Posted by: SweeTie
« on: Today at 08:50:18 AM »இதோ வந்துவிட்டேனடி
மென்திரையை விலக்கி எட்டிப்பார்க்கிறேன்
அவள் கண்கள் வைரம்போல் மின்ன
காத்திருக்கிறாள் என் தோழி
காத்திருப்பில்தான் எவ்வளவு மகிழ்ச்சி
ஆயிரம் மின்மினிகள் நடுவே
மகாராணிபோல் பிரகாசிப்பவள் நான்
ஒளிவிளக்கில் பளிங்குச்சிலையாக அவள்
விண்ணிலே நானும் மண்ணிலே அவளும்
எப்படி தோழிகள் ஆனோம் தெரியாது
புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று
தினம் தினம் பேசுகிறோம்
அவள் உள்ளத்தே வழிந்தோடும்
காதல் உணர்ச்சிகளை
ஒளியாமல் மறைக்காமல்
தேனீரை ருசித்து அருந்தியபடியே
என்னிடம் கொட்டி தீர்க்கிறாள்
மானசீகமான காதலில் ஒழிவேது
கண்கள் விடும் தூதுகளில் மறைவேது
இடம் மாறும் மூச்சுக்காற்றுகளில்
இனம் புரியாத உணர்ச்சிகளில்
ஊறித் தவிக்கும் காதல் இதயங்கள்
சித்திரை மாதத்தில் குயில் பாடுவதும்
மார்கழி மாதத்தில் குளிரில் நடுங்குவதும்
இயற்கையின் காதல்
காணுகையில் நாணத்தில் மூழ்குவதும்
காணாதவேளை தேடித் தவிப்பதும்
இளம் பெண்ணின் காதல்
மாலைவேளை இயற்கையின் மௌனம்
சுகமான தனிமையில் மீட்டும் நினைவுகள்
வந்து போகும் சிறு சிறு சண்டைகள்
தொடரும் ஊடலும் கூடலும்
காதலுக்கே உரித்தான மீட்டல்கள்
காலத்தால் மாறாத காதல் பண்புகள்
மேகவண்ணன் மெல்லிய வஸ்திரத்தால்
என்னை தொட்டுச்செல்கையில் எனக்குள்ளும்
காதல் தோன்றாமல் இல்லை
நானும் ஒரு பெண்தானே!
காதல் பெண்மையின் சுகமல்லவா ?
வெட்கித்துப்போகிறேன் நான்
நிலா நீயுமா ? கேட்கிறாள் என் தோழி

