இவ்வுலகின் ஓர் அங்கமாய் பிறப்பெடுத்த
மழலையே! வா! என் வண்ண மலரே! வா!
இங்கே,
பிறருக்கு தீங்கு இழைக்கா, எண்ண கொண்ட
வெள்ளை மனம் படைத்தவர்களும் உண்டு
இங்கே,
தான் மட்டுமே, வாழ உரிமையுடையவரென..
குறுகிய சிறு மனம் படைத்தவர்களும் உண்டு..
நீயே,
அன்னாரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு..
நல்லோர் யார்,.. தீயோர் யாரென தெளிவாய் கண்ணே!
இவ்வையகத்தின் விதிப்படி புதிதாய் முளைத்த..
குழவியே! வா! என் மிருதுவான தளிரே! வா!
இங்கே,
பாசத்தை பாரபட்சமின்றி அள்ளி அள்ளி வழங்கும்
அட்சய பாத்திர மனம் படைத்தவர்களும் உண்டு..
இங்கே,
பார்வையாலே நம்மை பிணவறைக்கு வழியனுப்பும்
அடங்க அசுர மனம் படைத்தவர்களும் உண்டு..
நீயே,
அன்னாரின், பேச்சின் மொழிநடை புரிந்து கொண்டு..
பாசம் எது... வெளிவேசம் எதுவென அறிவாய் அமுதே!
இப்பூலோகத்தின் அழகை, மேலும் அழகூட்ட உதித்த..
சேயே! வா! என் குளிர் முழு வெண் நிலவே! வா!
இங்கே,
உடன் வாழ் உயிரினங்களுக்கு, நன்மைகள் பல செய்யும்..
விரிந்து பரந்த மனம் கொண்டோர், சிலர் உண்டு..
இங்கே,
உனக்காக நான் இருக்கிறேன், என போலி நம்பிக்கை கொடுக்கும்,
சுயநலம் பிடித்த மனம் கொண்டோரும் உண்டு.
நீயே,
அன்னாரின், உடல் மொழிநடை, நன்கு புரிந்து கொண்டு..
தெய்வகுணம் எது... பேய்க்குணம் எதுவென அறிவாய் சொர்ணமே!
குழந்தாய்!
நன்மைகளும் தீமைகளும் நிறைந்ததே.. இப்பூமி
அதில் நீ செவ்வனே வாழ, நீயே கற்றுக்கொள்..
தேவதையே!
யாரோ ஒருவர்.. கைகொடுத்து காப்பர் என நம்பாதே..
உன் அறிவெனும் புத்தி கூர்மையால், நீயே உலகறிவாய்!
பொன்னே!
உன்னை காக்கும் கை, உன் அறிவாக இருக்கட்டும்
உன்னை காக்கும் கை, உன் அனுபவமாக இருக்கட்டும்
தங்கமே!
உன்னை நம்பி உன் இரு கரம் வீசி வீர நடை போடு..
உலகமே!! அழகாகும் உன் விசால .பார்வையிலே..