பேராசை பெரு நட்டம்
அது ஒரு பெரிய நகரம்.
அந்த நகரத்தில் அவர் ஒரு பெரிய பணக்காரர்.
பணத்தை எந்த வழியில் தேடலாம் என்று ஓயாமல் யோசித்துக்
கொண்டே இருப்பார்.
ஏழைகளுக்காக ஒரு சதத்தைக்கூட செலவு செய்ய மாட்டார்.
தன்னிடம் வேலைக்கு வரும் தொழிலாளிகளுக்குச் சம்பளத்தைக் கூட சரியாகக் கொடுக்கமாட்டார்.
யாருக்காகவும் இரங்க மாட்டார்.
தனது பணத்தை அநியாய வட்டிக்குக் கொடுத்துப் பணம் சம்பாதிப்பார்.
ஒருநாள் பத்தாயிரம் ரூபா பணத்தை ஒரு பையிலே போட்டுக் கவனமாக எடுத்துச் சென்றார்.
எப்படியோ அவரது பணப்பை தொலைந்துவிட்டது.
எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார்.
கிடைக்கவில்லை.
மிகவும் கவலைப்பட்டார்.
ஒரு சதத்தைக்கூட இழக்க விரும்பாத அவர், பத்தாயிரம் ரூபா பணத்தை இழந்தால், அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்வாரா?
தொலைந்த பணத்தை மீட்டெடுக்க என்னவழி என்று யோசித்தார். ஒரு பத்திரிகை அலுவலகத்திற்குப் போனார்.
தனது பையைக் கொண்டுவந்து கொடுப்பவருக்கு ஆயிரம் ரூபா கொடுப்பதாக விளம்பரம் செய்தார்.
நேர்மையாக உழைத்து வாழும் ஒரு சாதாரண ஏழைக் கூலித் தொழிலாளி அவரது பணப்பையைக் கண்டெடுத்தான்.
பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து, அவரது விலாசத்திற்குத் தேடிச் சென்று, பணப்பையைக் கொடுத்தான்.
அவர் பரபரப்போடு அவசர அவசரமாக அந்தப் பணப் பையைத் திறந்து பார்த்தார்.
பணம் சரியாக இருந்தது.
மகிழ்ச்சியடைந்தார்.
ஆனால் விளம்பரப்படி ஆயிரம் ரூபாவை அந்த ஏழையிடம் கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை.
அவனை எப்படி விரட்டியடிக்கலாம் என்று யோசித்தார்.
தனது பையிலே இருபதாயிரம் ரூபா இருந்ததாகவும் அதில் பத்தாயிரம் ரூபாவைக் காணவில்லை என்றும், அந்த ஏழைத் தொழிலாளியை மிரட்டினார்.
அப்படி மிரட்டினால் அவன் பணம் வாங்காமல் ஓடிவிடுவான் என்று நினைத்தார்.
ஆனால் அந்த ஏழைத் தொழிலாளி பயந்து ஓடவில்லை.
அவன் மிகவும் நேர்மையானவன்.
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவன்.
உழைத்து வாழவேண்டும் என்ற மனஉறுதி கொண்டவன்.
தன்னைக் கள்வன் என்று அவர் குற்றஞ்சாட்டுவதை அவனால் தாங்க முடியவில்லை.
தான் பையைத் திறந்து கூடப் பார்க்கவில்லை, என்று சத்தியஞ் செய்தான்.
அவர் காவல்த் துறையினரிடம் (பொலிஸில்) முறைப்பாடு செய்தார். அந்த ஏழைத் தொழிலாளி மிகவும் வருந்தினான்.
காவல்த் துறையினர் அவர்களை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். நீதிபதி விசாரித்துப் பார்த்தார்.
பணக்கார மனிதர் இரண்டு கள்ளச் சாட்சிகளையும் தயார்ப்படுத்திக் கொண்டு வந்திருந்தார்.
அவர்கள், பணப்பையில் இருபதாயிரம் ரூபா இருந்ததைத் தாம் கண்டதாகக் கூறினர்.
நீதிபதிக்கு உண்மை விளங்கிவிட்டது.
நீதிபதி கூறினார்.
“நீங்கள் பெரிய மனிதர் போலக் காணப்படுகிறீர்கள். சாட்சிகளையும் அழைத்து வந்துள்ளீர்கள். அதனால் நீங்கள் பொய் சொல்வதாகக் கருத முடியவில்லை...."
நீதிபதி சொல்லிக் கொண்டு போக அந்தப் பணக்காரருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நீதிபதி தொடர்ந்து,
“ஆனால் இந்த ஏழைத் தொழிலாளிக்கு, பொய் சொல்ல வேண்டிய தேவை சிறிதளவும் இல்லை.
அதனால் இந்தப் பணப்பை உங்களுடையதாக இருக்க முடியாது. எனவே நீங்கள் உங்கள் பணப்பை இன்னும் கிடைக்கவில்லை என்று மீண்டும் விளம்பரஞ் செய்யுங்கள்" என்று தீர்ப்புச் சொன்னார்.
அந்தப் பணக்காரர் பதறிப் போய் விட்டார்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என வருந்தினார்.
அவருக்கு வேறு வழி தெரியவில்லை.
தனது பணம் கிடைக்க இனி வாய்ப்பே இல்லை என்று நினைத்தார்.
உண்மையை ஒப்புக் கொண்டார்.
பொய் வழக்கையும் அதற்கு இரண்டு சாட்சிகளையும் தயார் செய்ததற்காக அந்தப் பணக்காரர் ஐயாயிரம் ரூபா தண்டப் பணமாக நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி கட்டளையிட்டார். ஏழைத் தொழிலாளியின் நேர்மையைப் பாராட்டி அந்தப் பத்தாயிரம் ரூபா பணத்தையும் அவனுக்கே வழங்கினார்.