எங்கள் வீட்டின் செடிகளின் நடுவே ஒரு புறா முட்டையிட்டிருந்தது. எனக்கு புறா என்றால் பிடிக்காது, ஒவ்வொரு வாரமும் வீட்டின் பால்கனியை சுத்தப் படுத்துவோர்க்கு புறாவை கண்டிப்பாக பிடிக்காது. அது மோதியின் ஸ்வச்ச பாரத் எப்பவும் எதிரி. எங்கும் எச்சம் இட்டு அசுத்தபடுத்திக் கொண்டே இருக்கும். எனவே என் பரம் எதிரி.
நான் தான் முதலில் அதை பார்த்தேன். ஆனால் ஜைன மதத்தை சேர்ந்தவன் என்பதால் அதை தூக்கு எறிய முடியாது. வேறு யாரிடமும் சொல்லி அதை வேறெங்காவது அப்புற படுத்தி விட நினைத்தேன். ஆனால் என் மனைவி பிடிவாதமாக மறுத்து விட்டாள். யாராவது அந்த முட்டையை தொட்டு விட்டால் அது குஞ்சு பொறிக்காது என்று வாதிட்டாள்.
பிறகு என்ன அந்த பெண் புறா வந்து அழகாக அந்த முட்டையின் மேல் அமர்ந்து கொண்டது. அனைவருக்கும் அங்கே போக 144 தடை உத்தரவு போட்டு விட்டாள். தினமும் காலை எழுந்தது முதல் அங்கே ஒரு பார்வை பார்த்தபடி இருந்தாள். தினமும் புறா புராணம் எங்கள் வீட்டில், அந்த புறா தண்ணீர் குடிக்கவில்லை, ஏதும் உண்ணவில்லை என்ன செய்வது.
3 வது நாளில் இருந்து எனக்கும் ஆர்வமும் பரிதாபமும் வர, நானும் எட்டி பார்த்து கொண்டே இருந்தேன். ஆச்சரியமாக இருந்தது, ஒரே இடத்தில் நாள் கணக்காக உணவோ நீரோ இன்றி எப்படி, இதுதான் தாய்மையோ, பெண்களுக்கு மட்டும் எங்கிருந்து இத்தனை மன உறுதி, கட்டுப்பாடு வந்து விடுகிறது.
அடுத்த 6வது நாளில் நாங்கள் பால்கனிக்கு போனபோது அது பயப்படவில்லை. அது பார்த்த பார்வையில் என்னை தொந்திரவு செய்யாதீர்கள் என்று சொன்னது போல இருந்த்து. எங்களுக்கு ஒரு மகள் இருந்திருந்தால், இப்போதோ இன்னும் சில வருடங்களிலோ இப்படிதான் குழந்தை பிறப்பிற்க்காக வந்திருப்பாளோ என எனக்கு தோன்றியது. என் மனைவியோ அதை எங்கள் மகளாக ஏற்கனவே முடிவு செய்து விட்டாள்.
அதன் அருகில் அவள் போனபோதும் அது அமைதியாக அமர்ந்திருந்தது. ஒரு தட்டில் சிறிது கம்பு, கேழ்வரகு, ஒரு கிண்ணத்தில் சிறிது குடி நீர், அதை சுற்றி அட்டையில் வெயிலோ, குளிரோ படாத வண்ணம் ஏற்பாடு செய்து விட்டாள்.
ஆனால் அந்த புறா எதையும் சாப்பிடாமல் தவமாய் அமர்ந்திருந்த்து. சுமார் 21 நாட்கள் நேற்று காலை பார்த்தபோது இரண்டு குஞ்சுகள் அசைவின்றி இருந்தன. எங்களுக்கு பதட்டம், என்னாயிற்று குஞ்சுகள் ஏன் அவைவற்று கிடக்கின்றன? என்ன செய்வது. வேலைக்கார அம்மா பார்த்து விட்டு எதுவும் புரியவில்லை என்றாள். அது உயிரோடு இருக்கிறாதா என்றும் சந்தேகப்பட்டாள். அய்யோ அந்த புறா என்ன பாடு படும்,
இத்தணை நாள் தவமிருந்து கடைசியில் இப்படி ஆகிவிட்டதே, இந்த புறாவையும் காணோம். ஒரு வேளை விரக்தியில் எங்கும் போய்விட்ட்தோ? மனம் பரிதவித்த்து. சுமார் 10 நிமிடத்தில் எங்கோ போன தாய் பறவை வந்து அமர்ந்ததும் சிறிது சிறிதாக குஞ்சுகள் அசைய தொடங்கின.
ஆஹா என்னவென்று சொல்வது அந்த தருணத்தை, எங்களுக்கும் உயிர் வந்த்தை போல, என் மனைவியின் கண்களில் ஆனந்த கண்ணீர். எனக்கோ ஏதும் பேச்சில்லை.
பறவைகளோ, மிருகமோ, மனித இனமோ, பெண்களின் தவ வலிமைக்கும், உறுதிக்கும், தன் குழந்தைகளுக்காக எதுவும் ஏற்கும் மன திடமும், கண்டிப்பாக எந்த ஆணிடத்திலும் இருக்க முடியாது. காட்டுக்குள் சென்று தவமிருக்கும் முனிவர்களை விடவும் பெண்கள் மேலானவர்களே. வணங்க தகுதியானவர்களே.
இதுவரை இருந்த ஆண் என்ற அகம்பாவம் இன்று ஒரு சிறிய பெண் புறாவின் மூலம் பொடி பொடியானது. மகளீர் தினத்துக்கு வாழ்த்து சொல்வதில் ஒரு பயனும் இல்லை, ஆனால் அவளின் வலிகளை நாம் ஏற்க முடியாவிட்டாலும், அந்த நேரத்தில் ஆதரவாக இருந்தால் போதுமே, பெண்கள் எதையும் சாதிப்பார்களே.
உறுதி ஏற்ப்போம் நண்பர்களே, சிறு சிறு உதவிகள் ஆதரவாய் சில வார்த்தை, நம் பெண் இனத்தை போற்றுவோம். மதிப்போம்.
பின்னனியில் யேசுதாஸின் குரலில், இளையராஜாவின் இசையில் " ஒரு பெண் புறா, கண்ணீரில் தள்ளாட, என் உள்ளம் திண்டாட, என்ன வாழ்கையோ? ...." ஒலித்து கொண்டே இருந்தது.