தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 372

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 372

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

VenMaThI:


அரச மர நிழலுல எங்க அய்யாரு
அரசியலும் அனுபவமும் பேசித்தீர்த்த நேரத்துல
என் ஜோடி பசங்களோட கில்லியும் பம்பரமும்
அசராமல் ஆடித்தீர்த்த காலமது....

ஆத்துல தண்ணி மொண்டு துணி தொவைக்க
எங்க அப்பத்தா தான் போகையில...
அந்த மணல் மேட்டுல நொண்டி விளையாடி
அக்காக்களுடன் சேர்ந்து நானும்
அலங்காரம் செய்து மகிழ்ந்த காலமது...

அஞ்சு கல்லும் பல்லாங்குழியும்
பரமபதமும் கண்ணாமூச்சியும் என...
அன்றைய விளையாட்டுகள் -  எங்கள் உடலை மட்டுமல்ல
உள்ளத்தையும் ஆரோக்கியமாக்கியது...

ஆண் பெண் என்ற பாகுபாட்டின்றி
ஜாதி மத பேதமின்றி
கைகோர்த்து அனைவரும் சமமாய்
கள்ளங்கபடமின்றி சிரித்து விளையாடிய காலமது...

அய்யா உன்ற பள்ளிக்கூடத்துல தான்
எங்க பாப்பாவும் படிக்குது
போக வர சித்த பாத்துக்கோய்யா என
ஊரானூட்டு பிள்ளை அனைத்தும் தன் பிள்ளையாய் பெற்றோர் பாவித்த காலமது...

கனவிலும் கூட எண்ணிப்பார்க்காத மாறுதல்கள்
வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் குழந்தைகள்...
மண்ணில் விளையாட பிள்ளைகளை
விட மறுக்கும் பெற்றோர்கள்...
அரவணைக்க அய்யாரும் அப்பத்தாவும் இல்லாத தனிக்குடித்தன வாழ்க்கை...

அவசர நிலையில் கூட - அண்டை வீட்டில்
குழந்தையை விட யோசிக்கும் அவல நிலை..
பால்மணம்மாறா பிள்ளையின் மனதில் கூட
Good touch bad touch புகட்ட வேண்டிய கட்டாய நிலை....

அசுர வேகத்தில் வளரும் குழந்தையின் அறிவை
அணை போட்டுத்தடுக்கும் ஆன்லைன் games um
அஞ்சு நிமிஷம் குழந்தைகளுடன் பேசி சிரிக்க நேரமில்லா
பெற்றோரின் வேலை கலாச்சாரமும்..

வயதிற்கு மிஞ்சிய விஷயங்களை
தெரிந்துகொள்ள இடம் கொடுக்கும் ஊடகங்களும்
நல்லதிது கெட்டதிது என நீதிக்கதைகள் கூறி
சோரூட்ட அப்பத்தாக்கள் இல்லாத பிள்ளைகளின் தனிமை நிலைகளும்...

என்று மாறும் இந்த நிலைகள் எல்லாம்??
அனைவரும் ஒன்றென்றெண்ணி
ஆடிப்பாடி மகிழும் அந்த வசந்த காலம்....
இதோ மாறியது என்றாகுமோ????..அல்ல
விடையில்லா கேள்வியாய்த்தான் போகுமோ???

Lakshya:
மணலில் சிந்திய சிரிப்புகள்!!!

குட்டி குட்டி காலடிகள்,
ஓடி திரிந்த நாட்கள்...
மண்ணுக்குள் பதிந்த பாதங்கள்,ஓடி ஒளிந்தோம் மரக்கன்று பின்...

வட்டமாய் நின்று கைப்பிடித்து வளர்ந்த நட்பு, வானத்திலே மழை வர சொல்லி ஆடிய  நாட்கள்....

பூக்கள் போல சிரித்த முகங்கள்,பூமியின் மேல் பதிய வைத்த கதைகள்....

மண்ணில் விழுந்தபோது, கைதட்டி சிரித்தோம்... மறந்துவிட்டோம் "வலி" என்னும் வார்த்தையை...

இன்று வாழ்கையில் கோடி பொருள்,
அன்று ஒரு பந்து போதும் முகத்தில் சிரிப்பை காண...

சுண்ணாம்பு சுவரில் கை ரேகைகளும் கவிதை தான்...
தரையில் வரைந்த ஒரு வட்டத்தில்,
தரணியே நம் விளையாட்டு மைதானம்!

"வா விளையாடலாம்"!!! என்ற சொல் வாழ்க்கையின் முதல் கவிதையாக இருந்தது அந்த நாட்களில்...

நாளையை பற்றி மறந்து இன்றை நேசித்த காலங்கள், அதுவே கடைசியோ???ஒரு கல், ஒரு குச்சி அதுவே எங்கள் விளையாட்டின் பொக்கிஷம்...

வாடாத நினைவுகள்...இன்று வரை அழிக்கப்படாத ஓவியம்!!!

Thenmozhi:


மனித வாழ்க்கையின் முதன்மையான முக்கிய பருவம் குழந்தை பருவமே,
மனதில் கள்ளக்கபடம் அற்ற பருவம் அதுவே,
மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் காலமும் அதுவே,
மறக்க முடியாத பருவமும் அதுவே.

எந்த எதிர்பார்ப்பையும் கொண்டிராத உறவு தான் நட்பு,
எது நடந்தாலும் நம் கூட நிற்கும் உறவு தான் நட்பு.
என் குழந்தை பருவ நண்பர்களின் அழகான நினைவுகள்,
என் மனதில் ஆழமாக பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது.
பகிர்கிறேன், கவி வடிவில்:

புன்னகையுடன் கைகள் கோர்க்கப்பட்டன,
புரியாத பருவமான குழந்தை பருவத்தில்.
புதிது புதிதாக கண்டுபிடிப்போம் விளையாட்டுகள்,
புது யுகம் படைப்போம் என்ற எண்ணத்தில்.
பட்டம் ஏற்றி பறக்க விட்டு,
பாரதூரம் போகும் என்று,
பார்த்திருப்போம் வேடிக்கையாக,
பரிதாபமாக பட்டம் விட்ட இடத்திலேயே விழுந்ததை எண்ணி மகிழ்வோம்.

பந்து அடிப்போம், “பாலா, ஓடி வா!” என்று,
பாய்ந்து பாய்ந்து பந்தடித்து மகிழ்ந்தோம்.
சண்டைகள், சச்சரவுகள் உலாவினாலும்,
சமாதானமாய் போயிடுவோம் இறுதியில், நண்பர்கள் என்ற உறுதியில்.

கண்ணாமூச்சி, கபடி,
திருடன்-பொலிஸ் என்று,
எண்ணில் அடங்கா விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்ந்தோம், நண்பர்களாக.
கூட்டாஞ்சோறு ஆக்கி, கூடி உண்டு மகிழ்ந்த காலம் அது அல்லவா?

திருட்டுத்தனமாய் இனிப்புகளை உண்டு,
திருந்தாத பிள்ளைகள் என,
திட்டுகள் பல விருதுகளாய் பெற்றும்,
தித்திப்பாக குறும்புகள் செய்து,
திமிராக நடந்து சென்ற நினைவுகள்,
என் மனதில் நீங்காத நினைவுகளில்.
அன்று நாம் நண்பர்களாய் கோர்த்த கரங்கள்,
இன்று உறுதி அதிகரித்தே நிற்கிறது.

விடிகின்ற வேளையில், அடி வானில் ஒரு விடிவெள்ளி,
கொடிகட்டும் இறுதி வரை,
நம் நட்பு கைகள் கோர்த்து தொடரும் என்று.

Yazhini:
பிஞ்சு உள்ளங்களின் உலகம்தான்
எத்துனை அழகானது !
சிரிப்பு அழுகை சண்டை
என உணர்வுகளின் கூடாரம் அது.

விளையாட்டில் சலிக்காத பொழுதுகள்
கைக்கோர்த்து விளையாடுகையில் விரியும் உலகம்
இங்கே கடிகாரம் சுழலாது
அவர்களின் சிறு பிரபஞ்சமே சுழலும்.

சுட்டெரிக்கும் வெயிலும் சுடுவதில்லை
கொட்டும் மழையும் குளிர்வதில்லை
வெயிலும் மழையும் விளையாட்டின் அங்கம்.
இங்கு கூர்மையான கற்கள்கூட
காலை குத்துவதில்லை.

புளியங்காயும் காக்காகடி மாங்காயும்
பசித்தீர்க்கும் பண்டங்கள்.
அடிக்குழாய், கிணறு, ஓடை
தாகத்தைத் தீர்க்கும் நண்பர்கள்.
விளையாடுகையில் படும் காயங்கள்
வீரத்தைப் பறைசாற்றும் சின்னங்கள்.

விளையாடுகையில்...
புல்வெளியில் புள்ளினங்களாக
தாவிகுதிக்கும் மானினங்களாக
சிரிக்கும் மத்தாப்புகளாக
சேட்டைகளில் வானரமாக
உவகைக்கொள்ளும் குழந்தை மனது...

( அகவை விளையாட்டுக்கு
 தேவை இல்லை 🥳🥳🥳 )

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version