Posted by: VenMaThI
« on: Today at 04:03:57 PM »குடையும் நானும்
அன்றொருநாள் அந்திசாயும் நேரம் ஆசையாய் அப்பாவுடன் நடந்து நான் போகையிலே
சில்லென வீசிய காற்று சற்று
சீறிப்பாய்ந்த உணர்வு..
மழை வரும் போலயே என்று
அப்பாவின் வாய் சொல்லி மூடவில்லை
வருணை பகவான் பெய் என ஆணையிட்டார் போலும்
பத்து எட்டு பாஞ்சு நடந்து ஒரு கடையின் ஓரம்
மழைக்காய் ஒதுங்கிய தருணம்
அப்பா அந்த குடை அழகா இருக்குப்பா...
கூறிய நொடியில் அந்த குடையை
பேரம் பேசி வாங்கிவிட்டார் என் அப்பா
அன்று முதல் என்னுடன் பயணித்த அக்குடை...
பள்ளி செல்லும் பருவத்தில்
"புள்ள வெயில்ல காஞ்சு கருவாடா போய்டும் குடை புடிச்சுக்கோ'ன்னு அம்மா சொல்ல
பள்ளிப் பருவம் முடியும் வரை என் பையில் பயணித்தது புத்தகங்களோடு அந்த குடையும்....
கல்லூரி செல்லும் காலத்திலோ
'மழையில நெனஞ்சா சளியும் காச்சாலும் வந்து அவஸ்த்தை படுவேன்மா'ன்னு சொல்லி
கல்லூரியிலும் பட்டம் வாங்க
என்னுடன் பயணித்தது அந்த குடை...
மனதில் என்ன பாதிப்போ தெரியவில்லை
பக்குவமாய் பாதுகாத்தேன் என்றுமே அந்த குடையை
பெண்ணின் திருமணத்தில் சம்பிரதாயமாக வந்த பொருட்களின் இடையில்
மறவாமல் என் குடையையும் அனுப்பியிருந்தார் என் அப்பா..
பிள்ளைகள் பெற்று பல வருடங்கள் ஓடினாலும்
ஓயாமல் என்னுடன் என்றும் இருந்தது - என் குடை
ஒய்யாரமாய் ஒரு மாலையில் ஓய்வெடுக்க
ஓரக்கண்ணில் பட்டது என் குடை..
வாழ்க்கையை நோக்கி ஓடிய நாட்களில்
அக்குடையை நான் வருத்தியது தெரியாமலேயே போனது எனக்கு
கைப்பிடி உடைந்து.. கம்பி எல்லாம் கழண்டு விழ
நல்ல நேரம் பார்க்கிறது போலும்..
வெயிலிலும் மழையிலும் பயணிக்கயிலே
என் அழகையும் ஆரோக்கியத்தையும் காத்த
என் குடையின் கருந்துணி
கலையற்று... கிழிந்து போக என்னிடம் அனுமதி கேட்டது
"என்னால் முடிந்தவரை என் மனசாச்சிக்கு தெரிஞ்ச வரை
உன்னை நான் பாதுகாத்தேன்
எனக்கும் வயசாகி போச்சு
என்னை தூக்கி எறிந்து..என் இடத்தில்
வேறு ஒரு குடையை வாங்கி வை' என்று சொல்லாமல் சொன்னது என் குடை
நம் வாழ்க்கையும் இப்படித்தானே?
என்று என் மனசும் சொல்லாமல் சொல்லியது
என்ன தான் ஓடாய் உழைத்தாலும்
என்ன தான் பாசமழை பொழிந்தாலும்
நமக்கும் வயசாகும் காலம் வரும்
நம்மையும் தூக்கி எறியும் நாள் வரும்
நான் தான் என்பதெல்லாம்
என்றுமே நிலைக்காது
நம் இடம் என்றும் வெறுமையாய் போகாது
காலப்போக்கில் அதை நிரப்ப
வேறொருவர் என்றுமே வருவார்
என்பதை மனதில் கொண்டு
இருக்கும் இந்த நொடி மட்டுமே நிச்சயம்
அந்த நொடியை இன்பமாய் கழிப்போம்
அடுத்தவரை காக்கும் குடை போல்
இயன்றவரை பிறருக்கு உதவியாய் இருப்போம்...
இன்புற்று இரு
பிறரையும் இன்பமுறச்செய்......


