Author Topic: ♥மீண்டும் ஒருமுறை!  (Read 168 times)

Offline MysteRy

♥மீண்டும் ஒருமுறை!
« on: March 09, 2025, 09:32:45 PM »


♥மீண்டும் ஒருமுறை!

♥கடைசியாக ஒரு தடவை மலையைப் பார்க்க ஆசைப்பட்டாள் கோகிலா. வண்டி வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. மலையைப் பார்க்க ரொம்பத் தூரமெல்லாம் நடக்க வேண்டியதில்லை. கொல்லைப் பக்கம் கதவைத் திறந்தால் மலைதான். வேலுவுக்கு ஏனோ அந்த மலை என்றால் ரொம்ப விருப்பம். மலை என்று இல்லை... இயற்கையின் எந்த அம்சமுமே அழகுதான் என்பது அவன் எண்ணம். 20 கி.மீ., தள்ளி இருந்த கூட்டுறவு வங்கியில், அவன் டப்திரியாக வேலை பார்த்தாலும் இந்த கிராமத்து வீட்டை அவனால் விட முடியவில்லை. அதற்கு, வீட்டின் பின்னால் படர்ந்திருந்த மலையும், அவன் மனதறிந்து அந்த வீட்டிலேயே இருக்கலாம் என்று புன்னகையுடன் சம்மதம் சொன்ன கோகிலாவும் காரணம்.

♥"இதென்னடி பொண்ணே, கூறு கெட்டவளா இருக்கிற... என்னடி இருக்கு இந்த பட்டிக்காட்டுல? அவன்தான் சின்னப் பையனைப் போல மல, செடின்னு சுத்தறான்னா, நீயாவது பொறுப்பா இருக்க வேணாவா? பட்டணத்துல, டவுனுல குடித்தனம் இருந்துச் சுன்னா நீயும் போனு கம்பெனி, சாம்பு கம்பெனின்னு வேலைக்குப் போவலாம். இந்த நாட்டுப் புறத்துல ஓணானையும், கரட்டானையும் தவிர, என்னடி இருக்குது கிறுக்கச்சி?' என்று மாமியார் கூட சொன்னாள்.

♥ஆனால், அவள் மென்மையாக, "இல்லத்தே... பணம், காசு எல்லாம் வரும், போகும். இந்த மாதிரி இயற்கையை பாத்துக்கிட்டே வாழுற வாழ்க்கை எல்லாருக்கும் கெடைக்காது அத்தே... எனக்கு, அவரு சந்தோசமா இருக்கணும்; அவருக்கு, நான் சந்தோசமா இருக்கணும்; அவ்வளவுதான்...' என்ற போது, மாமியார் உதட்டைச் சுழித்தாள்.
ஆனால், அவளை பூப்போல் அணைத்துக் கொண்டான் வேலு. "இந்த மாதிரி பொண்டாட்டி எத்தனை பேருக்கு கிடைப்பா? நான் கொடுத்து வெச்சிருக்கேண்டி தங்கம்...' என்று அவன் சொன்ன போது, எந்தப் பாறை மனதும் நினைத்திருக்காது, இரண்டே வருடங்களில் அவன் மரணத்தைத் தழுவப் போகிறான் என்று!

♥வண்டி வந்து விட்டது. அம்மா, மாமியார், தட்டுமுட்டு சாமான்கள், வேலு வளர்த்த தொட்டிச் செடிகள் என்று எல்லாம் ஏறிய பிறகு, கடைசியாக அவள் ஏறினாள்.
மலையை பார்க்க முடியாமல், விழிகளில் நீர் கொட்டியது. பதிலுக்கு அதுவும் காற்றை நிறுத்தி, துக்கம் அனுசரிப்பதைப் போலிருந்தது. பிரியமான ஒன்று நம்மை விட்டுப் போகும் போது, அதனுடன் சேர்ந்து, ஓராயிரம் இனிமைகளும் நம்மை விட்டுப் போய் விடும் என்று தோன்றியது. குரூரமான வாழ்வின் விதிகளை அனுசரித்து, கண்ணீரின் துணையுடன் நாட்களைத் தள்ளுவது ஒன்றுதான் பேதைப் பெண்களுக்கு வாய்த்த தலையெழுத்து... அய்யோ!

♥""அழுவாதே கோகிலா... அழுது அழுது நீ குச்சியாயிட்ட... உன் முகத்துல, 10 வயசு கூடிப் போச்சும்மா... இப்படி அல்பாயுசுல போயிடுவான்னு தெரிஞ்சிருந்தா, அவனுக்கு கல்யாணம் காட்சின்னு எந்த எளவையும் செஞ்சிருக்க மாட்டேனே,'' என்று மாமியார் அழுத போது, அம்மா குறுக்கிட்டாள்.
""அழுது என்ன ஆவப் போகுதுங்க மதனி? ஆகுற வேலையப் பாப்போம். இவள உடனே வேலைக்கு வந்து சேரச் சொல்லி ஆர்டரு வந்துதே... அத நெனச்சு மனச தேத்திக்குவோம் மதனி... நாம மூணு பேரும் இனி ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருந்துக்குவோம்.''

♥கண்ணெதிரில் மலை மறைவதைப் பார்த்தாள் கோகிலா . உள்ளே அமிலம் போல ஏதோ சுரந்தது. என்ன குற்றம் செய்தேன் என்று என்னை துரத்துகிறாய் என்ற கேவல் எழுந்தது.
மாமியாரும், அம்மாவும் பதறிப் போனவர்களாக அவள் கையைப் பற்றிக் கொண்டனர்.
""எல்லாம் நல்லதுக்குன்னு நெனச்சுக்குவோம் புள்ள... கவருமெண்டு வேலயக் கொடுத்துட்டு போய் சேர்ந்திருக்கான் புருசன். நோய்ல கெடக்குற மாமியாரு, காலு வெளங்காத அம்மாக்காரி... மாரியாத்தா மாதிரி நீதான் புள்ள கவனிச்சுக்கப் போகுற. நல்லபடியா வேல கத்துக்கிட்டு, மான மரியாதையா பொழச்சுக்க தாயி,'' என்ற போது, அவள் முதுகு தானாக நிமிர்ந்து உட்கார்ந்தது.
கண்கள் உயர்ந்தன.

♥என்ன அழகான சூரியன்... சுற்றுவதே தெரியாமல் என்ன அழகாய் சுற்றுகிறது!
அதோ... அந்த வாத மரத்தின் பெரிய பச்சை இலைகளின் மேல் ஒரு அண்டங்காக்கை உட்கார்ந்திருப்பது கூட புகைப்படம் மாதிரிதான் இருக்கிறது. எதை நம்பி இந்த காகமும், இலையும் வாழ்கிறதோ அதை நம்பியே அவளும், அந்த முதிய ஜீவன்களும் வாழ்ந்துவிட முடியாதா என்ன!
ஆனால்...

♥உலகம் வேறு உருவில் இருந்ததை அடுத்த நாளே உணர்கிற மாதிரி ஆகி விட்டது.
""நீதானாம்மா கோகிலா... இவ்வளவு சின்னப் பொண்ணா இருக்குறீயே? அதுவும் நல்லதுக்குதான்,'' என்று வெற்றிலைச் சிவப்புடன் சிரித்த தங்கப்பன் மேனேஜரை அவள் அச்சத்துடன் பார்த்தாள்.
உமிழ்நீரை விழுங்கியபடி, ""எங்க வீட்டுக்காரரு உங்களப் பத்தி அடிக்கடி சொல்லுவாருங்க சார், ரொம்ப நல்ல மனுசருன்னு,'' என்று அப்போதைக்கு தோன்றியதை சொல்லி வைத்தாள்.
""யாரு நானா?'' என்று பித்தளைச் சிரிப்பு சிரித்தான் தங்கப்பன். ""எல்லா மனுசங்களும் நல்ல வங்கதான், சந்தர்ப்பம் கிடைக்காத வரை... இப்பத் தானே அப்படி ஒண்ணு கெடச்சிருக்குது... பாக்கலாம் பாக்கலாம்.''

♥பசுபதி தானாக வந்தான். ""பாவம் வேலு... வாட்ட சாட்டமா அய்யனாரு மாதிரியில்ல இருந்தான். இப்படி லாரிக்காரன் வந்து அடிச்சிட்டுப் போவான்னு யாரு நெனச்சது. எப்படிம்மா தங்கச்சி இதை தாங்கிக்கிட்ட? கவலைப்படாதம்மா... என்ன தேவைன்னாலும் ஒரு கொரல் கொடு, ஓடியாந்துடறேன்,'' என்று அவன் சொன்ன போது, கண்களில் வழிந்த காமத்தை அவள் உணர்ந்தாள். உடல், நனைந்த கொடி போல நடுங்கியது.

♥""ஏம்மா... எப்பவும் பழசையே நெனச்சுக்கிட்டிருக்கிற... மாண்டவன் மீண்டதா சரித்திரம் இருக்கா? அடுத்து என்ன... அடுத்து என்னன்னு போய்கிட்டே இருக்கணும்மா... துள்ளிக் குதிக்கிற வயசு உனக்கு... ஒரு வார்த்தை சொல்லு, செய்ய வேண்டியத செய்து புடுவோம்,'' என்று மீசையில் கை வைத்தபடி நைச்சியமாகப் பேசிய ஏகாம்பரத்தை பரிதாபத்துடன் பார்த்தாள்.

♥அய்யோ அய்யோ... இது என்ன உலகம்! மானத்தோடு வாழ நினைக்கும் பெண்ணுக்கு, அரசாங்கம் வேலை கொடுக்கிறது; ஈர நெஞ்ச உறவுகளும் கை கொடுக்கின்றன. மனமும், இழப்பை ஏற்று, விதியுடன் போராட தயாராகிறது. ஆனால், இந்த ஆணுலகம் ஏன் இவ்வளவு குரூரமாக பெண்ணின் ஆடைகளையே உரித்துப் பார்க்கத் துடிக்கிறது? பேதைப் பெண் என்றால், என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று யார் உரிமை கொடுத்தனர் இவர்களுக்கு? அய்யோ... என் தெய்வமே... ஏன் என்னை விட்டுப் போனாய்? எப்படி மனம் வந்து இந்த கொடிய காட்டில் என்னை நிறுத்திவிட்டுப் போனாய்? காதலும், அன்பும், அனுசரணையும் தவிர, எதுவும் தெரியாத என்னை எதற்காக இந்த கொடியவர்களின் கூடாரங்களில் துடிக்க வைத்துப் போனாய்?
""அத்தே... அம்மா...'' என்று பலகீனமான குரலில் அழைத்தாள்.

♥புதுகுடித்தனத் திற்காக கொடி கட்டிக் கொண்டிருந்த அம்மாவும், அரிசியைக் கழுவிக் கொண்டிருந்த மாமியாரும் ஓடி வந்தனர்.
""என்னம்மா... என்ன என்ன?'' என்று பரபரத்தனர்.
""பிடிக்கலம்மா...'' என்றாள் உதடு துடிக்க. ""எல்லாரும் தப்பானவங்கம்மா... எந்தக் கண்ணிலயும் கண்ணியம் இல்ல... எந்த பார்வையிலயும் இரக்கம் இல்ல... எப்படா இவள வளைக்கலாம்... எப்படி வளைக்கலாம்னே இருக்காங்க. வேணாம்மா... வேணாம் அத்தே... இந்த வேலயே வேணாம்,'' என்றவள் கதறி விட்டாள்.

♥முதிய முகங்கள் ஒன்றை ஒன்று அச்சத்துடன் பார்த்துக் கொண்டன.
""அரசாங்க வேலை, அரசாங்க வேலைன்னு ஓடி வந்ததுக்கு நமக்கு வேணும். மறுபடி கிராமத்துக்கே போயிடலாம். மலயும், வயலும், கழனியும் அரை வேளை கஞ்சியாவது ஊத்தும் நமக்கு. போயிடலாம்... இங்க யாரையும் மாத்த முடியாது. எல்லாருமே போக்கிரிகள்... அய்யோ...'' அவள் விம்மி அழுதாள்.

♥""இதென்ன கலரு கோகிலா... வெங்காய கலரு இல்ல! டாப்பா இருக்குதே... அதுலயும் உனக்கு சூப்பரா இருக்குது கோகிலா... வெங்காயம்னாலே எப்பவும் டிமாண்டுதான்,'' என்று, பசுபதி அவள் கழுத்திற்குக் கீழே பார்வையை இறக்கிய போது உடல் நடுநடுங்கியது.
""அக்கா...'' என்று குரல் கேட்டது.
பசுபதி நகர்ந்தான்; அவள் திரும்பினாள்.
இளையவன் ஒருவன் நின்றிருந்தான். கரிய, ஒல்லிய உருவம். முகத்தின் அணி போல புன்னகை. கையில் ஒரு பழைய சில்வர் டப்பா.

♥""அக்கான்னா கூப்பிட்டே... யாருப்பா நீ?'' என்றாள் திகைத்து.
""ஆமாக்கா... துப்புரவு செய்யறாங்களே நாகம்மா, அவங்களோட பையன். என் பேரு டில்லிபாபு. பத்தாம் வகுப்புல முதலாவதா வந்திருக்கேன்கா. மூணு சப்ஜெக்ட்டுல... அம்மா வீட்டுல கடலை உருண்டை பண்ணிச்சு... கொடுக்க சொல்லிச்சு,'' என்று மலர்ச்சியுடன் அவன் இனிப்புகளை நீட்டினான்.
என்னது?
நாகம்மாவின் மகனா... மாவட்டத்தில் முதலிடமா!
அன்று நாகம்மாவின் வீட்டின் வழியாக வந்தது நினைவுக்கு வந்தது.
வாழ்வின் விளிம்பில் இருக்கும் மனிதர்களை, நகரின் விளிம்பில் வைத்திருக்கும் காலனி அது. நகரை துப்புரவாக வைத்திருக்கும் மக்கள், பன்றிகளுடன், கழிவுகளுடன், தெருநாய்களுடன் வாழ சபிக்கப்பட்ட இடம். நாகம்மாவின் வீடு, அதிலும் சாராயக் கடைக்கும், சாக்கடைக்கும் நடுவில் ஒடுங்கி இருந்ததை அவள் வேதனையுடன் கவனித்திருந்தாள்.

♥அந்த வீட்டில் இருந்து படித்தா இவன் விண்ணைத் தொட்டிருக்கிறான்!
""இனிப்பு மட்டும் இல்லப்பா... உன் திறமையும் அபாரம். எப்படிப்பா தம்பி... அந்த வீட்டில் இருந்து கொண்டு ஒரு பாட்டு கூட கேக்க முடியாதே?'' என்றாள் நம்ப முடியாத திகைப்புடன்.
""அம்மா சொல்லும் அக்கா... ஊரை மாத்த முடியாது; உன்னைத்தான் மாத்திக்கணும்ன்னு... உண்மைதானே! தெரு வெளிச்சம், மொட்டை மாடி, நூலகம்ன்னு படிச்சுக்குவேன். நான் வரேன்கா!''
அவள் இமைகள் படபடத்தன.
என்ன சொன்னான்... யாரையும் மாற்ற முடியாது என்றா... நம்மை மாற்றிக் கொள்வதுதான் ஒரே வழி என்றா... அப்படி மாற்றிக் கொள்ளும் போது, வெற்றிகள் கூட சாத்தியம் என்றா?

♥""அட... கோகிலா...'' என்றபடி ஏகாம்பரம் வந்தார். ""இவ்வளவு அழகான கையெழுத்தா உனக்கு? வேற என்னல்லாம் வெச்சுருக்கிற, ரகசியமா?''
""சொல்லட்டுமா?''
""சொல்லு சொல்லு...'' உமிழ்நீர் வடிந்தது.
""களத்து மேட்டுல போரடிச்ச வலுவான கை வெச்சிருக்கேன்... கோழிக் குழம்புக்காக கழுத்தை திருகின விரல் வெச்சிருக்கேன்... பாறைய மோதி மோதி மலையில நடந்த கால்கள் வெச்சிருக்கேன்... அப்புறம், தப்புகளைப் பார்த்தா தட்டிக் கேட்குற மன உறுதிய வெச்சிருக்கேன்... போதுமா சார்?''
முகம் செத்து, நடை தளர்ந்து, ஒரு மிருகம் திரும்பிப் போனது.
அவள் விழிகளில் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன.