Post reply

Warning - while you were reading a new reply has been posted. You may wish to review your post.

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: சாக்ரடீஸ்
« on: December 02, 2025, 09:30:51 PM »

சிலர் யோசிப்பார்கள்
யாரைக் காதலித்து தோல்வி அடைந்தது 
இந்த மழை அதனால்தான் இப்படி 
வானின் கரும் மேகங்களில் இருந்து 
கண்ணீராய் கனத்த சோகமாய் 
தாரை தாரையாகக் கொட்டுகிறது. 

நினைவுகளின் மேகம் கூடி நிற்கும் போது 
மின்னல் ஒரு வலியாய் பாய்ந்து பிளக்கும்
ஆகாயம் தாங்காமல் துடிக்கும் போது 
துளியாக உடைந்து
துளியாக உருண்டு
துளியாக உதிர்ந்து 
பூமிமேல் விழுந்து அழுகிறது. 

ஆனால்… 

மழை ஒருபோதும் பலவீனம் இல்லை
அது பொறுமையின் சிலையே 
அது அமைதியின் உச்சமே. 

ஒவ்வொரு துளியும் 
ஒரு உறுதிமொழி 
ஒரு பிரார்த்தனை 
ஒரு பயணத்தின் முதல் அடி. 

மலையின் பாறைகள்
எழுந்து நின்றாலும் 
அவற்றின் கடினமான
வலிமையான மார்பில் 
மழை தன் விரல்களை நுழைத்து 
இடுக்குகளைத் தேடி
பிளவுகளை விரித்து 
பல்லாயிரம் ஆண்டுகளாய் 
பொறுமையாய்ப் பயணித்து 
இறுதியில் கடலையே சேர்ந்து விடும். 

கல்லாய் இறுகிய நெஞ்சங்களும்   
அதன் முன் தோற்றுப் போகும்
ஏனென்றால் மழைக்கு 
வலிமை இல்லை என்று நினைப்பவர்கள் 
அதன் மென்மையை மறந்து விடுகிறார்கள்
மென்மையே உலகை வென்றது என்பதை 
மழை தன் வாழ்வியலில் காட்டுகிறது. 

காதலில் தோற்றதாக நினைத்து 
வானம் அழுதாலும் 
அந்தக் கண்ணீரே 
பூமியின் வயிற்றில் 
பசுமையாய்ப் பிறக்கும். 

ஒரு சிறு விதையின் மீது 
ஒரு துளி விழுந்தால் போதுமே
அது மரமாகும் 
அது காடாகும் 
அது வாழ்வாகும். 

அதனால் தான்
மழை அழுவதில்லை
மழை புன்னகைக்கிறது. 
ஒவ்வொரு துளியும் 
ஒரு புதிய தொடக்கத்தின் 
முத்திரையாய் விழுகிறது. 

இன்று
நீர் வடிவில் வந்தாலும் 
பின்னர் பூவாக
பின்னர் காற்றாக 
பின்னர் வானவில்லாக 
பின்னர் மழையாக திரும்பி வரும். 

காதல் என்றும் தோற்று போவதில்லை
நாம் அதை காதல் தோல்வி
என்று நினைக்கிறோம் 
அது உண்மையில் ஒரு விதை 
விழுவது தோல்வி இல்லை
விழுந்த இடத்திலிருந்து 
முளைப்பது தான் வெற்றி. 

எனவே… 

மழை பெய்யட்டும். 
அதன் கண்ணீரில்
நனையட்டும் நம் நெஞ்சம். 
ஏனென்றால்
அந்த நனைவில்தான் 
நமது உடைந்த காதல்களும் 
ஒரு நாள் பூக்களாகும். 

மழை உணர்த்துவது
மனம் விட்டு அழு ஆனால் நிற்காதே. 
விண்ணை தாண்டி விழு ஆனால் முளைத்தெழு. 

அதனால் தான் 
இந்த மழை 
எப்போதும் அழகாய் 
எப்போதும் வலிமையாய் 
எப்போதும் நம்பிக்கையாய் 
பெய்கிறது… பெய்கிறது…. பெயிந்து கொண்டே இருக்கிறது
Posted by: Luminous
« on: December 02, 2025, 04:47:20 PM »

      “போராட்டமும் பொழுதுபோக்கும் ஒரே மேகத்தில்”                                      காலை இருள் இன்னும் கரைந்திருக்க,
மழை கோபமாக தரையைத் தாக்க,
குடையை மார்போடு அழுத்திக் கொண்டு
வழுக்கி விழாமல்
சின்னச் சின்ன படிகளில் முன்னேறுகிறான்
ஒரு சாதாரண மனிதன்.

அவன் சிந்தனையின் உள்ளே
ஒரே ஒரு சத்தம்😌
இன்று வேலைக்கு தாமதமா ஆக கூடாது…
இல்லேனா சம்பளத்தில் குறைவு😔
குழந்தைகளின் மதிய உணவுக்கே பிரச்னை

மழை அவனை நனைத்தாலும்,
அவனின் மனதை நனைக்கவில்லை.
ஊதியக் காசில்
உணவு, பள்ளி கட்டணம், மருந்து😐
ஒவ்வொன்றும் கணக்காக நடக்கிறது.
அதனால் தான்
ஒவ்வொரு துளியும்
அவனுக்கு ஒரு பொறுப்பு.

அதே நேரத்தில்🤔

அதே மழையை
ஒரு பெரிய மாளிகையின் பின்தோட்டத்தில்
கைகள் பரப்பி
உயிரோடு ஊற்றிப் பெருகும் ஓசையாகக் கேட்கிறான்
மற்றொருவன்😎ஒரு பணக்காரன்.

விலையுயர்ந்த செடிகளின்🌹🌱 இலைகளில்
மழை தட்டும் சத்தத்தை ரசிக்கிறான்😇.
அவன் நடக்கும் பாதையில்
பெரிய கல்லணைகள், அழகான பூங்கா,
செடிகளின் வாசம்🌲
அனைத்தும் ஒரு ஓவியம் போல.

அவனுக்குப் மழை
ஒரு விளையாட்டு,
ஒரு சுகம்,
ஒரு நிம்மதி.

ஆனால் அந்த சாதாரண மனிதனுக்கோ🤔
அதே மழை
ஒரு போராட்டம்,
ஒரு கடமை,
ஒரு நாளைய நம்பிக்கையைத் தாங்கும் சுமை.

ஒரே இயற்கை🌧
ஆனால் வாழ்க்கை
இரு வேறு பாதைகளில் ஓடுகிறது.

ஒருவரின் மழை
பொறுப்புகளின் நிறை☔
மற்றொருவரின் மழை
பொழுதுபோக்கின் நிழை☔

இதுதான்
மனித வாழ்வின்
எளிய ஆனால் ஆழமான உண்மை.🔥💞
☔   💫 𝓁𝓊𝓂𝒾𝓃𝑜𝓊𝓈 பார்வையில் குடையும் மழையும் 💫             
Posted by: Vethanisha
« on: December 02, 2025, 12:39:58 PM »

கரு கரு மேகக் கூட்டம்
விறு விறு என வானைச் சூழ

கட முடா இடியின் சத்தம்
டம் டம் என செவியை வறுத்த

மினு மினு மின்னல் வந்து
பளீச் பளீச் என சிரித்து போக

தட தட  என  பொழிந்த மழையும்
கட கட என கருங்குடையின் மேலே
குடு குடு என ஓடி ஆட

திடு திடு என கொட்டும் துளிகள்
சத சத என என்பாதம் நனைக்க

சர சர என வீசும் காற்றும்
என் காதோரம்
கிசு கிசுத்து  என் கூந்தல் அசைக்க

கம கம  ஈர மண்ணின் வாசம்
விசு விசு என என் நாசி நுழைய

குளு குளு என தேகம் சிலிர்க்க
பட பட என நெஞ்சும் துடிக்க

அட அட என இயற்கையில் லயித்து
மச மச என்று நின்ற என்னை
 
திரு திரு என விழித்துக் கொண்டு
விறு விறு என  ஓடிவந்து

தர தர வென கையை இழுத்து
சொட்ட சொட்ட நனைய வைத்து

கல கல என சிரித்தாள்
என் வீட்டின் குட்டி மகாராணி  .. ♥️

சில சமயம்
கன  கன இதயத்தைச்
சிலு சிலு என  வருடித்தான்
போகின்றன

மழையின் ஈரமும்
மழலையின் புன்முறுவலும் ♥️









Posted by: joker
« on: December 01, 2025, 10:58:58 PM »

மழை…ஓர் நாள்

அது வானத்தின் கண்ணீரோ
இல்லை
வறண்ட பூமியின் ஆனந்த கண்ணீரோ

சில நேரம் மழை
சிறு புன்னகை போல
சிறு சிறு துளிகளாக மண்ணை
முத்தமிடும்

சில நேரம்
யாரோ தனது சோகத்தை
சிறுக சிறுக மேகமாய் சேமித்து வைத்து
ஓர்நாள் கொட்டி தீர்க்கிறதோ
மண் மேல் என தோன்றும்

சிலரது வாழ்க்கை
மழை இல்லாமல்
வறண்டு போகும்
சிலரது வாழ்க்கையிலோ
அளவுக்கு அதிகமாய்
அவர்களையே மூழ்கிட செய்யும்

மழை பெய்கையில்
குழந்தை மனது
பள்ளி விடுமுறையை எதிர்பார்க்கிறது
முற்றத்தில் தேங்கிய நீரில்
விளையாடி துள்ளி குதிக்கிறது

தாயின் மனமோ அதை ரசிக்கிறது
சூடாய் பஜ்ஜி பக்கோடா செய்து தர
முற்படுகிறது

தந்தைக்கோ
விடுமுறையில்லா நாளாக
குழந்தையாய் இருந்தபோது ரசித்ததை
அசைபோட்டு ஒரு பயணம்

விதை விதைத்து
மழைக்காக காத்திருக்கும்
விவசாயிக்கோ
மண்ணை மட்டுமல்ல
மனதையும் குளிர்விக்கும்

தினக்கூலி செய்பவருக்கோ
பட்டினியில் ஒரு நாள்
அழையா விருந்தாளியாய்
மழைநீர் வீட்டுக்குள்

அரசுக்கோ
திட்டமிடாத
மழை நீர் சேகரிப்பு குழி போல
சாலையெங்கும் தேங்கும் நீர்
அசம்பாவிதம் ஏதுமின்றி -வடிந்திட
அயராது உழைக்கும்

மழை விட்டு சென்ற
ஒவ்வொரு துளியிலும்
விதைகள் முளைக்கின்றன
மனிதரின் ஒவ்வொரு கண்ணீரிலும்
புதிய உறுதி முளைக்கிறது.

அளவோடு பெய்தால்
செழிப்பாய் வளரும் பயிர்கள்
அதிகமாய் பெய்தால்
அழிந்திடும் உயிர்கள்

அது மழைக்கு மட்டுமல்ல
மனித உணர்வுகளுக்கும் பொருந்தும்.
.


***Joker***

Posted by: KS Saravanan
« on: December 01, 2025, 10:40:12 PM »

மழைத்துளியில் அவளின் நினைவு..!

காரிருள் மேகங்கள் ஒன்றாக கூடி
மனதின் ஓரத்தில் ஒளிந்திருந்த
நினைவுகளை எழுப்பி விட்டது மழை..!

காரிருள் குடைச்சிறகின் மீது
வெள்ளித் துளிகள் முத்தமிடும் நேரம்
உலகமே புதிதாய்த் தெரிகிறது..!

தென்றலாய் வீசும் குளிர் காற்று
மேனியை தழுவும் வேளையில்
என்னவளின் நினைவுகளில் என் மனதோ
ஆனந்த ராகம் பாடி மகிழ்கிறது..!
 
மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்ற
தோன்றிய அத்தனையும் அவளின்
நினைவுகளை சுமந்து கண்களில்
மழைத்துளிகளாக மண்ணில் விழுகிறது..!

மண்ணில் விழும் ஒவ்வொரு துளியும்
புதியதாய் முளைத்த புதுக்கவிதையாய்
மீண்டும் மீண்டும் தோன்றும் அவள்
என் மனதில் ஒரு வானவில்..!

மழையின் கீதமும் நனைந்த மண்வாசமும்
ஆழ் மனதின் கதவை திறக்க
கனவுகள் கண்முண்ணே காண
என்றும் புதிய மழைத்துளி அவள்..!

அடைமழையில் குடையின் கீழ் நின்றாலும்
மனது மட்டும் மழையில் நடமாட
காற்றோடு சேர்ந்து துள்ளி குதித்து
கவிதை வரிகளாக என்னிடம் அவள்..!

கருமேகம் காற்றில் கரைந்தாலும்
நீல வானம் மேற்கில் தோன்றினாலும்
தோகை மயிலின் நடனமாக
கார்குழலிசையாக என்றும் அவள்..!

மழை நின்ற பின்னும் கூட
இதயத்தில் சுவாசமாய் அவளின் நினைவு
படபடக்கும் பட்டாம்பூச்சியாய் 
என்றும் மனதில் பறக்கிறாள் அவள்..!

இது மழையால் மட்டுமே அல்ல
என்மனவானில் அவள் ஒரு சூறாவளி
அவளின் பாச மழையில்
அடித்து செல்லபட்ட என்மனம்
அன்பெனும் கடலில் சேரும் நேரமிது..! :)
Posted by: Minaaz
« on: December 01, 2025, 10:30:09 PM »

மெல்லிய சினுங்கல்களும் மிகை மிஞ்சிடும்
மனதோரத்து களிப்பில்..

வரும் பொழுது வாகை சூட ஏங்கிடும்
 மண்ணோடு மண்டியிட்ட மானிடனுக்கு..

மழலையும் ஸ்ருதி பாடிடும்
 அவ்வளவு அருமை
மண்ணோடு அடைக்களம் புகும்
சிறுதுளி மழைத்துளியில்.

மண்ணிற்கும் மனதிற்கும் புத்துணர்வாய்,
தாகம் தீர்க்கும் தீர்த்தமாய் ,
விவசாயிகளின் இதழ் ஓர
ஒரு சிறு புன்னகையின் காரணியாய் மழை.
உன்னால் இந்த பூமியும் குளிர்ந்து
 காற்றும் குளிர்ந்து
அந்த மாயாஜால வித்தையில் மனமும் குளிர்ந்திடும்..

மழைத்துளிகளை எவ்வளவு கொஞ்சிட எண்ணினாலும்
 அதன் சிறு துளியில் தன்னைக் காக்க
அதற்கான தடுப்பாய் குடை ஒன்றினை
ஏந்தாமலும் இருந்ததில்லை..

வரண்ட நிலத்தையும்
பசுமையாக்கும் சக்தியும் மழைக்கு உண்டு
அதுபோல் பசுமை பொங்கும் நிலத்தையும்
புதை குழியாக்கிடும் வல்லமையும் உண்டு..

அழகில் தானே ஆபத்து அதிகம் உண்டு அல்லவா??!

அரண்மணை வாயிலில்
பாதுகாப்புக்கென அமைக்கப்பட்ட அரண்களையும்
அரை நொடியில் அள்ளி வீசும் அளவிற்கு
ஒரு சிறு துளி ஒன்றிணைவதன் துயரும் எட்டிடும்.

இயற்கையோடு பலரையும் பிண்ணிப்பிணைத்திடும் மழையே, இயற்கையென்றால் ஆபத்தும் நிறைந்திருக்கும் என்பதை
 நிரூபிக்காமல் இல்லை
 

வாய் வார்த்தைகளால் மொழிந்திடவும் முடியவில்லை
 கண்ணீரால் கரைத்திடவும் இயலவில்லை
 எத்துனை சேதங்கள் எத்துனை உயிர்கள்..

பிராணிகளும்
மானிடங்களும்
பிணங்களாய் அள்ளப்பட்ட கொடூரம்..

பிஞ்சுகளின் அழகிய புகைப்படங்களும்
அடிக்கடி வலைத்தளங்களில் பரிமாறப்பட்டு
பலரின்  உள்ளத்தையும் உடைவுக்குள்ளாக்கிய கோரம்..

எதனை சொல்வது ?
எத்துனை சேதங்களை குறித்து நிற்பது...
ஓர் உயிருக்காய் பல உயிர்களின் போராட்டத்தையா??
 பல உயிர்கள் போராடினும் காக்க முடியாமல்
பரிபோன உயிர்களையா??
போதும் என்று சொல்லி இயற்கையோடு
கைகூப்பி நிற்கும் நிலையினை உருவாக்கி விட்டது.

திடீரென இடம்பெற்ற சீற்றம்
பல உயிர்களை  சூரையாடினாலும்
இன்னும் பல உயிர்களுக்கு பல்வேறு பாடத்தையும்
கற்றுக்கொடுக்கத்தான் செய்திருக்கிறது..

மனித நேயமும் இன்னும் பலரில் மாண்டு விடவில்லை
நேரம் வரும் போது புலப்படும் என்பதும்,
இயற்கையை இயற்கையாகவே கையாள்வது சிறந்தது
அதற்குள் செயற்கைகளை புகுத்தி வேடிக்கை பார்ப்பதும்
உகந்ததல்ல என்பதுவும் எமக்குணர்த்திய பாடங்களாகும்.[
Posted by: Thenmozhi
« on: December 01, 2025, 10:23:43 PM »

   "உதவும் கரங்கள் குடை பேசுகிறேன்...."


இங்கிலாந்து நாட்டில் ஓர் அற்புதமான கட்டடம் தான் எனது பிறப்பிடம்!
இயந்திரம் மூலம் எலும்புகளாக கம்பிகளும்,என் தோலாக கறுப்பு துணியினால் போர்த்தி வடிவமைக்கப்பட்டேன்!-என்
இரும்புக் கால்கள் தான் மானிடன் கரம் பற்றும் உன்னத அங்கம்!
இணைபிரியாத நண்பர்களாக பல வண்ணங்களில் ஜொலித்தவாறு வண்டியில் ஏற்றப்பட்டோம்!

எமது வருகைக்காக காத்திருந்தார்கள் வர்த்தகர்கள்!
எங்களை பணம் கொடுத்து வாங்கி,பத்திரமாய் கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைத்தார்கள்!
என் கறுப்பு அழகில் மயங்கிய தேவதை என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள்!
எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், என் நண்பர்களை பிரியும் துக்கத்துடனும் சென்றேன்!

அவள் என்னை செல்லமாக " குடை" என அழைத்து ,வீட்டில் உள்ள எல்லோருக்கும் காண்பித்து மகிழ்ந்தாள்!
அந்த அரக்கி அடுத்த நாளே என்னை ஒரு மூலையில் போட்டுவிட்டு,வேலைக்குப் போக தயாரானாள்!
அங்குமிங்குமாக என் மனம் அலை பாய்ந்தது!
அழுதேன் என் தனிமையை எண்ணி!

முழங்கியது இடி,வானம் இருண்டு மழை சோ....எனப் பொழிந்தது!
முணு முணுத்தவாறே "என் குடை எங்கே?"ஓடி வருகிறாள் அந்த அரக்கி!
முழித்தவாறே அவளுடன் பயணிக்கத் தொடங்கினேன்!
முதன் முதலாக என் மேனியில் பட்டுத் தெறித்தன முத்தான மழைத்துளிகள்!
முற்றுமுழுதாக நான் நனைந்து என் தேவதையை காப்பாற்றினேன்!

என் மேனியில் பட்டு வழிந்தோடும் மழைநீரை இரசித்தேன்!
எட்டி வானத்தைப் பார்க்கும் போது ஏழு வர்ணங்களில் வானவில்லை இரசித்தேன்!
எட்டுத்திசையிலும் எல்லோர் கைகளிலும் என் நண்பர்களைப் பார்த்து இரசித்தேன்!
என் காதுகளில் ஒலித்த வானிலை அறிக்கை " தொடர்ந்து கனமழை" என்பதை இரசித்தேன்!
என்னை இனி தேவதை தனிமையில் விட்டுச்செல்ல மாட்டாள் என மகிழ்ச்சியில் சிரித்தேன்!

என் அன்புத் தோழன் மழை ,ஏனென்றால் அவன் வரும்போது தான் சந்தோசமாக நான் வெளியில் நடமாடுவேன்!
என் தோழன் சிலவேளை என்மீது கோபம் கொள்வான் ,சீக்கிரமாக கடலை அடைய நான் தடுக்கிறேன் என்று!
என் எலும்புகளை உடைத்தெறிவான் கூடா நட்பு புயலுடன் சேர்ந்து!

கடவுள் முதல் காதலர்கள் வரை..
மன்னர் முதல் மகளீர் வரை..
குழந்தை முதல் முதியவர் வரை..
சிறு வர்த்தகத்திற்கு கூரையாக ..
வீடு இல்லாதவனுக்கு புகலிடமாக
வெயில்,மழை இரண்டிலும் காப்பாற்றுவது
"குடை "நாங்கள் தானே !

என் படைப்பின் அர்த்தம் புரிந்து பெருமிதம் கொள்கிறேன்!
என்னை விரித்து பயன்படுத்தும் போது என்னை நேசியுங்கள்!
எனக்குள்ளும் ஒரு அழகிய ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது....
என்னை உடைத்து எறியாதீர்கள்....ஏனெனில் உதவும் கரங்கள் நாங்கள்...






Posted by: Agalya
« on: December 01, 2025, 10:19:03 PM »

மழையே மழையே… நீரின் திரையே

எத்தனை தேவைகள்
எத்தனை பரிமாணங்கள்
எத்தனை இன்னல்கள்
ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும்
மழை ஒவ்வொரு விதமா வியாபிக்குது

பள்ளி போற குழந்தைங்களுக்கு
“அப்பாடா மழை பேயுது!
எப்படியாவது லீவு விட்டுடுவாங்கனு”
காலை எட்டு மணி வரைக்கும்
நியூஸ் பாத்துட்டு நிப்பாங்க
மழைத்துளி ஒவ்வொன்றும்
லீவு லெட்டர் மாதிரி தோணும்

இதே காலேஜ் போற இளைஞர்களுக்கு
“என்னடா இது… இன்னிக்குத்தான்
லவ்வரோட டேட்டிங் வெச்சிருந்தேன்
இன்னிக்குன்னு பாரு… மழை வந்து
நம்ம பிளான் எல்லாத்தையும் சொதப்புதேடா”
அப்படின்னு ஒரே பீலிங்

இதே வேலைக்கு போற இளைஞர்களுக்கு
அடாத மழையிலும்
விடாது குடை பிடிச்சுட்டு
TL-க்கு பயந்து
மேனேஜருக்கு பயந்து
HR-க்கு பயந்து
கொட்ற மழையிலேயும் பைக் ஓட்டிட்டு போவாங்க

இதே விவசாயிகளுக்கு
அளவா பேஞ்சா…
“சூப்பர் பாசனத்துக்கு குறை இருக்காது”
ஆனா அதிகமா பேஞ்சா
“ஏங்க நெல்லெல்லாம் நீரில் பாலா போச்சுங்க…
மானியத்தை முதல்ல பார்த்துக் கொடுத்துடுங்க”
அப்படின்னு அரசு கிட்ட கெஞ்சுவாங்க

இதுக்கெல்லாம் மேல
ஒரு ரகம் இருக்கு
அசர வைக்கிற ரகம்
Work From Home warriors
ஏழு to நாலு ஷிப்ட் ஆ இருந்தாலும்
மழைக்கால அட்ராசிட்டி தொடங்கிடும்
வேலையை தவிர எல்லாம் நடக்கும்
மழைக்கு என்னெல்லாம் பண்ணலாம்?
பஜ்ஜி-வடை எப்படி சாப்பிடலாம்?
போர்வைய இழுத்து போத்தி எப்படித் தூங்கலாம்?
ஓப்பியடிக்கவா… இல்ல சும்மா மழை சத்தம் கேட்டுட்டு படுக்கவா?
இல்ல ரீல்ஸ் பார்க்கவா?
இல்ல பிக் பாஸ் பார்க்கவா?
இப்படி யோசிக்கிறதே ஒரு பெரிய வேலையாயிடும்

தரையில கால் வெச்சா
சில்லுனு இருக்கும்
பேன் போட்டா குளிரடிக்கும்
ஆஃப் பண்ணினா கொசு கடிக்கும்
வெயில் அடிக்குமானு எட்டிப் பார்த்தா
“வெயிலா? வரவே மாட்டேன்”னு
மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது
ஒரு பக்கம் மழை பேஞ்சு
சந்தோஷமா இருந்தாலும்
மறு பக்கம் இம்சையாத்தான் இருக்கு
சரி… நம்ம போவோம்
இப்படியே புலம்பிட்டு இருந்தா
யார் வேலை பார்க்குறது?
யார் சோறு போடுறது?
அடேய்…
ஏழு to நாலு ஷிப்ட்டு
வேலை பார்க்க வந்துட்டேன் டா !
Posted by: Forum
« on: November 30, 2025, 06:31:16 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 389

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்