Author Topic: தன்னம்பிக்கை இழந்த கிளி  (Read 669 times)

Offline Thooriga

மிகப் பெரிய பேரரசர் ஒருவருக்கு, சீன நாட்டு அறிஞர் ஒருவர் இரண்டு பஞ்சவர்ணக் கிளிக்குஞ்சுகளை பரிசளித்தார். பஞ்சவர்ணக் கிளியை, அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதுவர் என்பதால், பேரரசர் அகமகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டார்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தார் பேரரசர்.

“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையைவிட்டு நகர மறுக்கிறது” என்று கூறினார் பயிற்சியாளர்.

உடனே பேரரசர், தனது நாட்டில் உள்ள புகழ்பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து, பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டார்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் எந்தக் குறையுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

“இதற்கு என்ன ஆயிற்று, ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலைசெய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார் பேரரசர்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தார் பேரரசருக்கு ஒரே மகிழ்ச்சி.. “இந்த அற்புதத்தைச் செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றார்.

அந்த விவசாயி பேரரசர் முன்பு வந்து பணிந்து நின்றார்.

“எல்லாரும் முயற்சிசெய்து தோற்றுவிட்ட நிலையில், நீ மட்டும் கிளியை எப்படி பறக்கச் செய்தாய்?” என பேரரசர் கேட்டார்.

பேரரசரை வணங்கியபடியே விவசாயி சொன்னார்,  “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்று சொன்னார்.

இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நாம், நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவார். அது நமது நன்மைக்கே, நம் சக்தியை, ஆற்றலை, நாம் உணரவேண்டும் என்பதற்காகவே.

Offline Clown King

Re: தன்னம்பிக்கை இழந்த கிளி
« Reply #1 on: December 03, 2024, 08:47:01 PM »
arumai