Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Yazhini
« on: November 05, 2025, 11:29:07 PM »

ஐயிரண்டு மாதம் உதிரம் பகிர்ந்த இளந்தளிரே!
அன்பில் உதித்த அழகிய கவிதையே!
இரண்டாம் ஜனனம் தந்த இறைவியே!
உனக்காக என் எழுத்துகள்...

மாதராய் பிறப்பதற்கு மாதவம்
செய்திருத்தல் வேண்டுமாம்...
ஆம் மாதவத்தால் மாதரானோம்
மன இருளைப்போக்கும் ஒளியவோம்...

மென்மையும் தண்மையும் கொண்ட
மதியாய் மட்டுமல்லாமல்
அறிவு ஜோதியில் உலகையாளும் கதிராவாய்...
நிமிர்ந்த நன்னடையுடன் நேர்கொண்ட பார்வையுடன்
தீயாய் பாரதியாய் வளர்ந்திடுவாய் 🔥

வெட்ட வெட்ட துளிர்த்திடும் மரமாவாய்
முகிலைத் தாண்டி பறக்கும்
கழுகின் மனதிடம் பெற்றிடுவாய்.
இனிய மணம் பரப்பும் மலராவாய்
தன்னை காக்கையில் முட்களாய் உருமாறிடுவாய்...

அறிவை ஆயுதமாய் பெற்றிடுவாய்
அன்பை கவசமாக அணிந்திடுவாய்
பிறர்நலன் பேணுவதில் தன்னிறைவு அடைவாய்
அதை கல்விசெல்வம் கொண்டு காப்பாய்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை
மந்திரசொல்லாய் நினைவில் கொள்வாய்
உன் உலகை மாற்றி அமைக்கும்
தெளிந்த மதிநுட்பம் பெற்றிடுவாய்

தேடி தேடி கற்றிடுவாய்
பிழைகளால் தெளிவு பெறுவாய்
மனித புத்தகங்களைப் படித்திடுவாய்
சமூக சிந்தனையுடன் வளர்ந்திடுவாய்

இன்பதுன்பம் இரவுபகல் போன்றது
என்பதை பட்டறிவால் பெற்றிடுவாய்
அனைத்தையும் இன்முகமுடன் கடந்திடும்
துணிவை துணையாக கொள்வாய்

என் இனிய பிள்ளைத்தமிழே!!!
கள்ளக்கபடமற்ற இந்த அழகிய
மழலை உள்ளத்தை மட்டும்
என்றும் வரமாய் பெற்றிடுவாய்...
Posted by: joker
« on: November 05, 2025, 12:47:02 PM »


கொடுப்பவருக்கும்
பெறுபவர்க்கும்
ஒரே நேரத்தில் ஆனந்தத்தை கொடுக்கும்

கேட்டு கேட்டு வாங்குவோம்
திகட்டாத சுவை கொண்டது

கொஞ்சியும்
சில நேரம் கெஞ்சியும்
பெற தூண்டுவது

வார்த்தைகள்
அர்த்தமற்று போன நேரம்
உணர்வுகளை பரிமாறிக்கொள்ள
இவை 
உதவுவதுண்டு

காலத்தின் க்ரூரத்தில்
சிக்குண்டு வாழ்கை சுழன்றுகொண்டிருக்க
பசுமை சோலையாய் மாற்றிடும்
மழலையிடமிருந்து பெறுகையில்
ஒரு கணம்

அது ஒரு மந்திரம்
அது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
அது ஒரு மருந்து
வலியை  குணப்படுத்தும் மருந்து

அம்மாவின் அரவணைப்பில்
அன்பை பிரதிபலிக்கும்
அம்மாவிற்கோ முழு பிரபஞ்சமும் கிடைத்த
சந்தோஷத்தை பகிர்ந்திடும்

ஒரு கணம் தாய்மையின் உலகம் திறக்கும்,
அந்த நொடி நித்தியமாய் நிற்கும்.
மழலையின் முத்தம்

****Joker****
Posted by: Asthika
« on: November 05, 2025, 06:51:21 AM »

என்னை சுவாசிக்க வாய்த்த அவளுக்காக நான் வாசித்த
முதல் கவிதை அம்மா....
இதயம் உடல் இல்லாத உயிர் உன் கருவறையில் நான் 
 மூச்சடக்கி ஈன்றவள் என் அம்மா மூச்சுள்ளவரை காப்பேன்  உன்னை
அன்பின் ஸ்பரிசம் ,  கவின் நேசம் ,மனதின்கீதம் ,தாயின்   பாதம்
இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும்  தோற்றத்திற்கு கொண்டுவந்த
 உறவு தான் என் அம்மா
 நான் வாசித்த கவிதைகளில் என்னை யோசிக்க வைத்த வரி  அம்மா  .....                                                                                                                                       சுவாசித்த இதயங்களில் நேசிக்க வைத்த இதயம் அம்மா  ..... 
 
 சிறுபிள்ளைத் தனமாக தவறுகள் செய்தால்! பிறரைப் போல   தண்டிக்காமல்! சரியானத்தைச் சொல்லி கண்டித்து!
அழுதுநடித்தால்! அதையும் மன்னிப்பவள் நீதானே அம்மா!
என் உடலில் ஏற்படும் காயத்தின் வலிகளை! மனதில்   உணர்பவள்  நீதானே அம்மா
 
என் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக! உன் தேவைகளை                             குறைத்துக்கொண்டவள் நீதானே அம்மா!
 
மழையில் நனைந்த என்னை
முந்தானையில் அனைத்து
பாசத்தோடு தலை துவட்டும்
போது அந்த மழையும்
பொறாமை கொள்ளும் தாயே

அம்மா என் சகலமும் நீ…
அம்மா நான் நிதம் தேடும் உயிர் நீ…
அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டுமே

என்னை எழுதியவள் நீ உன்னைப் பற்றி நான் என்ன எழுதுவேன் என் தாயே
என் உலகம் நீ உயிரும் நீ
Posted by: Clown King
« on: November 05, 2025, 01:14:46 AM »

மழலையின் முத்தம்
தேவர்கள் பாற்கடலைக் கடைந்து
அமிர்தத்தை எடுத்தார்கள்
சொல்லிக் கேட்டதுண்டு சுவைத்ததில்லை அமிர்தத்தை ஆனால் அமிர்தத்தின் சுவையை என் மகளின் முத்தத்தில் சுவைத்தேன்
அமிர்தமும் இதைவிட சுவையாக இருக்குமோ என்ற ஐயம் என் மனதில் இனி இல்லை

வாழ்க்கை என்னும் சீற்றத்தை தினம்தோறும் அரங்கேறும் இன்னல்களை துடைத்தெறிவதற்கு உண்டான ஒரே மருந்து என் மகளின் முத்தமே
பணி முடிந்து களைப்பில் வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தின் ஒலியை கேட்டு அப்பா வந்துட்டாரு என வாயில் கதவை நோக்கி தவழ்ந்து வந்து காத்திருக்கும் அந்த தருணம் கையில் தூக்கியவுடன் மிகுந்த சந்தோஷத்தோடு அவள் கொடுக்கும் முத்தம் அத்தனை களைப்பிற்கும் மருந்தாக அமைந்து எத்தனை ஜென்மங்கள் வேண்டுமானாலும் இவனுக்காக உழைத்திட தோன்றிடும் களைப்பில்லாமல்

தாயின் முத்தத்தை என் நினைவு தெரிந்த நாட்களில் நான் பெற்றதில்லை என் தாயின் அவதாரமாய் மீண்டும் இம்மண்ணில் எனக்காக பிறந்து என் கன்னத்தில் முத்தமிட்டதை என் தாயே எனக்கு முத்தமிட்டதாய் கர்வம் கொள்ளச் செய்தாய்

அன்பு பாசம் கொண்டு என் மகள் கொடுத்த முத்தம் மீண்டும் என்னை வாழச் செய்தது இவ்வுலகில் அவளுக்காக எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அவை யாவும் இதற்கு ஈடாகுமா கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் மகளின் முத்தத்திற்கு இவ்வுலகை வைத்தாலும் ஈடாகுமா

என் வாழ்வின் அர்த்தம் என் மகள் என்னை வாழ வைப்பது அவள்  அன்பு பாசம் அதை வெளிக்காட்டும் அவனது முத்தம் அது வெறும் அன்பு பாசம் மட்டுமல்ல அவள் என் மேல் கொண்ட நம்பிக்கையும் கூட

என் வாழ்வும் தொடரும் வாழ்க்கையும் தொடர்ந்திடும் என்றும் அன்பு மகளின் முத்தத்திற்காக மட்டுமே ...
Posted by: Thooriga
« on: November 04, 2025, 08:29:26 AM »

என் குட்டி தேவதையின் முத்தம்

காலைல அலாரம் அடிக்க அச்சோ நேரம் ஆச்சேன்னு அடிச்சு புடிச்சு எழுந்திரிச்சா

அம்மா....

எங்க போறீங்கனு....

 மழலை மொழியில...என்ன தனியா விட்டு போகாதீங்கன்னு   அர தூக்கத்தில் கொஞ்சும் குரல் கேட்கும்...

அச்சோ மாடிக்கிட்டோம்....

என்ன செய்ய நேரம் வேற ஆகுதுன்னு யோசிச்சு சரி கொஞ்ச நேரம் கட்டி புடிச்சு தூங்க வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்...

அதுக்கு அப்பறம் எல்லா வேலையும் முடிச்சு ... போய் எழுப்பினா...

அம்மா.... கொஞ்ச நேரம் தூங்குறேன்னு  கொஞ்சலோட ஒரு  கெஞ்சல் வரும் பாருங்க..

எப்படியோ அதையும் சமாளிச்சு எழுப்பி குளிக்க வெச்சு, சாப்பிட வெச்சு, ஸ்கூல் போக அனுப்பியாச்சு .....

அடுத்த நானும்  ஓடனும்....


கொஞ்சம் கூட நேரம் இல்ல ....இணைக்குனு இவளோ வேலையானு தோன்ற அளவு வேலை குமிஞ்சு கிடக்க..

அதையும் முடிச்சு கிளம்பும் போது கை , கால் , தல ன்னு எல்லாமே வலிக்கும்..

இதுல வீட்டுக்கு போக அற மணிநேரம் பயணம் வேற...

என்ன வாழ்க்கடான்னு தோணும்...


வீட்டு கதவுல கை வைக்கும்போது...

என் குட்டி தேவதையின் பிஞ்சு காலில் அணிந்து இருக்கும் கொழுசொலியும்.... அவள் மழலை சிரிப்பொலியும்... கேட்ட அடுத்த நொடி...

இருக்கும் களைப்பு பாதி பறந்தாச்சு....

அம்முன்னு நா ஒரு குரல் குடுக்க...

அம்ம்ம்மா  ன்னு

பிஞ்சு பாதங்கள் என்னை நோக்கி ஓடி வந்து ...மேல தாவி குதிச்சு...

என் தேவதை குடுக்கும் ஒற்றை முத்தம்...


இன்னும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ....நீ பார்க்க உனக்குன்னு நா இருக்கேன் அம்மா ...

சொல்லாம சொல்லும் அந்த முத்தம்...

என்னை படைத்த இறைவனும் பொறாமை கொள்ள எனக்கு மட்டுமே அந்த பிஞ்சு இதழ் முத்தம்...


அத விட வேற என்னங்க வேணும் இந்த வாழ்க்கைல ....


சொல்ல வார்த்தைகள் இல்ல...என் வாழ்வின் பெருமிதம் என் கையில்..


பொதுவான கருத்து....

பெண் பிள்ளை என தூற்றி  அவர்களை மதிக்காத பல ஜென்மகளுக்கு தெரிவதில்லை... தேடி சென்று கேட்டாலும் கிடைக்காத ஒரு பொக்கிஷம் பெண் பிள்ளைகள் என்று ....

Posted by: VenMaThI
« on: November 04, 2025, 01:17:22 AM »



பல வருட கனவை
பத்து மாதம் கருவில் சுமந்து
என்றுமே எம் கைகளில் தவழும் -
மழலை என்றொரு கவிதை...

உன் செல்ல சிணுங்கள்களை ரசித்து..
உன் பாதச்சுவடுகளை என் மாரினில் பதித்து..
அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து
என் உலகமே நீ என உரைக்கும் நொடிக்காய்...

ஏக்கங்களை தீர்த்து
மலடி என்ற பட்டம் தவிர்த்து
மார்தட்டி என் வாரிசு என உரக்க சொல்ல
கடவுளால் கடவுளையே வரமாய் கிடைக்கப் பெற்றேன்....

எந்த கவிஞனும் வர்ணிக்க முடியா இன்பம் நீ
எந்த ஓவியனும் தீட்ட முடியா அழகு நீ
மொழியின்றி வார்த்தையின்றி ஆயிரமாயிரம் அர்த்தங்களை
இலகுவாய் விளக்கும் கடவுளின் உருவம் நீ...

அழுகை என்ற ஒற்றை மொழியில்
அனைத்து தேவைகளையும் உணர்த்தவல்ல திறமைசாலி நீ.
சிரிப்பு என்ற மந்திரத்தால் - உன்னை சூழ்ந்தோரை --
தன்னை மறந்து தன் கவலையும் மறந்து சிரிக்க வைக்கும் விந்தை நீ...

செல்வதுள் செல்வம் செவிச்செல்வம் என்றவர்
மழலை செல்வத்தின் வரம் பெறாதவரோ?
சொந்தமும் செல்வமும் குவிந்து கிடப்பினும்
உலகின் பரம ஏழை மழலை பெறாதவனே

வாழ்வில் துன்பமே சூழ்ந்தாலும்
கடலென கண்ணீர் பெருகி ஓடினாலும்
கன்னத்தில் நீ பதிக்கும் உன் இதழின் முத்தம்
மனதின் காயங்களை போக்கும் மருந்தாகும்..

மலடி என்ற பட்டம் தர
காத்திருந்த பலரின் நடுவில்
அம்மா என்ற பட்டம் வழங்கி
என் வாழ்வின் வரமாய் வந்த தெய்வம் நீ

வாழ்வில் நான் கொண்ட கர்வம்நீ..
என் உதிரத்தை ஊட்டி வளர்த்த
என் உயிர் நீ
என் உறவு நீ
என் உணர்வு நீ
என் உலகம் நீ
மொத்தத்தில்...
 என் கண்ணீரை துடைக்க வந்த
என் காவல் தெய்வம் நீ ❤️❤️❤️

Posted by: Thenmozhi
« on: November 04, 2025, 12:48:26 AM »

   கன்னத்தில் நான் இட்ட முதல் முத்தம் என்               அன்னைக்கே!

நான் கண்ட முதல் தெய்வம் நீ அம்மா!
நான் தந்த முதல் முத்தம் நீ அம்மா!
நான் உணர்ந்த முதல் அன்பு நீ அம்மா!
நான் பெற்ற முதல் அரவணைப்பு நீ அம்மா!
நான் பார்த்து இரசித்த முதல் உறவு நீ அம்மா!
நான் பேசிய முதல் வார்த்தை நீ அம்மா!
நான் யாரென்று தெரியாமல் கருவில்   என்னை சுமந்தவள் நீ அம்மா!
நான் எழுதும் மூன்றெழுத்து கவிதை நீ அம்மா!
நான் பார்த்த சுயநலம் இல்லாத உறவு நீ அம்மா!

பத்து திங்கள் கருவறையில்  என்னை  சுமந்தாய்!
பகல்,இரவு பாராமல் உன் உதிரத்தை பாலாக்கி என் பசி போக்க ஊட்டினாய்!
பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து என்னை தூங்க வைக்க தாலாட்டு பாடினாய் !
பக்குவமாய் நோய் ,நொடி என்னை அண்ட விடாமல் பாதுகாத்தாய் !

என் இன்பம் ,துன்பம்,வெற்றி, தோல்வி அனைத்திலும் நீ இருப்பாய் அம்மா!
எனக்கு முதல் அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞான ஒளி ஊட்டிய ஆசான் நீ தான் அம்மா!
என் ஆசைகளை நான் சொல்லாமலே நீயாக அறிந்து நிறைவேற்றும் தெய்வம் நீ அம்மா!

நான் எவ்வளவு குறும்பு பண்ணாலும் வெறுக்காத உறவு நீ அம்மா!
நான் உணர்ந்த பாதுகாப்பான இடம் உந்தன் கரங்களில் இருந்த தருணம் தான் அம்மா!
நான் உணர்ந்த உலகில் பெரிய சக்தி நீ தான் அம்மா!

உன் அன்புக்கு நிகர் வேறுயாரும் இல்லை இவ்வுலகில்!
உன் அறுசுவை உணவுக்கு யாரும் ஈடு இணை இல்லை இவ்வுலகில்!
உன் பொன் மடி போதும் எனக்கு ஆயுள் முழுதும்!
உன்னை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை என்னால்!

அம்மா அன்பின் வடிவம்!
அம்மா ஆசை இளவரசி!
அம்மா சுயநலம் அற்றவள்!
அம்மா வெறுப்பை காட்டாத உறவு!
அம்மா மறக்க முடியாத நினைவு!
அம்மா இழக்க கூடாத உறவு!
அம்மா என் முதல் நடிகை!
அம்மா என்  முதல் இரசிகை!
அம்மா என் வழிகாட்டி!

 உன் கன்னத்தில் முதல் இட்ட முத்தம் மறக்க முடியவில்லையே!
உன் காதோரம் உன் நீண்ட கூந்தல் கதை பேசியது!
உன் நுதலில் இரு புருவங்களிடையே அழகிய பொட்டு முழுமதியாய்!
உன் ஆர கழுத்தினை என் பிஞ்சுக்கரங்களால் கட்டி அணைத்தேன்!
உன் கன்னத்தில் என்  இதழ்கள் பதித்து ஆசை முத்தமிட்டேன்!
உன் முகத்தில் புன்னகை பூத்து, உன் இதழ்கள் விரிந்து உன் கன்னத்தில் விழுந்த குழியின் அழகு சொல்லில் அடங்காது!
உனக்கு அளித்த அந்த முதல் முத்தம் என்னால் மறக்க முடியவில்லை இன்னும்!
உன்னைப் போல என்னையும் அலங்கரித்து ரசித்தாய் அந்த தருணம்!
உன்னை நான் உயிருள்ள வரை மறவேன் அம்மா!
உன் மகளாக அடுத்த ஜென்மதிலும் பிறக்கும் வரம் வேண்டும் எனக்கு!
உன் மகளாய் பிறந்த அதிக்ஷ்டசாலி தேன்மொழி!





Posted by: Forum
« on: November 03, 2025, 11:32:37 AM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 386

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்