன் ஒரு பெண்ணை நட்பாகவும் பார்க்க முடியும் என்று

உண்மையான நட்பிற்கு நேரில் பார்த்து ன் பழக வேண்டும் என்ற அவசியம் இல்லை மனதார நினைத்தாலே தொலைபேசியில் அவள் என் நம்மை அழைக்கவும் இது உண்மை ஆம் நாம் இன்று கூறும் டெலிபதி
எதையும் எதிர்பார்த்ததில்லை எங்கள் நட்பு ஆம் அது ஒரு கனா காலம் 4 ஆண்டுகள் ஓடின அவளும் தன் படிப்பை முடித்து பறந்து சென்றாள் ஆனால் எங்கள் நட்பான அந்த பட்டாம் பூச்சியும் இன்னும் அதே போலீ உடன் மங்காத வண்ணத்துடன் பறந்து கொண்டு தான் இருக்கின்றது
என் மனதில் இத்தனை ஆண்டுகளாக பறந்து கொண்டிருந்த அந்தப் பட்டாம்பூச்சியை வெளி உலகிற்கு காட்டச் செய்த FTC ஓவியம் உயிராகிறது தேர்வுக்குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
என்றும் உங்கள் CLOWN KING




Posted by: Thenmozhi
« on: Today at 12:54:06 AM »

     "அழகை இரசித்திடு,
    அழிக்க நினைக்காதே!"

குடம்பி,கூட்டுப் புழு போல்
   குழந்தை பருவம் அது!
மிருதுவான மென்மையான
   உடம்பு கொண்ட பருவம் அது!
மகிழ்வாக இருந்தேன் இலைகள்
    என் உணவான தருணத்தில்!

என் குழந்தை பருவத்தை
    வெறுக்கின்றான் மானிடன்!
மானிடன் மேல் தப்பு எதுவும் இல்லை !
என் உருவத்தோற்றமே
    அவன் வெறுப்பின் காரணம்!

அந்நியன் இடமிருந்து என்னை
  பாதுகாக்க கடவுள் கொடுத்த வரம்   
     கூர்மையான மயிர்கள்!
என் குழந்தைப் பருவத்தை அதிகம்               
    விரும்பியது பறவைகளே!
அப்போ அப்போ காதலுடன் -என்னை
   தீண்டிச் செல்லும் பறவைகள்!
என்னை பாதுகாத்துக் கொள்ள
  என்னை சுற்றி கூடு போல ஒரு வீடு!
இயற்கை அனர்த்தம்,எதிரிகள்     
    எல்லாவற்றிலும் பாதுகாத்தது என் வீடு!

அன்று ஒரு நாள் என் வீடு உடைந்து       
    வீசப்பட்டேன் வெளியே!
என் உடம்பில் உணர்ந்தேன்
  புதுவித உணர்வினை!
ஆஹா எனக்கு அழகான
   சிறகுகள் பறப்பதற்கு!
என் அழகை இரசிக்கனும் என்று
   என் மனதில் ஒரு எண்ணம்!

சிறகுகள் கொண்டு பறந்தேன்
   பறந்தேன் கண்ணாடியை தேடி!
கண்டு கொண்டேன் நிறுத்தி வைக்கப்பட்ட             
     வாகனத்தின் கண்ணாடி!
 கண்ணாடி மேல் அமர்ந்து 
     பிரமித்தேன் என் அழகை கண்டு!

என் அழகினைச் சொல்ல அகராதியில்
     வார்த்தைகளே இல்லை!
வண்ண வண்ண நிறங்களில்  சிறகுகள்!
என் சிரசில் இரு உணர்கொம்புகள்!
என் அழகை இரசித்தபடி பறந்து திரிந்தேன்
   உல்லாசமாக வானில்!

இந்த இளமைப் பருவத்தில் நான்
   அதிகம் ரசித்தது அழகான பூக்களையே!
அழகான வண்ண பூக்கள் அள்ளித்தரும்
   மது தேனை எனக்கு உணவாக!
இரசனையில் மயங்கி மலர்களின்
    காதலன் ஆனேன்  நான் !
காதலியை இரசிக்க விடமாட்டான்
    இந்த பாழாய்ப்  போன மானிடன்!

சின்னஞ்சிறு குழந்தைகள் 
   "ஏய் பட்டாம்பூச்சி, வண்ணத்து பூச்சி"
    என்றழைக்க,
விளையாட்டாய் பறப்பேன் உச்சம் தொட     
    நானும் !
தாங்க முடியவில்லை என்னால்
    காதலர்களின்  தொல்லை!
காதலி என்னை பிடித்துத் தா என கேட்க,
    தன் இரும்பு கரங்களால் என்னை பிடிக்க
    ஓடி  வருவான் காதலன்!
உன்னால் முடிந்தால் என்னை   
    பிடித்துக்கொள் என,
    பறந்திடுவேன் உச்சத்தில்!

அத்தருணத்தில் தான் எனக்குள்
    ஒரு கேள்வி  ஏன் இளமைப் பருவத்தை     
     அடைந்தேன்என்று?
சுதந்திரமாய் பறந்து திரிய
    விடமாட்டான்   இந்த மானிடன்!
என்னை துன்புறுத்த பல வேடங்களில் 
    வருகின்றான் இந்த மானிடன்!
குழந்தைப் பருவத்திலேயே   
     இருந்திருக்கலாம் நான்!

எனக்கே இந்த நிலை என்றால்,   
      மானிடப்பருவத்துக்கு எவ்வளவு
      துன்பம் கொடுப்பான் இந்த மானிடன்!
மானிடனே அழகை இரசித்திடு,
     அழிக்க நினைக்காதே!
மானிடனே சுதந்திரமாய் என்னைப்போல்   
      பறப்பவர்களை வாழ விடு!


Posted by: Yazhini
« on: Today at 12:15:51 AM »

வண்ணத்துப்பூச்சியின் (மனிதனின்) பரிணாமம் :

செழிப்பாக பிறந்து கொழுத்து வளர்ந்து
இன்புற்று  திரியும் சிறிய ஜீவனை
வாழ தகுதியாக்கும் தயாரிப்பு.
பழைய தன்னை அடித்துநொறுக்கி
புதியதாக புத்துயிராக மாற்றும் புதுபிறப்பு...

தன்னுள் மறைந்திருக்கும் சிறகுகளை
வெளிக்கொணர செய்யும் அழகிய உருமாற்றம்
தடைக்கற்களை வெற்றி படிக்கற்களாக
மாற்ற கற்று தரும் உருமாற்றம்
பிறரறியா தன்னை மெருகேற்றும் உருமாற்றம்

ஆனால் அவ்வுருமாற்றத்திற்கு தான்
எத்துணை இடர்பாடுகளும் எத்துணை தடுமாற்றங்களும்
எதிர்பாரா புயல்காற்று புரட்டியெடுக்கும் சூழல்
மனச்சோர்வை ஏற்படுத்தும் தனிமை
இருளில் அடைக்கும் கூடு

வலி மிகுந்த மாற்றத்திற்கு
உட்படுவதா ? அல்லது ஏற்க மறுப்பதா ?
தன்னிலை அடைய துடிக்கும்
போராட்டத்திற்கு அஞ்சுவதா ?? அல்லது துணிவதா ??

மலைகளைத் தாண்டி பயணிக்க
வலிமைத் தரும் மாற்றத்தை மறுதலிப்பதா ??
வலியே வலிமை தரும்
விண்ணையளக்கும் சிறகைத் தரும்

சுதந்திர காற்றை சுவாசித்து
விண்ணில் பறப்பதற்குதான் அத்துணை போராட்டமும்...
பலவீனமான இதயத்தையும் பலமடங்கு வலிமையாக்கும்
இயற்கையின் வன்மையான அணுகுமுறை...
இது ஒரு தந்தையின் அணுகுமுறை...
Posted by: Luminous
« on: December 22, 2025, 11:54:24 PM »

கண்ணாடியில் மலரும் சிறகுகள்
பார்க்கும் கண்களுக்கு
சிலருக்கு அருவருப்பு,
சிலருக்கு பயம்....
மண்ணில் ஊர்ந்து செல்லும்
அந்தப் புழு.
ஆனால்
அதன் மௌனத்தின் உள்ளே
ஒளிந்து கிடப்பது
வானம் ஏங்கும்
வண்ணங்களின் கனவு.
உலகம்
அழகென்று கொண்டாடும்
பட்டாம்பூச்சி,
ஒரு நாளில்
திடீரெனப் பிறந்ததல்ல,
பொறுமை சுமந்த
புழுவின்
தீராத நம்பிக்கை அது.
மனிதனே,
ஒரு சந்தர்ப்பத்தில்
நீ தவறினால்,
உன் மீது
வெறுப்பும் ஒதுக்கலும்
மழையாய் பெய்யும்....
அது உண்மை.
அந்த மழையில்
நீ புழுவென
சுருங்கி விடாதே.
தவறு” என்ற
இருள்கூட்டை
உடைத்துவிட்டு,
உன் உள்ளத்தின்
வண்ணங்களை
சேர்த்து,
வெளியே வா
வண்ணமிகு
பட்டாம்பூச்சியாக.
திருந்திய மனம்
சிறகுகள் பெறும்.
நற்பண்புகள்
வானில்
வண்ணக்கோலமிடும்.
அப்போது
உன் மனம் மட்டும் அல்ல,
உன் வாழ்க்கையும்
சிறகடிக்கும்.
எல்லைகளைத் தாண்டி.
இறுதியில்
முகக் கண்ணாடியில்
நீயே உன்னைப் பார்க்கும்போது,
ஒரு கேள்வி
மௌனமாய் எழும்:
ஆரம்பத்தில் இருந்தது நான் தானா,
முடிவில் நிற்பது நான் தானா?”

அந்தக் கணத்தில்
பதில் சொல்லும்
உன் பிரதிபலிப்பு,
புழுவல்ல,
வண்ணமிகு
பட்டாம்பூச்சி

அனைவராலும்
விரும்பத்தக்க
உன் உண்மையான
அழகிய முகம்.

LUMINOUS 😇🦋🦋🦋💚💛🧡💜
Posted by: TiNu
« on: December 22, 2025, 11:35:38 PM »



(காலத்திடம் ஓர் கேள்வி..)

காலம்!
உலக உயிர்களுக்கு எல்லாமே ஓர் அளவுகோல்.
ஆனால் அந்த காலம் எங்கே தொடங்குகிறது...
எதனுடன் பயணித்து..  எங்கே தொடர்கிறது..
எதனை அடைத்த பின்..  எங்கே முடிகிறது...
இதை யார் அறிவார்கள்? நீயா? இல்லை நானா?

காலம்!
ஓர் அணுவில் தொடங்கி.. ஓர் அண்டத்தில் முடிகிறதா?
அணுவில் இருந்து தொடங்கும் செயலுக்கு பெயர் என்ன?
அண்டமாக உருமாறி பின் .. அச்செயல் முடிந்துவிடுமா ?
இல்லை.. அண்டத்தில் இருந்து மறுபடி அணுவாக உருமாறுமா?
இதன் பதில்  யார் அறிவார்கள்? நீ? இல்லை நானா?

காலமே!
உன்னை எதை கொண்டு அளவிட்டு.. கணிக்கின்றார்கள்..
பூமியில் வாழும் உயிர்களுக்கு காலத்தின் அளவுகோல் என்ன?
வெளிச்சத்தையும்.. வெப்பத்தையும் அள்ளித்தெளிக்கும் ஆதவனா?
பாலொளியையும்.. குளிச்சியையும் அள்ளிக்கொடுக்கும் அம்புலியா?
இதன் பதில்  யார் அறிவார்கள்? நீ? இல்லை நானா?

காலமே!
பூமி மேலே உலாவும் உயிர்களுக்கு மட்டும் தான் நீயா?
பூமியின் ஆழத்தில் அடங்கிவாழும் உயிர்களுக்கும்..
நீரின் அடியாழத்தில் நீந்தி திளைக்கும் ஜீவன்களுக்கு...
நீ எதனை  கருவியாக்கி.. காலத்தை அளவிடுவாய்?..
பதில்  என்ன? சொல்..  உன் பதில் தான் என்ன? சொல்..

(காலத்தின் பதில்...)

உயிரே!
உன் கேள்விகளுக்கு இப்போதே விடைசொல்கிறேன் கேள்.
நெருப்பு கோள் சூரியனையும்.. துணை கோள் சந்திரனையும்..
பூமி சுற்றும் வட்டத்தையும் அதன் விட்டத்தையும்(Radius)..
கைக்குள் அடக்கி.. எனக்கு எல்லை கோடிட்டவன்..மனிதன்..

உயிரே!
எண்களுக்குள்ளும் இலக்கத்துக்குள்ளும் எனை அடக்கி...
எல்லையில்லா எனக்கு முற்றுப்புள்ளி வைத்தான்..
அவர்களுக்கு என்னை முழுதாக தெரியவில்லை..
எங்கே நான் உருவாகி.. எங்கே அழிகின்றேன் என்று..

உயிரே!
உனக்கு புரியும் வகையில் எளிமையா..சொல்கிறேன் கேள்..
ஓர் கரு உருக்கொண்டு.. உருவமாகி..உயிராகி..
இங்கும் அங்கும் அலைந்து.. திரிந்து..  இறுதியில்
ஓரிடத்தில் மீளாத்துயில் கொள்ளும் பொழுது..
அந்த உயிரின்.. அடுத்த பயணம் புதிதாய் தொடங்கும்..

எனக்கு (காலம்)... தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை..
அதே போல தான் நீயும்.. முடிவும் முதலும் இல்லா உயிர் நீ...
உனை(உயிர்) ஏந்தும் கூடு மாறலாம்....  மறையலாம்.....
ஆனால் நாம் என்றுமே... ஒன்று தான்... உயிரே...

Posted by: RajKumar
« on: December 22, 2025, 11:07:16 PM »

மாற்றம்
இளமை முதல் முதுமை வரை...

இளமையில் இருந்து முதுமை வரை வாழ்வில் வரும் மாற்றங்கள் நம்மை அடுத்த இலக்கை அடைய வைத்து வாழ்வை வெற்றி காண வைக்கிறது

மாற்றம் வாழ்க்கையின் பல ஏற்றத்தாழ்வுகளை புரிந்து கொள்ள வைத்து நம்மை வளமுடன் வாழ வைக்கிறது

புழுவாய் இருந்து கூட்டுப்புழுவாக உறங்கும் நிலை அடைந்து
வளர் சிதை மாற்றங்கள் தன்னுள் கண்டு அழகான வண்ணமிகு பட்டாம்பூச்சியாக உருமாற்றம் பெறுவது இயற்கையின் வியப்பாகும்

பள்ளிப்படிக்கும் பருவத்தில் புழுவாய் தன் பயணத்தை துவக்கி, கூட்டுப் புழுவாய் மனத்தை கட்டுக்குள் வைத்து சிந்தனை சிதறாமல் நற்கல்வி பயின்று பட்டப்படிப்பு முடித்து சிறகு அடித்து பறக்கும் பட்டாம்பூச்சி போல் வாழ்க்கை என்னும் பயணத்தில் முதற்படி எடுத்து வெற்றி காணும் இளமை பருவம்

இளமையில் கண்ட கனவுகளை முதுமையில் நிஜமாக்கிடும் பாதைகள் கண்டு, காதல் உறவுகள் கைக்கொண்டு வாழ்வின் கடமைகளை செவ்வனே செய்து வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து உடலில் வரும் மாற்றங்களை கடந்து, பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறப்போம்

இளமையின் சுறுசுறுப்பும் முதுமையின் நிதானமும் வாழ்வின் பல வித்தியாசமான அனுபவங்களை கற்றுக் கொண்டு பல மாற்றங்கள் அடைந்து வெற்றி பெறுவோம்

புழுவாய் பல துன்பங்களை அனுபவித்து தன்னை தானே காத்து, தன்னை சுற்றி தனிமை என்ற கூட்டுக்குள் பல சோதனைகள் வென்று புதிய அழகும் சுதந்திரம் பெற்று வண்ண மிகு பட்டாம்பூச்சியாய் வாழ்க்கையில் பல கடினமான மாற்றங்களை கடந்து புதியதாய் புது பிறவி கண்டு வண்ண மிகுந்த வாழ்வை அடைந்து மனக்கவலைகள் மறந்து பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறப்போம் வாழ்வில்.
 
Posted by: Forum
« on: December 21, 2025, 06:25:45 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 392

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்